தற்போதைய தனது வேலைகளில் அலுத்து களைத்து போய் இருந்தாலும் கூட அந்த களைப்பிலும் மகிழ்ச்சி அந்த களைப்பிலும் ஒரு கம்பீரம். அது சாதனையாளர்களுக்கே உரிய கம்பீரம் அவனிடம் காணப்பட்டது.
தனது இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் டெல்லியில் அவனது புது வீட்டை
கட்டும் வேலையும் ஆரம்பிக்க இருந்தான் .இந்தியாவில் தனக்கென வீடு ஒன்றை
வாங்க வேண்டும் என எண்ணிய போதே அது புது தில்லியில் தான் வாங்க வேண்டும் என முடிவெடுத்து இருந்தான். தனது பெரும்பாலான நாட்கள் இனி மிலானில் தான் கழிய போகின்றது. ஊரில் அப்பாவின் வீடு பழமையானது என்றாலும் கூட அதன் கட்டுமானம், தூண்கள் மற்றும் சுவர்கள் அத்தனை வலுவானது.
அவ்வீட்டை அவன் கொஞ்சமாய் மராமத்து செய்தாலே இவனது பிள்ளை அல்லது பேரன் பேத்தி காலம் வரை தாங்கும் என்பதால் ஊரில் புதிதாக எதையும் கட்டிட முனையவில்லை.
அவனுக்கு தங்களது ஊரை தவிர வேறெங்கும் உறவினர்கள் இல்லாத நிலையில்
அப்பாவின் நண்பர் எல்லா உறவினர்களையும் விட மேலான அன்பு கொண்டவராக கணேசன் இருக்க, அவனது பாப்புவின் வீட்டின் அருகிலேயே இவனது வீடும் இருந்தால் இவன் வெளியூரில் இருக்கும் சமயம் அவர்கள் அந்த வீட்டை கவனித்து கொள்வார்கள் என்று ஒரு நம்பிக்கை இருந்ததாலேயே அவன் டெல்லியில் அந்த வீட்டை வாங்கி இருந்தான்.
வீட்டை எண்ணிய போதே அவனது பாப்பு நினைவிற்கு வந்தாள். வீட்டைக் கட்டும் தனது முனைப்பில் கூடுதலாக ஒரு காரணமும் கூட உண்டு. தன்னை தவறாக எண்ணிக் கொண்டு தன்னிடம் வருடக்கணக்காக பேசாமல் இருக்கும் பாப்புவை எப்படியாவது தன்னுடன் பேச வைக்க வேண்டும் எனும் ஆனந்தின் ஆசையும் கூட அதற்கு காரணம்.
ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்கும் அவனது இந்த முயற்சி வெற்றி பெறுமா?
‘இந்த பாப்பு இருக்காளே?’ … அவளை எண்ணி அவன் சலித்துக் கொண்டாலும் கூட. இத்தனை வருடங்கள் தன்னிடம் பேசாதவள் தான் அவளுக்கு பணம் அனுப்பியதும் உடனே பரபரத்துக் கொண்டு தகவல் அனுப்பியதை எண்ணி அவன் முகத்தில் புன்முறுவல் எழுந்தது, தனக்குள்ளாகச் சிரித்துக் கொண்டான்.

