சற்றுத்தூரம் சென்று சத்யா பயணித்த பைக்காரன் நடுப்பாலத்தின் ஓரத்தில் நிறுத்தி, இறங்கி அவளை அழைத்தவாறே முன்னேறிச் சென்றான்.
அங்கே பாலத்தில் வாகனங்கள் பயணிக்கும் சாலையை தவிரவும்,ஆட்கள் நிற்கும் படியான அமைப்பு இருந்தது.அதே நேரம் சத்யா தன் போனை எடுத்து ஹரியை அழைத்து தன் பேகின் உள்ளேயே போனை வைத்து விட்டாள்.
ஹரியும் 10 அடித்தூரம் தள்ளி பைக்கை நிறுத்திச் சற்றுத் தொலைவில் நின்று அவர்களைக் கவனிக்க ஆரம்பித்தவன், போனைக் காதுக்குக் கொடுத்தான்.
சுற்றும் முற்றும் பார்க்க வெகு இடைவெளிகளில் சில மனிதர்களை தனிமையில் புகைத்தவாறோ, ஏகாந்தத்தில் திளைத்தவாறோக் கண்டாலும் அதிகமாக ஜன சந்தடியற்ற, அதே நேரம் விரைவாக வாகனங்கள் மட்டுமே பயணிக்கும் அந்த பாதை ஆபத்தான செயல்கள் புரிய ஏற்றதே என்றுப் புரிந்தது.
‘அது யாராக இருந்தாலும் சரி,அவனுக்கு சத்யாவை இங்கு அழைத்து வர வேண்டிய தேவை என்ன?அவன்தான் அழைத்தாலும் இவளுக்கு அறிவில்லையா?’, என ஹரி பொறுமிக் கொண்டு இருந்தான்.
ஹரி இப்போது சற்றுக் கவனித்துப் பார்க்கையில் நேரில் பார்த்திராவிட்டாலும் கூட சத்யாவை அழைத்து வந்தது மனோஜோ என அவனுக்குத் தோன்றியது.
சத்யாவின் முகத்தில் குழப்ப ரேகைகள்… ஹரி பின்தொடர்ந்து வந்தது அவளுக்கு தெரியாததால் ஹரியை தேடவும் தோன்றாமல் என்ன செய்வது என்றுப் புரியாமல், அவளை அழைத்து வந்தவன் எங்கோ பார்த்தபடியே நிற்க அவன் அருகேச் சென்று நின்றாள்.
“மனோஜ் ,முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றுச் சொன்னதால் வந்தேன். ஆனால் இவ்வளவு தூரம் எதுக்கு வரணும்? இன்னும் கொஞ்ச நேரமானா இருட்டிடும், நான் வீட்டில் நேரமே போய் சேரணும். இல்லைனா எல்லோரும் கவலைப் படுவாங்க. சொல்ல வேண்டியதை சீக்கிரமாகச் சொல்லு”
அவனோ அவளிடம் , “நீ என் காதலுக்கு உதவி செய்வதாக சொன்னாய் இல்லையா சத்யா?”
“ஆமாம் சொன்னேன், நீ தான் அது யார் என்று சொல்லலையே…சொல்லு நான் போய் அவளிடம் பேசுறேன். இதை நீ ஆஃபீஸில் கூடச் சொல்லி இருக்கலாமே?!..”
“ம்ம்…”, பெருமூச்சு அவனிடத்தில்….
“சொல்ல முடிஞ்சா ஏன் சொல்லாம இருக்கப் போறேன்?”
“…”
“உனக்கு நிச்சயதார்த்தம் ஆகிடுச்சு இல்லையா?”
“ஆமாம் அதுதான் உனக்குத் தெரியுமே, அதுக்கென்ன?
“நீ அவனை திருமணம் செய்ய முடியாதுனு சொல்லிடு…”
“ஏன்?”
“ஏன்னா நான் தான் உன்னை காதலிக்கிறேன், அப்போ நான் தானே உன்னை கல்யாணம் செய்துக்கணும்?”
“என்ன?” அவள் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது.
“நீ எனக்கு தம்பி மாதிரி, என்னை விட 4 வயது சின்னவன், எல்லாத்தையும் விட நான் உன்னை அப்படி நினைக்கவே இல்லை. நீ இப்படி சொல்லுவன்னு தெரிஞ்சு இருந்தா நான் உன்னோட இங்க வந்திருக்கவே மாட்டேன்.”
“4 வயசு என்ன பெரிய விஷயமா? இப்போ கூட பாரு என் முன்னால நீ என்னை விட சின்னவளாக தான் தெரிகிற. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. இதுவெல்லாம் பெரிய விஷயமா? ஏன் சச்சின்…”
“டேய் நிறுத்துடா, கண்டபடி பேசிக் கிட்டு… சச்சின் திருமணம் செய்தார்னா அவருக்கும் அவர் மனைவிக்கும் காதல் ,உனக்கும் எனக்கும் நடுவில அப்படி ஒண்ணும் இல்லங்கிறேன் , சொல்ல சொல்லக் கேட்காமல் அறிவுக் கெட்டத்தனமா பேசுறதப் பாரு…”, வெடித்தாள் அவள்.
“ஏன்? எனக்கென்ன குறை?, இன்னைக்கு போட்டோ காட்டினியே….உனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்க பாரு அவனும் அவன் கலரும் காக்கா தோத்துப் போயிடும்.”
“இங்க பாரு என் புருஷன மட்டும் எதும் சொன்னே……..எனக்கு வர்ற கோபத்துல உன்ன இங்கயிருந்து தள்ளி விட்டுடுவேன் சொல்லிட்டேன்.”
“அப்போ வா நம்ம ரெண்டு பேரும் விழுந்துச் செத்துடலாம், நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்ல சத்யா …வா”, என அவள் கையைப் பிடிக்கச் செல்லும் முன் கன்னத்தில் டொம்மென்று ஏதோ சத்தம்.
காதுக்குள் ங்கொய்ய்…என்று ரீங்கரித்தது.தலைச் சுற்றிய மனோஜுக்கு சுயமாக ஒரு நிலையில் நிற்க அவனுக்கு ஒரு சில நிமிடம் தேவைப் பட்டது.
ஒருவழியாக சுதாரித்து நின்று எதிரில் பார்க்கையில் சத்யா தன்னை மீறிய பயத்தில் நடுங்கியவாறு ஹரியிடம் ஒண்டிக் கொண்டு நிற்பது தெரிந்தது.தன்னை ஆத்திரத்தோடு உறுத்துக் கொண்டிருக்கும் ஹரியை ஏறிட்டுப் பார்க்கவும் கூட அவனுக்கு துணிவில்லை.
“ஹரி…” என மேலும் நடுங்கினாள் சத்யா.
“ஒண்ணுமில்லை, நீ பயப்படாதே” என்று அவளை ஆறுதலாக தலையை வருடியவனின் பார்வையை எதிர்கொள்ளவும் துணிவில்லாமல், இன்னும் இவனிடமிருந்து ஒரு அடியைக்கூட தாங்க முடியாது எனப் புரிந்தவனாக…
“ஸாரி சத்யா…”
“ஸாரி ஸாரி சர்”, என்றுச் சொல்லி
அவசரமாய் மனோஜ் தன் பைக்கை எடுத்துக் கொண்டு விரைந்தான்.


Leave a Reply