என்னதான் அம்மா சொல்லி அவளைப் பெண் பார்க்கச் சென்றிருந்தாலும் முதன் முறைப் பார்த்ததும் அவளைப் பிடித்திருந்ததா? எனக் கேட்டால் அவனுக்கு சொல்லத்தெரியவில்லை.
முன்பின் அறியாத பெண்ணை, பத்து பதினைந்து பேர் இவர்கள் நடவடிக்கைகளை ஆராய்ந்துக் கொண்டு சுற்றி அமர்ந்து இருக்கும் ஒரு சூழலில், ஒரு சில மணித்துளிகளில் பார்த்து அறிந்துக் கொள்வது சாத்தியமா? அதில் எப்படிப் பட்ட புரிதல் இருக்கும்(?!). இந்தியத் திருநாட்டில் இந்த ஃபார்முலா இவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் காரணம் என்ன? என்று அந்நேரம் யோசித்துக் கொண்டிருந்தான்.
அதன் பின்னர் அவளோடு பேசின கடந்த சில வாரக் காலங்களாகத்தான்அவள் மேல் உண்மையான விருப்பம் வந்தது என்றே அவனுக்குத் தோன்றியது.
வெளிப்படையான அவள் பேச்சு, அவன் மனதைக் கவர்ந்துக்கொண்டதில் சந்தேகமென்ன? இதோ இந்த மாதிரி பைக் சம்பவம் குறித்தும் அவள் ஏற்கெனவே பகிர்ந்துக் கொண்டு இருக்கிறாளே?
“நம்ம மக்களைத் திருத்தவே முடியாது ஹரி , அன்றைக்கு அப்படித்தான் என் கூட வேலைப் பார்க்கிற மனோஜ் என்னை வீட்டுக்கு ட்ரோப் செய்தான்.அவனை நான் வீட்டுக்குக் கூப்பிட்டேன், வந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டுப் போனான். பக்கத்து வீட்டில இருக்கிறவங்க எல்லாம் இந்த பையனை உன் மகளுக்கு பார்க்குறியான்னு அம்மாகிட்ட விசாரிச்சிருக்கிறாங்க…எனக்கு வந்த கோபத்துக்கு…”, என அவள் பொறும…
அவனக்கும் உள்ளுக்குள் தாங்க முடியாத பொறாமை எழுந்திருந்தது உண்மை.ஏனென்றால்,அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட் லிஸ்டில் உயரமாக , ஹாண்ட்சம்மா இருந்த அவன் உருவம் அவன் கண்முன் நிழலாடி இருந்ததே.
எதிர் முனையில் அவனவள் பேச்சைத் தொடர்ந்தாள், “அவன் என்னை விட ரொம்ப டாலா இருப்பான் ஹரி, ஆனா என்னை விட ஃபோர் இயர்ஸ் சின்னவன், என் தம்பியா தான் அவனை நான் நினைச்சுட்டு இருக்கேன். மற்றவங்க ஒண்ணும் புரியாம பேசும் போது எவ்வளவு கோபம் வரும்னு தெரியுமா?”
(அப்பாடா நாலு வயசு சின்னவனா? அப்போ பரவாயில்லை அல்பத்தனமாக சந்தோஷப் பட்டிருந்தது அவனது மனது) .
“சின்ன வயசில அண்ணாதான் என்னை சைக்கிள்ல ஸ்கூல் கூட்டிட்டுப் போவான், கொஞ்சம் பெரியவளானதும் அம்மா என்னை கூட்டிப் போக விட மாட்டாங்க…என்னதான் அண்ணன் தங்கையா இருந்தாலும் மற்றவங்க என்ன நினைப்பாங்கன்னு அம்மா சொன்னது கேட்டப்போ எவ்வளவு கோபம் வந்தது தெரியுமா?”
“……”
“ஆனால் அதெல்லாம் இப்போ பார்த்துகிட்டு இருக்க முடியுமா?!. காலையிலே லேட்டாகும் போதெல்லாம் அண்ணாவதான் என்னை ஆஃபீஸ் ட்ரோப் செய்யணும்னு சொல்லிருக்கேன்.”


Leave a Reply