வெகு பிரமாதமாக இருந்தது அந்தக் கட்டிடம், சற்றுத் தூரம் நடந்ததும் லிப்ட் கண்ணில் பட சொடுக்கி விட்டு அமைதியாக நின்றிருந்தார்கள்.
சற்று கலக்கமாய் தன்னருகே நின்றவளை பார்த்தான் இந்தர்.
“என்னாச்சு?”
“அந்த போர்ட்ல பார்த்தியா? எந்த தமிழ் பெயரும் இல்லை. நாம தவறான விலாசத்துக்கு வந்திட்டோமோ?”
“இல்லியே பில்டிங்க் பேரைப் பாரேன், இதுவே தான்.”
“ம்ம்…”
லிப்ட் அரக்கனைப் போல வாயைப் பிளந்து இவர்களை விழுங்கி 5 வது மாடியில் துப்பிச் சென்றது.
இரண்டே குடும்பத்தினர் உபயோகிக்கும் தளம் அது.
முதலில், அனந்த ராவ் எனும் பெயர் கொண்ட வீட்டின் காலிங்க் பெல்லை தட்டினான்.
“ஏ இந்தர் பேரை பார்த்தாலே தெரியலையா? இவங்க தமிழ் இல்லைனு போயிடலாம் வாடா…”
“சும்மா இரு…”
கதவை திறந்தது நடுத்தர வயது பெண்மணி…
“பாபி யஹான் பே பிரபாகரன் ரெஹதே ஹை க்யா?” (அண்ணி இங்கு பிரபாகரன் என்று யாராவது இருக்கிறார்களா?)
அவர்களை ஸ்நேகமற்ற பார்வை பார்த்தவர், “ நஹி” என்று சட்டென்று கதவை பூட்டிக் கொண்டார்.
“சொன்னேன்ல…”
ரிஷாவுக்கு அந்த சடார் கதவடைப்பு முகத்தை கன்றச் செய்தது. அடுத்த வாயிலுக்கு சென்றால் அது ஏற்கெனவே பூட்டி இருந்தது. சட்டென்று அந்த விசிட்டிங் கார்டை திருப்பி பார்த்தான்.
மறுபடி போன் நம்பரை டயல் செய்தான், இன்னும் போன் எடுக்கப் படவில்லை டூ டூ டூ…என இசைப் பாடி கடுப்பேற்றியது.
அவனோடு கூட அவளும் படிகளில் இறங்கலானாள்.
“உன் கிட்ட போன் இல்லைன்னு சொன்னப்போ ரொம்பவே அதிர்ச்சியா இருந்தது ரிஷா. ஆனா உனக்கு போனே கொடுக்கலைன்னா கூட உன் நன்மைக்காகத்தான் இருக்கணும். இப்போல்லாம் போன் இருந்தா அதை ட்ரேஸ் செஞ்சு ஒருத்தரை சுலபமா கண்டு பிடிச்சிடலாம்.”
“நாம எங்கே போறோம்? என்னச் செய்யறோம்? எல்லாம் நாம போன் மூலமா ஈஸியா ஆக்ஸ்ஸ் ஆகிடும்.”
“அப்படியெல்லாம் கூட ஒருத்தரை கண்காணிக்க முடியுமா?” ஆச்சரியத்தில் விழி விரித்தாள் ரிஷா.
“ம்ம்” புன்னகைத்தான் இந்தர், “ஒருவேளை இதுக்காகவே உனக்கு போன் கொடுக்காம வைத்திருக்கலாம். எல்லாம் உன் பாதுகாப்புக்காகத்தான் இருக்கணும்.”
தான் வெகு நாட்கள் போனுக்காக கேட்டு அடம் பிடித்து இருந்ததையும் , பின்னர் கிடைக்காதென மனதை தேற்றிக் கொண்டதையும் நினைவில் கொண்டாள் ரிஷா. ஷாரதா ஆண்டியின் செயல்களின் உண்மையான அர்த்தங்கள் புரிந்துக் கொள்ள நமக்கு வெகு நாட்கள் ஆகும் போலவே என எண்ணிக் கொண்டாள்.
மதியம் வரை தன்னுடனே இருந்த அவரை மனம் தேடியது. அவர் பத்திரமாக இருப்பார் தானே? இருக்க வேண்டும் என மனம் வேண்டியது.
ஷாரதா ஆண்டி சொன்ன நபரைத் தேடி, அவர் சொன்ன விலாசம் வந்தும் அந்த பிரபாகரை கண்டு பிடிக்க இயலாமல் மறுபடி வழித் தெரியாத பயணியாய் நிற்க நேர்ந்தது குறித்து மனம் சோர்ந்தாள்.
தன் சிந்தனைக் கூட்டுக்குள் சுருங்கிக் கொண்டவளை ஆதூரமாய் பார்த்தான் இந்தர்.
செக்யூரிட்டி கேபினை நெருங்கி விட்டிருந்தனர்.
“இப்ப என்னச் செய்யறது இந்தர்?”
“உனக்கென்னம்மா கோடீஸ்வரி, பைவ் ஸ்டார் ஹோட்டல்ல கூட போய் ரூம் புக் பண்ணிக்கலாம். இதுக்கெல்லாமா மூஞ்சை இப்படி வச்சுப்ப?”
“ஹோட்டலா?” முகம் சுளித்தாள்.
“வேறு என்னச் செய்யறது? இங்கே பக்கத்தில நல்லதா ஹோட்டல் பார்த்து உன்னை தங்க வச்சுட்டுப் போறேன். நாளைக்கு உன் அம்மா, அப்பாவை ரிஷி மூலமா தேடணும்னு பார்த்தேன். இப்ப என்னடான்னா உன்னோட பியான்ஸியையே காணோம். காலையில் எல்லோரையும் தேடுவோம். இப்ப போய் ரெஸ்ட் எடுத்துக்க.”
“எனக்கு என்னோட அம்மா அப்பாவை தேடுனா போதும் ஓகே. அந்த பிரபாகர் யாரோ எவரோ? அவரை நான் எதுக்கு தேடணும்?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
செக்யூரிட்டி கேபினில் Out time எழுதி வெளி வந்தனர்.


Leave a Reply