அப்படிபட்ட ஒரு கலந்தாய்வில் முடிவு எட்டப்படாத பிரச்சனை ஒன்றிற்காக அதுவரை அமைதியாக இருந்த பிரனீத் தன்னுடைய தீர்வை முன்வைத்தான். அது எவ்வாறு உதவும் என்று திறம்பட விளக்கி கூறினான். அவருடைய தீர்வு மிகவும் சரியாகத் தோன்றியது ஆயினும் அதனைச் செயல்படுத்திப் பார்த்த பின்னரே உறுதியாகக் கூற முடியும் என்று எண்ணியவளின் கவனம் தானாகவே அவன் மேல் படிந்தது.
பிரனீத்தின் அந்த அமைதியான சுபாவம் மறுபடியும் அவளை அவன் பால் ஈர்த்தது. அமைதியும், ஆளுமையும் கலந்த பிரனீத்தை வைத்த கண் எடுக்காமல் பார்க்க ஆரம்பித்தாள். சதைப்பற்று அதிகம் தெரியாத அவனது கன்னங்கள், சரும நிறம் வெளிர் நிறம் தான். ஒல்லி போலத் தெரிந்தாலும் மெலிவானவன் அல்ல. அவன் அலட்சியமாய் நிற்பதிலேயே ஒரு கம்பீரம் தெரிந்தது.
இவன் ஒல்லியாய் இருக்கிறதுனால வளர்த்தியாகத் தெரிகிறான் போல? என்று அவனை ஆழ்ந்து கவனித்தவளாய் ஆலிஸ் முதலில் நினைக்க, அவன் அருகாமையில் நிற்கும் மற்ற ஆண்களை விடவும் உயரமாய் இருப்பது அவளின் கண்களில் பட்டது.
தன்னையும் அவனையும் ஒப்பிட ஆரம்பித்தவள் மறுபடி அவனது அமைதியான குணத்தில் வந்தே நின்றாள்.
அவளுக்கோ அமைதியாகப் பேசவே தெரியாது.விளையாட்டோ வேலையோ மற்றவரிடம் பேசும்போது எல்லாம் மட்டும் எட்டூருக்கு கேட்கும் அளவிற்கு அவளது வாய் கிழியும். எதுவும் வேலையில் ஆழ்ந்திருந்தாலோ, தூங்கும் போதோ மட்டுமே அவள் அமைதியாக இருப்பது. வீட்டிலும் தனியாகப் பேச முடியாது என்பதால் தன்னுடைய தனிமை போக்க ஒன்று மொபைலை அலற விடுவாள் அல்லது அவளே எதையாவது பாடிக் கொண்டு இருப்பாள். ஒப்பீட்டின் முடிவில் பிரனீத்தை விடத் தான் மிகவும் வாயாடியாக இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.
“சேச்சே ஒரு நிமிடத்தில் இவனால் நான் என்னையே வாயாடி என நினைக்கும்படி ஆயிற்றே?” எனத் தன்னையே நொந்து கொண்டாள்.
“சரி இப்போ எதுக்கு அவனையும் உன்னையும் ஒப்பிட்டு பார்க்கிற? உன்னை அவனுக்குப் பெண்ணா பார்க்க வந்திருக்காங்க…புது ப்ரொஜெக்டு முத நாள் முத மீட்டிங்ல நீயும் அந்தத் தறுதலை மைண்ட் வாய்ஸீம் செஞ்சிட்டு இருக்கிற வேலையைப் பாரு…. அவள் மனசாட்சி அவளையே காரித் துப்ப… முகத்தைத் துடைத்து நிமிர்ந்தவள் எதிரில் நின்றவன்.
‘மேம் டிட் ஐ ஆன்ஸர்ட் யுவர் கொஸன் (உன் கேள்விக்குப் பதில் கிடைத்ததா மேடம்?) என்று கேட்டு வைக்க அவளோ திடீரென்று எதிரில் அவனைக் கண்டதில் திகைத்து நாலாபுறமும் தலையைத் திருப்பி ஆட்டி வைத்தாள்.
அதற்கடுத்து தொடர்ந்து அரை மணி நேரம் மற்ற டீம்களின் பிரச்சனைகளும் தீர்வுகளும் அலசி முடிக்க, அடுத்த நாளுக்கான முடிவுகளோடு அன்றைய மீட்டிங் நிறைவுற்றது.
தனது இருக்கைக்கு வந்து மீதி வேலைகளை முடித்தவள் மறுபடி குமரேஷ் பிரச்சனை மற்றும் அதற்கான நிரந்தர தீர்வு குறித்துத் தனக்குள் அலசிப் பார்த்தாள். அவனது சமீபத்திய தைரியம் இவளில் இருந்த தைரியத்தை குறைத்து விட்டிருந்தது என்பதே உண்மை. எத்தனை நாளைக்கு இரவுகளில் கதவை அடைத்துக் கொண்டு உள்ளேயே இருக்க முடியும்? என இரவு எடுத்த தீர்மானங்கள் நடைமுறைக்கு ஒத்து வராதென இப்போது மனம் முரண்டியதே காரணம்.
‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’, என்று ஆலிஸ் தனக்குப் பிரச்சனை தரும் குமரேஷினிடம் இருந்து தப்பிக்கப் புது வீடு பார்த்து செல்வதே சரியான தீர்வு என்ற முடிவிற்கு தற்போது வந்து விட்டிருந்தாள்.
சற்று வாடகை அதிகம் என்றாலும் கூடப் பரவாயில்லை முன்பு போல நன்கு செக்யூரிட்டி சர்வீஸ் இருக்கும் பிளாட்டிற்கு இடம்பெயர முடிவெடுத்தாள். அங்கு இப்போது தங்கியிருக்கும் இடத்தைப் போல அல்லாமல் தனிமை உணர்வு எழும் என்றாலும் தனது பாதுகாப்பிற்குக் குறைவிருக்காது.
சாயுங்காலம் அவளது அன்றைய வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றிருக்க, சிஸ்டத்தை மின் இணைப்புத் துண்டித்துத் தற்காலிக தூக்கத்தில் ஆழ்த்தி பைனான்ஸ் டீமில் இருக்கும் தன் நண்பன் கருணாவை சந்திக்க அவனின் இருக்கையை நோக்கி எட்டுக்கள் போட்டாள். அவன் தன்னுடைய வேலை நேரம் போக மீதி நேரம் வாடகைக்கு வீடு பார்த்துக் கொடுக்கும் வேலையைச் செய்கிறான்.
அவனிடம் உதவி கேட்டாலும் கூட அதற்கான கமிஷன் கொடுத்து விடப் போவதால் அவனுக்குத் தனிப்பட்ட விதத்தில் எந்த வகையிலும் கடன் பட நேராது என்கிற ஆசுவாசம் அவனிடம் போய்ப் பேச செய்தது. அவனைச் சந்தித்து விபரம் சொல்ல, அதுவும் ஒரு வாரத்திற்குள்ளாக அவசரமாய் வீடு மாறி ஆக வேண்டும் என்று கேட்க அவனும் சரி என்று அவளுக்கு வீடு தேடி தருவதாக ஆமோதித்தான்.
அவளுக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்தாலும் அதற்கு மேல் அவன் அவளிடம் எதுவும் தூண்டித் துருவி கேட்கவில்லை. ஒரு வார்த்தை அதிகமாய்ப் பேசினாலும் தனக்குள் சுருண்டு கொள்கின்ற அவளிடம், “உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்று கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அங்கிருந்து அவள் திரும்புகையில் அதே ஃப்ளோரில் இருந்த மற்றொருவரோடு நின்று பேசிக்கொண்டிருக்கும் பிரனீத்தின் மீது அவள் கண்கள் படிந்தது. இவன் தான் எவ்வளவு அழகாய் இருக்கின்றான் என அவள் மனம் ஜொள்ளியது.
தொடரும்


Leave a Reply