அத்தியாயம் 12_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 12
சம்பூர்ணாவின் அதிர்ச்சி கண்டு விகாஷ் அதிர்ச்சியடையவில்லை. லிண்டாவை கண்டதும் இந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒரு மனபாதிப்பு அதன் விளைவாகத்தான் தன்னை அறியாமல் கூட அவள் அவனுக்கு பதிலளித்தது. இப்போது சம்பூர்ணாவை தான் எந்த விதத்திலும் சங்கோஜப்படும் படி செய்து விடலாகாது எனும் முடிவிற்கு வந்தவன் அவள் சொன்னது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என எண்ணிக் கொண்டவன் பேச்சை மாற்றினான்.
“பூர்ணா இந்த அறை டிசைன்ஸ் பெரும்பாலும் ஆனந்த் அறையின் மாதிரியை போலவே இருக்கின்றது பாரேன்” என தனது டேப் திறந்து காட்ட, சம்பூர்ணா அந்த புகைப்படங்களை ஆர்வமாக பார்க்கலானாள்.
அந்த நேரம் ‘இந்தண்ணா எதற்காக லிண்டா குறித்து கேள்வி கேட்டார்?’ என அவள் தனது மனதிற்குள்ளாக குமைந்தாலும் கூட உடனே பேச்சு மாறியதும் அவளுக்கும் கூட ஆசுவாசமே என்வே விகாஷ் காட்டிய புகைப்படங்களில் கவனம் செலுத்தினாள்.
விகாஷ் சொன்னதில் தவறில்லை. ஆனந்த் அதில் இருந்த அமைப்பு போலத்தான் இந்த வீட்டின் அமைப்பை அமைத்து இருந்தான். அதாவது இந்த ஒரு வீட்டை மட்டும் மற்றது சம்பூர்ணாவின் விருப்பம் போலல்லவா உருவாக்கப்பட்டது?
விகாஷ் காட்டிய ஆனந்தின் வீட்டின் புகைப்படங்களை பார்க்கவும் சம்பூர்ணாவிற்கு குற்ற உணர்ச்சி எழுந்தது. ஆனந்தும் விகாஷீம் இன்னும் பார்த்திராத இந்த ஃப்ளாட்டின் தொடர்ச்சியான அடுத்த ஃப்ளாட் அதாவது சம்பூர்ணாவின் விருப்பம் போல ஊர் அமைப்பில் உருவாக்கப்பட்ட வீட்டைக் குறித்து இப்போது கூச்சமாக இருந்தது.
‘அத்தான் வந்து அந்த ஃப்ளாட்டை பார்த்தால் என்னச் சொல்வார்களோ?’ என எண்ணினாள். வீட்டு உரிமையாளனுக்கு இல்லாத உரிமையா? நான் ஏன் அப்படி நடந்துக் கொண்டேன்? இப்போது நான் செய்தது அத்தானுக்கு பிடிக்காமல் போனால், மறுபடி அவற்றை நவீனமாக வடிவமைக்க வேண்டுமானால் அத்தானுக்கு செலவுதானே?’ என பலவிதமாக எண்ணியவள் நின்றுக் கொண்டே அந்த டேபிளில் விகாஷ் வைத்திருந்த டேப்ளெட்டில் இருந்த புகைப்படங்களை பார்த்துக் கொண்டு வர அடுத்து வந்த புகைப்படம் கவனம் ஈர்த்தது.
அந்த புகைப்படத்தில் பெட்டி பெட்டியாக அவ்வீடு நிறைந்திருந்தது. எங்கிருந்தோ பார்சல் செய்து கொண்டு வந்திருந்த பெட்டிகள் போலும்? அந்த பெட்டிகளில் இருந்த பொருட்கள் எல்லாம் அடுக்கப்படாமல் சீரற்று கிடந்த புகைப்படத்தின் மேல் கவனம் செலுத்தினாள். அது ஆறு வருட முந்தைய தேதி மற்றும் நேரத்தை காட்டியது.

