“எப்போதுமே ஒரே திக்கில் சிந்திக்க கூடாது ரிஷா. நாம் யோசிக்காத கோணத்திலும் சில உண்மைகள் கிடைக்கலாம் இல்லையா?”
“ம்ம்… நீ சொல்வது கூட உண்மைதான் இந்தர்”. தன் குரல் மெலிய பேசியவள், “கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஏன் எதற்காகன்னே புரியாமல் நான் சிறைவாசம் போல வாழ்ந்து இருந்திருக்கிறேன். என் குடும்பத்தைப் பிரிந்து இருந்திருக்கிறேன் இந்தர். எனது 13 வயது முதலாக எனக்கு தெரிந்த ஒரே காரணம் இது தான். நான் இதையே மனதிற்குள்ளாக உருவேற்றி வைத்திருக்கிறேன். அதனால் தான் என்னால் இதை தாண்டி சிந்திக்க முடியவில்லை. “
“ம்ம்ம்.. உன் அம்மா அப்பாவாவது உனக்கு காரணம் சொல்லி இருக்கலாம். இப்படி ஒரு பிரச்சனைக்குள் நீ மாட்டுவாய் என்றெல்லாம் அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.”
இந்தர் சொன்னதைக் கேட்டது பெற்றோரை எண்ணி ரிஷாவிற்கு பெருமூச்செழுந்தது,
‘அவர்கள் சொல்லியிருந்தால் நான் எதற்கு இவ்வளவு குழப்பங்களோடு அலையப் போகிறேன்? எங்கே செல்ல வேண்டும்? ஏன் செல்கிறேன்? எதற்காக என் பின்னால் இத்தனை பேர் என் உயிரைப் பறிக்க தேடுகிறார்கள் ஒன்றும் புரியாமல் பைத்தியக்காரியைப் போல அலைந்துக் கொண்டிருக்கிறேன்.’ வெகுவாக உணர்ச்சி வசப்பட்டிருந்தாள் ரிஷா.
நட்பாய் அவள் புறங்கையை தட்டிக் கொடுத்தான் இந்தர்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் சுதாரித்துக் கொண்டாள். புன்னகைக்க முயன்று தோற்றாள். முகம் இறுகிக் கிடந்தது. கண்களுக்குள் கலக்கத்தின் மிச்சங்கள்.
‘இந்தப் பெண்ணின் மனக் கலக்கங்களை தீர்க்க வேண்டும்’ என்று இந்தர் மனதில் சந்தித்தது முதலாய் தோன்றுவது போலவே அதிகமான உந்துதல் எழுந்தது.
மனம் சோர்ந்து இருந்தவளை சகஜமாக்க முனைந்தான். டாக்ஸிக்காரர் வழி அங்கங்கே கேட்டு பயணித்துக் கொண்டிருந்தார்.
“அதையெல்லாம் விடு ரிஷா. இப்ப உன்னோட உட்பி-யை பார்க்கப் போற, ரிலாக்ஸ்.”
“…..”
“மிஸ்டர் பிரபாகர் இதோ உங்க வருங்கால மனைவி வராங்க பத்திரமா பார்த்துக்கோங்க…” என காற்றில் கூறியவனை முகம் சுளித்து தன் விருப்பமின்மையை தெரிவித்தாள் ரிஷா.
“ஏன்மா ஏன்? உனக்குன்னு உங்க அம்மா, அப்பா ஒரு சிறந்த அடிமையை தான் தேர்ந்தெடுத்து இருப்பாங்க. எதுக்கு இந்த டென்ஷன்?”
“போடா…”, என்றவளின் முகம் சற்று இலகுவாகி இருந்தது.
“இதோ நாம இப்போ இடத்தை நெருங்கிட்டோம். இனி பிரச்சனை எதுவும் இருக்காது ரிஷா பயப்பட வேணாம் ஓகே. என்னோட கார்ட் தரேன். நீ எப்ப வேணும்னாலும் என்னை தொடர்பு கொள்ளலாம். எனக்கு ஒரு நண்பன் டிடெக்டிவா இருக்கான். அவனும் தமிழ்தான் முறுவலித்தவன். அவன் பெயர் ரிஷி. இன்னிக்கு உன்னை உன் மாமியார் வீட்டில பத்திரமா விட்டுடறேன்.”
“….”
“நாளைக்கு பிரபாகரை அந்த அட்ரஸீக்கு வரச்சொல்லு, யார் பிரச்சனை செய்யுறான்னு பார்ப்போம். உன்னோட அம்மா அப்பா விபரம் எப்படியும் பிரபாகருக்கு தெரிஞ்சிருக்கும். இதோ இப்போ கொஞ்ச நேரத்தில் உன்னோட பிரச்சனையெல்லாம் தீர்ந்து நீ பத்திரமா இருக்க போகிற, அதைப் பற்றி மட்டும் நினை. மத்ததை எல்லாம் தூக்கிப் போட்டுடு ஓகே.”
ரிஷாவின் முகம் மலர்ந்தது.
“ம்ம்…” என்றவளாய் தலையை ஆட்டினாள்.
“…”
“மும்பை ரொம்ப பரபரப்பா இருக்கும்னு சொல்வாங்க, இங்கே என்னன்னா அமைதியா இருக்கு.”
“கொஞ்சம் போஷ் (posh) ஏரியால்லாம் இப்படி அமைதியாதான் இருக்கும் ரிஷா. மிடில் க்ளாஸ் மக்கள் இருக்கிற இடங்கள் தான் ஜன சந்தடியா இருக்கும். இங்கே ரோட்டில் பார்த்தியா கார் தவிர ஆள் நடமாட்டமே இல்ல. பையை எடுத்துக்கோ ரிஷா, உன்னை விட்டுட்டு இதே டாக்ஸில திரும்ப போயிடுவேன். சட்டுன்னு திரும்பிப் போக வண்டி கிடைக்கா விட்டா அது ஒரு கஷ்டம்.”
“ம்ம்” எனக் கேட்டுக் கொண்டாள்
“சரி வா உன்னை விட்டுட்டு போறேன் என தன் கையில் அவள் பையை எடுத்துக் கொண்டான். குனிந்து தான் வருவதாக டாக்ஸி ஓட்டுனருக்கு சொன்னான்.”
கைப்பையோடு இறங்கியவளை நின்று நிதானமாய் பார்த்தான்.
“என்ன?” என்றாள் அவள்.
“இவ்வளவு பெரிய கார்மெண்ட் ஓனர் பொண்ணு நீ. இவ்வளவு சிம்பிளா இருக்கியே. தங்கம், வைரம்னு மின்ன வேணாமா?”
“இப்ப நான் இருக்கிற டென்ஷன்ல இந்த கேள்வி ரொம்ப முக்கியம்…. போவியா…” அவனை அதட்டி விட்டு அவனோடு முன்னேறிச் சென்றாள்.
அந்த உயர்ந்த பல மாடிக் கட்டிடத்தின் செக்யூரிட்டி கேபினை இருவரும் அணுகினர். டாக்ஸி டிரைவர் திரும்ப செல்ல வசதியாக திருப்பத்தில் எதிர்புறமாக வண்டியை எடுத்துச் சென்று இந்தர் வருவதற்காக காத்திருந்தார்.
அந்த பில்டிங்கின் நுழை வாயிலில் கார்கள் ஒவ்வொன்றாய் உள்ளே சென்றுக் கொண்டிருந்தன.
ரிஷாவிடமிருந்த விசிட்டிங் கார்டை எடுத்து செக்யூரிடியிடம் நீட்டினான்.
“மிஸ்டர் பிரபாகரன் சி விங்க் பிப்த் ப்ளோர். ஹமே வஹா ஜானா ஹை.” ( C wing 5வது மாடியில் இருக்கும் மிஸ்டர் பிரபாகரனை சந்திக்க வந்திருக்கிறோம்?)
இவர்களை வினோத ஐந்துப் போல பார்த்த அந்த செக்யூரிட்டி விசிட்டிங் கார்டை வாங்கியவர் தானும் நன்றாக பார்த்து விட்டு. அருகாமையிலிருந்தவரை அழைத்தார்.
“கோயீ பிரபாகரன் நாம் கா பந்தா அப்னே பில்டிங்க் மே ஹை க்யா?” ( நம் பில்டிங்கில் பிரபாகரன் என்று யாராவது இருக்கிறார்களா என்ன?)
அடுத்தவன் கார்டை பார்த்துவிட்டு , ‘ நஹி ஐசா கோயி நஹி ஹை” ( அப்படி யாரும் இங்கு இல்லை) என்றான்.
“இதென்னப்பா இப்படி சொல்றாங்க?”, ரிஷா சோர்ந்தாள்.
“ரிஷா டோண்ட் வொர்ரி, ஒருவேளை அவங்க பேரண்ட்ஸ் பெயரில் வீடு இருக்கலாம், இவங்களுக்கு தெரியாமல் இருக்கலாம் இல்ல. எதுக்கு டென்ஷன் ஆகிற?”
அவளுக்குச் சொன்னவன், செக்யூரிட்டியிடம் திரும்பி,
“மை உன்கா பிதாஜி கா நாம் பூல் கயா ஹூ, சிர்ப் உன்கா நாம் யாத் தா, ஹம் ஜாகே மில் கே ஆஜாதே ஹை” ( நான் பிரபாகரனின் தந்தையின் பெயரை மறந்து விட்டேன், ஆனால், இந்த விலாசம் தான். நாங்கள் போய் பார்த்து வருகின்றோமே?)
இருவரின் பெயர், போன் நம்பர் எல்லாம் எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதித்தனர்.


Leave a Reply