எனக்கு பொதுவா இந்த கரப்பான் பூச்சிக்கு பயந்து கத்தற பெண்கள், சும்மா சும்மா எதுக்கெடுத்தாலும் வீல் வீல்னு கத்திட்டு மயக்கம் போடுற பெண்களைப் பார்த்து கொஞ்சம் அலர்ஜி. என்னோட வேலை ரிஸ்கானது, என்னோட மனைவி துணிச்சலானவளா இருக்கணும் அப்போதான் என்னால என்னோட வேலையை பார்க்க முடியும் அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நீ அன்னிக்கு நடந்துக் கிட்ட முறையில எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போச்சு.
ஆபத்து வந்ததும் உதவிச் செய்யாமல் பின்சீட்டில் ஒளிந்துக் கொண்டவளை துணிச்சல்காரி என்றுச் சொல்கிறானே என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மேலே பேசினான்.
லிஃப்ட் கிடைச்சதும் அலட்சியமா இருக்காம நீ என்னை கவனிச்ச அது முதலாவது என்னை கவர்ந்த விஷயம். என்னோட தோற்றத்தைப் பார்த்து உனக்கு காரில் ஏறின நேரம் முதலே என் மேல் சந்தேகம், ஆனாலும் காச் மூச்சுன்னு சத்தம் போடாம காரில என்ன அடையாளம் எல்லாம் இருக்குன்னு தேடின……. வீட்டுக்கு மெஸேஜ் செஞ்சுக் கிட்டு இருந்த மாதிரி இருந்தது. கையிலயே மொபைலை அட்டென்ஷனில வச்சிருந்தது பார்த்தா எப்போதும் போலிஸுக்கு போன் போட ரெடியா இருந்தா மாதிரி தோணுச்சு……கூடவே கார் எந்த வழியா போகுதுன்னு அடிக்கடி கவனிச்சுக் கிட்டே அலர்ட்டா இருந்த……………எதையோ மொபைலில ஸெர்ச் பண்ணிட்டு ஒரு மாதிரி விரைப்பா நிமிர்ந்து உட்கார்ந்த…..
அச்சச்சோ என்னவெல்லாம் கவனிச்சிருக்கான் என அவள் எண்ணும் போதே அவன் எதையுமே அவளை கிண்டலாக சொல்லாமல் ஒரு செய்தியை பகிர்வது போலவே கூறிக் கொண்டிருக்க சகஜமாகினாள்.
புன்னகையோடு அவள் முகத்தைப் பார்த்தவன் அதிலும் அந்த எதிர்பாராத தாக்குதல் நடந்த போது நீ நடந்துக் கொண்ட விதம் இருக்கே அதில தான் நான் ஃப்ளாட்டானேன் என்றவனின் கண்கள் ரசனையாய் அவள் மேல் படிந்தது.
நாங்க எதிர்பார்த்த இடத்திற்கு முன்னாலேயே அவங்களுக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சு என்னை தாக்க வந்திருக்கிறாங்க, காரில் இருப்பது நான் மட்டும் தான்னு அவங்களுக்கு தகவல் கிடைச்சிருக்கணும். நான் மட்டுமா இருந்தா பரவாயில்லை உன்னை காரில் வச்சிட்டு எப்படி நான் அவங்களை சமாளிக்க போறென்னு திகைப்பா இருந்தது. அந்த நேரம் மட்டும் நீ சத்தம் போட்டிருந்தாலோ, ஏடாகூடமா ஏதாவது செய்திருந்தாலோ, அல்லது அசட்டுத்தனமா எனக்கு உதவுற மாதிரி வெளியே வந்திருந்தாலோ நிச்சயமா என்னால அந்த சிச்சுவேஷனை சமாளிச்சிருக்க முடியாது.
அவனுடைய பார்வையில் அன்றுத் தெரிந்தது பாராட்டா…எண்ணியவளுக்கு பெருமிதத்தில் முகம் மலர்ந்தது. அதே நேரம் அதுவரை அவனிடம் கண்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தவள் அவன் ஊடுறுவும் பார்வையில் அவளன்று வரை அறிந்திராத கூச்சம் தாக்க தலைக் குனிந்தாள்.
உன்னைப் பத்தி எனக்கு ஓரளவுக்கு எல்லாமே தெரியும். என்னைப் பத்தி நீயாவே தெரிஞ்சுக்கணும்னு நான் ஆசைப் பட்டேன், அதனால தான் உங்க அப்பாக் கிட்ட எதுவும் சொல்ல வேணாம்னு நான் ரிக்வெஸ்ட் பண்ணினேன்.
நான் என்னை இன்ரொடியூஸ் செஞ்சுக்கறேன். என் பேர் பிரவீர், அசிஸ்டண்ட் கமிஷ்னர் ஆஃப் போலீஸ், என்னோட ஜாப் 9 டு 6 ஜாப் இல்ல, எப்ப வேணா வேலைக்கு போக வேண்டி இருக்கும். ஃபெஸ்டிவல்ஸ்க்கு, பர்த் டே, ஆனிவர்ஸரிக்கு எல்லாம் வீட்ல இருப்பேன்னு கட்டாயமா சொல்ல முடியாது. வேலையில அடிக்கடி டிரான்ஸ்பர் வரலாம். ரிஸ்கான வேலை தான் ஆனால் அதே நேரம் எனக்கு என் வேலை மனசுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு. என்னை உனக்கு பிடிச்சிருக்கா?
ஆவலாய் அவளிடம் பதில் எதிர்பார்த்து அவள் மீது படிந்தது அவன் பார்வை. அவன் கேட்ட விதமே அவள் சாதகமான பதிலையே தர வேண்டுமென்பது போல எதிர்பார்ப்பை அணிந்திருந்தது.
பதிலே வராதிருக்க, மறுபடியும் என்னை உனக்கு பிடிச்சிருக்கா?” எனக் கேட்டவனின் கேள்விக்கு பதிலளிக்காதவளாய் அவனை தான் முதன் முறையாக பார்த்த போது அவனைக் குறித்து எண்ணியவற்றை அவள் பகிர்ந்துக் கொள்ள ஆரம்பித்தாள். காவலனாகிய அவனை கார்த்திருடனாக எண்ணியது குறித்து கூறியவள்………
அப்போ உங்க மீசையைப் பார்த்து ரொம்ப பயமா இருந்துச்சு… என்றவளாக நிறுத்தினாள்.
சாவகாசமாய் தன் மீசையை வருடியவன் அவள் கூறியது எண்ணிச் சிரிக்க, அவனோடு அவன் மீசையும் சிரிக்கின்றதோ? என்பது போல அவளுக்கு தோன்றியது.
இருவருக்குமிடையே சூழ்ந்த மௌனத்தை சட்டென்று கலைத்தவன்.
“இப்பவும் என் மீசையைப் பார்த்து பயமாயிருக்கா?” எனக் கேட்டான்.
நாணமாய் ‘இல்லை’ என்று தலையசைத்தவளின் பதிலில் அவன் எதிர்பார்த்த சம்மதம் கள்வனாய் ஒளிந்திருக்க, அதைக் காவலனாய் கண்டுக் கொண்டவன் அவளது கரத்தினில் தன் கரத்தைக் கோர்த்தான்.
அவனுடைய கரத்தின் வெம்மையை உணர்ந்தவளின் மனக் கண்முன்னே அன்பும், சாகசமுமான எதிர்கால வாழ்க்கை விரிய தன்னைக் காதலோடுப் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்களுக்குள் தன் கண்ணைக் கலந்தாள் அவள்.
நிறைவு.


Leave a Reply