நுவலியின் எண்ணத்தின் படி அவளது கல்லூரிப் படிப்பு நிறைவு பெற இருக்கும் காலம் இது. அவளோடு இருக்கும் தோழிகள் இன்னும் சில மாதங்கள் கழித்து தொடர்பில் இருப்பார்களோ இல்லையோ அப்படிப்பட்ட தோழிகளிடம் தன்னுடைய பிரச்சனைகள் எதையும் பகிர எண்ணமில்லை.
எத்தனை நல்லவராக இருந்தாலும், அவளது விசயம் அவள் மட்டும் இருக்கும் வரையில் தான் அவளுக்கு பாதுகாப்பு.
இவள் எதைச் சொன்னாலும் பிறர் இவளை முழுமையாக நம்ப இயலாதபடி பூமராங் போல அவளையே திரும்பி அடிக்கும் சிக்கலுக்குள் அல்லவா அவள் மாட்டி இருக்கிறாள்.
நாட்கள் மாதங்களாகியும் கூட மனோஜ் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக நுவலியை பின்தொடர, நுவலி தவிர்க்க முடியாமல் அவளே மிகவும் சல்லித்தனமாக கருதும் ஒன்றை செய்ய நேரிட்டது.
வட நாட்டு பழக்கம் நமக்கெதற்கு? என தன் வீட்டில் செய்யாத ஒன்றை கல்லூரி முழுவதும் பார்க்கும் படியாக செய்தாள் அவள்.
ரக்சா பந்தன் என அழைக்கப்பட்ட அந்த நாளில் மனோஜ் மற்றும் அவனது நண்பர் குழாம் அனைவருக்கும் மிகவும் பகிரங்கமாக ராக்கி கட்டி உலகின் முன்பாக மனோஜை அவள் அண்ணனாக மட்டுமே கருதுகிறாள் தன் செயல் மூலமாக அவள் அறிக்கையிட்டாள்.
ஒரு வழியாக மனோஜின் அத்தனை முயற்சிகளும் அத்தோடு முடிவுற்றன.
அதன் பின்னர் எந்த வாட்சப் செய்திகளும் மனோஜிடமிருந்து வராததோடு, அவளே ஆச்சரியப்படும் விதமாய் மனோஜ் நுவலியை ப்ளாக் செய்தான்.
ஒரு குப்பை தானாகவே குப்பைத் தொட்டியில் போய் விழுந்தால் எப்படியாகப் பட்ட மகிழ்ச்சி நேருமோ? அதே போலொரு மகிழ்ச்சியில் இருந்தாள் நுவலி.
அதை அனுபவிக்க விடாதபடி நுவலியின் வீட்டில் சோலைப் புயல் தாண்டவமாடியது.
சோலைப் புயலின் அம்மா புயலும் ஊரிலிருந்து சென்னை வந்திறங்க, கல்லூரிக்கும் வேலைக்கும் ஒரு வார விடுப்பெடுத்து அகத்தியனும் தன் வீடு வந்துச் சேர்ந்தான்.
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாதபடி சுறுசுறுப்பானது நுவலியின் வீடு.
தொடரும்


Leave a Reply