Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

ஆனந்த் கைகழுவி விட்டு கணேசனிடம் வந்தவன் “வந்தது என் ப்ரெண்ட்தான் மாமா. நான் தான் நம்ம வீட்டு அட்ரஸ் இரண்டும் கொடுத்திருந்தேன். நான் அங்கே இல்லைன்னா இங்கே இருப்பேன்னு சொல்லி இருந்தேன்.”

“ஓ சரி, சரி. அவங்களையும் கூப்பிடுப்பா சாப்பிடட்டும்”

“அவங்க நம்ம ஊர் சாப்பாடு சாப்பிட மாட்டாங்க மாமா, ஹோட்டேலில் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டுதான் வந்திருப்பாங்க.இதோ போய் பார்க்குறேன்” என்றவன் வரவேற்பரைக்கு விரைந்தான்.

“ஹே லிண்டா, வாட் அ ப்ளெசண்ட் சர்ப்ரைஸ்.” என அவளுக்கு கைகுலுக்கி பேசலானான். அத்தானை அழைக்கவென உள்ளே திரும்பிக் கொண்டிருந்தவள் முன்பாக லிண்டாவை நோக்கி முகம் மலர்ந்தவனாக வரவேற்பு மொழி கூறிக் கொண்டு வந்தவனை என்னமோ பாவனையில் நோக்கியதும் கூட விகாஷின் கவனத்திற்கு தப்பவில்லை.

அவனருகில் வந்து நின்றவள் அவன் ஏறத்தாழ உண்டு முடித்து விட்டிருக்க, “கொஞ்சம் சோறு வைக்கிறேன் அண்ணா” என கடமையில் தவறாமல் அவனுக்கு பறிமாற வந்தாள்.

“ஆமாம் வை வை, தம்பிக்கு சோறு வையம்மா” கணேசனும் உபசரித்தார்.

“போதும்மா வயிறு நிரம்பிடுச்சு, அந்த பாயாசம் மட்டும் கொண்டு வர்றியா” என அவசரமாக அவன் கேட்டதில் புன்னகைத்தாள்.

“சரிண்ணா” என அவள் சமையலறை நோக்கி திரும்பிய நேரம் பிரசன்னா அழைத்தான்.

“அக்கா எனக்கு கொஞ்சம் சோறு, அப்புறம் சாம்பார், ஒரு கின்னத்தில ரசம், இன்னொரு கின்னத்தில் மோர், இரண்டு அப்பளம் அப்புறம் எனக்கும் மூணு கப் பாயாசம்” என்று படபடவென ஒப்பித்து விட்டு பிரசன்னா தனது இலையில் மும்முரமானான்.

“கொண்டு வரேன் டா, முதலில் அண்ணாக்கு கொடுத்திடுறேன்.”

“இட்ஸ் ஓகேகா, டேக் யுவர் டைம்” இன்னமும் கூட அவள் தம்பியின் கண்கள் அந்த இலையை தாண்டி எழவில்லை. 

பிரசன்னாவை விகாஷ் புன்முறுவலோடு பார்த்தவன், கை கழுவி வந்து அமர்ந்தான். சம்பூர்ணா கொண்டு வந்த பாயாசத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இரசித்து, ருசித்து உண்டுக் கொண்டு இருந்தான். 

சம்பூர்ணாவின் மனதில் ஏதோ கணக்கீடு எழவும் ‘அந்த லிண்டா அத்தானுக்கு பழக்கமெனில் இந்த அண்ணனுக்கும் பழக்கமாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால், அவர்கள் இருவரும் இவரை கண்டுக் கொள்ளவில்லையே?’ என்பது போலொரு எண்ணம் தோன்றி மறைய, விகாஷை ஒரு முறை பார்த்து பின்னர் பார்வையை விலக்கினாள்.

எல்லோரும் உண்டு முடிக்க, பாத்திரங்களை எல்லாம் ஒற்றை ஆளாய் எடுத்து வைத்துக் கொண்டு இருந்தவளிடம், “உதவட்டுமா?” என விகாஷ் கேட்கவும் புன்னகைத்து மறுத்தாள்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!