அந்த வீட்டிற்கு வந்தது முதலாக தனது நண்பனால் பாப்பு பாப்புவென அழைக்கப் பட்டிருந்த அந்தப் பெண் அவனது கவனம் ஈர்த்தாள்.
அளவாக பேசி, தன்னை வெளிப்படுத்தாமல் மிக அமைதியாய் அவள் உலா வந்த போதே அவனது கவனம் ஈர்த்தாள் எனில் அடுத்தடுத்த நிகழ்வுகளில் அவனை இன்னுமாக கவனிக்க வைத்தாள்.
முதன் முதலில் தந்தை இட்ட கட்டளைகளை எல்லாம் உடனுக்குடனே ஒரு தவ முனியை போல நிறைவேற்றிக் கொண்டு இருந்தவளை பார்த்த போது ‘இந்தப் பெண் எந்த காலத்தில் இருக்கின்றது?’ என அவனுக்குத் தோன்றியது என்னமோ உணமைதான். அடுத்து, பண விஷயத்தில் தன் நண்பன் எதையோ சொல்லப் போக தான் பணத்திற்காக வேலை செய்யவில்லை என முகத்திலடித்தாற் போல அவள் பதில் பேசிய போதுதான் அவனது புருவம் உயர்ந்தது.
அதற்கடுத்து அந்த டைரியும் அதில் எழுதி இருந்த பண விவரங்களும், அந்த கடைசி பக்கமும் அவளது நேர்மையையும், நிமிர்வையும் அப்பட்டமாக எடுத்துக் காட்ட, அவன் அவள் குறித்து மனதிற்குள்ளாக மிகவாக பிரமித்தான் எனலாம்.
ஆனால், கதவை திறக்க அவள் சென்று திறந்ததும் அவளது எதிரில் நின்ற லிண்டாவின் முகபாவனை இவனது பார்வைக்கு வந்த போதே ஏதோ சரியில்லை என இவனுக்குத் தோன்றவும், எதிரில் அமர்ந்து உண்டுக் கொண்டிருந்த தனது நண்பனுக்கு வீட்டிற்கு வந்தது யாரென அவன் தெரிவித்தான்.
“ஓ லிண்டாவா? இதோ ஆகிடுச்சு நான் கை கழுவிட்டு அவளை பார்க்க போகின்றேன்” என விகாஷீக்கு பதிலிருத்தவன் உணவில் கவனமான அதே நேரம் தான் கணேசனும் மகளிடம் வந்தது யாரென விசாரித்து இருந்தார்.
சம்பூர்ணா லிண்டாவிற்கு அமர இடம் கொடுத்து தள்ளி நின்று உபசரித்துக் கொண்டு இருந்தபோது விகாஷின் பார்வை வட்டத்திற்குள் வந்தாள்.
சம்பூர்ணாவை விகாஷ் மிக உன்னிப்பாய் கவனித்தான். ‘இத்தனையாக முகம் வாடுமளவும் லிண்டாவிற்கும் இந்த பெண்ணுக்கும் என்ன? அதுகாரும் உணர்வை காட்டாத கல்லாய் சமைந்திருந்த முகம் இதுவல்ல?’ விகாஷின் மனதில் ஏதோ சரியில்லை எனச் சொல்லி வண்டு குடைந்தது. விகாஷ் சுவாரஸ்யம் பாதி, ஆர்வம் மீதி என சம்பூர்ணாவை தொடர்ந்து கவனிக்கலானான்.

