கார் ஓட்டுபவனைப் பார்த்து மனம் திடுக்கிட்டது. தலையில் குறையாமல் 100 கிராம் எண்ணை தடவியிருப்பான் போலும், வழித்து சீவியிருந்தான். முகம் எண்ணை பிசுக்கில் கருத்து, பார்க்கவே சகிக்கவில்லை. அதில் பயங்கரமாய் தோற்றமளிக்கும் அவனது மீசை. சுருட்டி விட்டிருந்தான். ச்சீ அவன் சட்டை அதற்கும் மேல் வெகு மட்டம், காட்டான் போல இருக்கிறான், ஒருவேளை காரை களவெடுத்துக் கொண்டு வந்திருப்பானோ?
அவனும் அவன் மூஞ்சியும் முழியும், அங்குமிங்குமாய் பார்வையை செலுத்தியபடி கார் எப்படி ஓட்டுகிறான் பார், நிச்சயமாய் அவன் கண்களில் கள்ளத்தனம் தெரிகிறது. இவன் நிச்சயம் திருடன் தான். பெரியம்மா இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விட்டீர்களே? மனதிற்குள் நொந்தவளாய் கார் கண்ணாடியின் வெளியே எட்டிப் பார்த்து வழியை கவனிக்கத் தொடங்கினாள்.
வழியில் மரங்களும் இருளில் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன, அவளால் தொடர்ச்சியாக வெளியேப் பார்க்க முடியவில்லை. அவன் கண்கள் தன்னை அடிக்கடி நோட்டமிடுவதைப் பார்த்து மண்டைக்குள் வேக வேகமாக சைரன் அடித்துக் கொண்டிருந்தது.
வண்டியின் அடையாளங்களை கவனிக்க தொடங்கினாள். வழித் தவறிப் போனால் உடனே எண் 100 ஐ அழுத்த ஆயத்தமாக இருந்தாள். வீட்டிற்க்கு தான் குறிப்பிட்ட வண்டியில் வருவதாகவும் இன்னும் 20 நிமிடத்தில் தன்னை ரோட்டோரமாக வந்து அழைத்துச் செல்ல வர வேண்டுமென்றும் மெசேஜ் செய்து வைத்தாள்.
நகங்கள் கூர்மையாக இருக்கின்றனவா? என சோதித்துக் கொண்டாள். மொபைலில் இண்டெர்நெட்டை ஆன் செய்து இக்கட்டான வேளையில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரவுஸ் செய்து பார்த்துக் கொண்டாள். தான் பயப்படுகிற மாதிரிக் காட்டிக் கொள்ளக் கூடாதாமே.. ம்ம்க்க்ஹ்ம் தொண்டைச் செருமியவளாக தைரியமாக நிமிர்ந்து அமர்ந்தாள்.
அவள் செய்கை ஒன்றுமே அவனின் பார்வைக்கு தப்பவில்லை. அவன் பார்வை வழியின் இருமருங்கிலும் , அவள் மேலும் மாறி மாறிப் படிந்தது. பார்க்க சின்னஞ்ச்சிறு பெண்போல இருக்கிறாள். ஒப்பனையில்லாத முகத்தில் அவள் கன்னங்களும் , கண்களும் கவனத்தை ஈர்க்கின்றன எனக் கவனித்துக் கொண்டிருந்தான்.
தடாலென கார் நடு ரோட்டில் க்ரீச்சிட்டு நின்றது, சட சடவென அந்த காரைச் சூழ்ந்தனர் சிலர். அவர்கள் கையில் ஆயுதம். சட்டென்று தன்னுடைய பையினின்று ரிவால்வரை எடுத்து அவசரமாய் கதவைத் திறந்து அவர்களை எதிர்கொண்டான் காரை ஓட்டியவன்.


Leave a Reply