“மார்ச் மாசம் நாம இந்தியா போறோம்”
“நிசசயமா போறோம்” ஆனந்த் முறுவலித்தான்.
“பை” சொல்லி விகாஷிற்கு விடைக் கொடுத்தவன் உள்ளே வந்து அயர்ந்து உறங்கலானான்.
விகாஷ் மும்பையிலேயே ஆனந்திற்கு அறிமுகமானவன், மராத்தியன் என்றபோதும் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் இருந்து வளர்ந்ததால் தமிழ் அவனுக்கு தண்ணி பட்ட பாடு. ஆனந்த் அளவிற்கு மிகவும் விகாஷ் திறமை வாய்ந்தவனில்லை என்ற போதும் கூட வாய் இருக்கே அவன் வாய் அது மிகவும் திறமையானது.
ஆனந்த் வேலையில் கெட்டி என்றால் விகாஷ் மார்க்கெட்டிங்கில் கெட்டி. ஆக ஒருவர் திறமையை மற்றவர்கள் பயன்படுத்திக் கொண்டு மெது மெதுவாக வெற்றியின் படியில் ஏறிக் கொண்டு இருந்தனர்.
ஒருவர் மற்றவர் தனிப்பட்ட விஷயங்களில் எப்போதும் தலையிடுவதில்லை மற்றும் பண விஷயத்தில் இருவருமே நேர்மையான பங்கீட்டுடன் இருக்க, அவர்கள் உறவில் தேக்கமில்லை. வருகின்ற செப்டெம்பர் மாத ஃபேஷன் ஷோவில் ஆனந்த் மற்றும் விகாஷ் குழுவினரின் படைப்புக்களும் வலம் வர போவதில் ஆனந்த் தயாரித்த அசத்தலான உடைகளின் மாதிரிகள் பெரும்பான்மையான பங்கு வகித்தது என்றால் அந்த உடைகளின் மாதிரி மற்றும் புகைப்படங்களை கொண்டுச் சென்று பெரும் முதலாளிகள் முன்பாக கடைப் பரப்பி விளம்பரப் படுத்தியதில் விகாஷீற்கு மிக முக்கியமான பங்கு இருந்தது.
மார்க்கெட்டிங் மற்றும் ஃபேஷன் ஷோவிற்கான இடம் ஏற்பாடு செய்வது இவை
எல்லாம் விகாஷ் பார்த்துக் கொள்வானாகில் மாடல்கள் ஏற்பாடுகள் எல்லாம்
ஆனந்த் தான் பார்த்தாக வேண்டும். ஏனென்றால், லிண்டாவிற்கு விகாஷை
அவ்வளவாக பிடிக்காது.
லிண்டா ஆனந்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பது
போல துணை நிற்பவள் விகாஷை கண்டுக்க கொள்ளவே மாட்டாள். மாடல்கள் விஷயத்தில் ஆனந்த் லிண்டா மூலமாகவே எல்லா ஏற்பாடுகளையும் முன்னெடுப்பான்.
இவை எல்லாவற்றின் பின்னாலும் தாம் லிண்டா மூலமாகத்தான் தான் இந்த வெற்றியின் பலப்படிகளை தாண்டி வந்திருக்கின்றோம் என்பதான ஆனந்த் முத்துராஜின் நன்றியுணர்ச்சி காரணமா? இல்லை வேறு காரணங்கள் ஏதும் உண்டுமா? என்பதை அவன் ஆழ்மனமே அறியும்.
விகாஷ் ஆனந்திடம் சொல்லிச் சென்றதை போல அவர்கள் பெப்ருவரி ஃபேஷன் ஷோ முடிந்ததும் மார்ச் மாதம் இந்தியா செல்வதான ஏற்பாடுகள் இருந்தது என்னமோ உண்மைதான். தனது டெல்லி வீடடை இண்டீரியர் செய்ய இரண்டு மூன்று மாத காலம் போதுமானது. அதன் பின்னர் அப்பாவை டெல்லிக்கு வரவழைத்து வீட்டை பால்காய்ச்சி (கிரஹ பிரவேசம் செய்தல்) வர திட்டமிட்டு இருந்தான்.
தனது பிராண்டை (Brand) மும்பை மற்றும் டெல்லியில் லாஞ்ச் செய்ய
சாத்தியங்கள் உள்ளனவா? அதற்காக என்ன செய்யலாம்? என்பதான விபரங்களை சேகரிக்க ஒரு ஏஜென்சியிடம் விபரம் கேட்டிருக்கிறான். அவனுக்கு அது சம்பந்தப்பட்ட வேலைகள் சிலவையும் இருந்தன.
வாரங்கள் கடந்திருந்தன ஆனந்தின் வீட்டு வேலைகள் ஆரம்பித்து இருந்தன.
பாப்பு அவன் மீது எத்தனை கோபமாக இருக்கின்றாள் என காட்டும் முனைப்பில்
இருந்தாலோ என்னமோ அவளை குறித்து தினம் தோறும் ஏதாவது ஒரு குற்றம் குறைகள் இவன் காதை வந்தடையாமல் இல்லை.
“சார் நீங்க சொன்ன பிளான் போல இந்த மேடம் எதையும் செய்ய விடுவதில்லை.” என காண்டிராக்டர் அவனிடம் முறையிடடார்.
“வெட் பார் (வீட்டின் உள்ளே மதுபானம் அருந்துவதற்காக அமைப்பு கொண்ட பகுதி) பிளானையே தூக்க சொல்லிட்டாங்க”
“ஓ சரி,மேடம் என்ன சொல்லுறாங்களோ அதை செய்ங்க”
“அப்படின்னா நீங்க சொன்ன பிளான்?”
“நீங்க மேடம் சொல்லுறதை செய்ங்க சார், நான் மேடமிடம் பேசிக் கொள்கின்றேன்”
“சரிங்க சார்.”
என்னதான் தினமும் இவன் ஆறுதல் சொன்னாலும் சம்பூர்ணா குறித்த தினசரி
முறையீடுகள் அவனிடம் வந்துக் கொண்டே இருந்தன.
மேடமிடம் பேசுவதாக இவன் தினமும் சொன்னாலும் அவளிடம் பேசினால் என்னவாகும் என இவனுக்கு தெரியாமல் இல்லை. இதுதான் வாய்ப்பென்று, “உன் வீட்டு வேலையை நீயே பார்த்துக் கொள்”, என்று தூக்கி எறிந்து விட்டு சென்று விடுவாள்.
அப்படியொரு வாய்ப்பை அவன் தனது பாப்புவுக்கு தருவானா என்ன?
தொடரும்

