Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“சம்பூர்ணா, அவர்களும் எத்தனை நேரம்தான் காத்திருப்பார்கள். ஆனந்த் தம்பி மற்றும் அவர் நண்பர்கள் அவர் வீட்டை பார்க்க வேண்டாமா? இதற்காகவே வந்திருப்பவர்களை நாம் தாமதப் படுத்தலாமா? என்னம்மா நீ” அப்பா அவளிடம் சலித்துக் கொண்டார்.

‘என்னவோ இவ்வளவு நேரம் இவர் மகள் ஊஞ்சலில் ஆடிக் கொண்டு உல்லாசமாக இருந்ததில் தாமதம் ஆனதை போல குற்றம் சாட்டுகின்றாரே? இவ்வளவுக்கும் இந்தப் பெண் இன்னும் உண்ணவே இல்லை. அது குறித்து யோசிக்கக் காணோம்’ என விகாஷ் கணேசனின் மீது மனத்தாங்கல் ஏற்பட்டவனாக பார்த்திருந்தான்.

அங்கே அவ்வீட்டின் முன்னறையிலேயோ ஆனந்தும், லிண்டாவும் வெகு வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தவர்களை போல தன்னை மறந்த பேச்சில் இருந்தனர்.

அப்பா சொல்லவும் சம்பூர்ணா “இப்ப போறேன்பா” என அவசரமாக பாத்திரங்களை எடுத்தவள் அவைகள் தடுமாறி கீழே விழப் பார்க்கவும்,

“என்னதான் அவசரமோ?” என மறுபடியும் கடிந்தார்.

படபடவென்று வேலையை முடித்தவள், தனது கைகளை கழுவி, துடைத்து ஆனந்தின் வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள்.

“அப்பா வர்றீங்களா?” என்றவளிடம், “நீ போம்மா, எனக்கு களைப்பாக இருக்கு தூங்கப் போகின்றேன்” என்றவராக தனது அறைக்குள் நுழைந்துக் கொண்டார்.

“பிரசன்னா…” தம்பியை துணைக்கு அழைத்துப் பார்த்தாள்.

“ஐயாம் பிசிக்கா” என அவன் தனது மொபைல் கேமை காண்பித்தான்.

“நீங்க வாங்கண்ணா, நாம போகலாம்” என விகாஷை அழைத்தவள் அவனுக்கு முன்பாகச் சென்றாள். இருவரும் முன்னறைக்கு வந்த போதோ லிண்டாவும், ஆனந்தும் மரியாதைக்குரிய இடைவெளியில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அவர்கள் பேச்சை இடையூறு செய்யாமல் சில நொடிகள் நின்ற சம்பூர்ணா,

“அத்தான்” என ஆனந்தை ஓரிரு முறைகள் மெதுவாக அழைத்துப் பார்த்தாள், ஆனந்தின் கவனமோ சற்றும் கலையவில்லை. அந்த நேரம் விகாஷ் அவர்கள் இருவரின் நடுவில் புகுந்தான்.

“ஹாய் லிண்டா” என அவள் முன் போய் நின்றான், ‘வந்து விட்டானா இடையூறாக?’ என்பது போலொரு பார்வையை லிண்டா அவன் மீது பதித்தவளாக இருந்த போதும்,

“ஹே வீகாஸ், ஹவ் டு யூ டூ?” என பேசி கைகுலுக்கிக் கொண்டாள். அவள் அவனிடம் பேச அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. 

விகாஷீம் லிண்டாவும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் சம்பூர்ணா ஆனந்தை அழைத்து, “நாம் வீட்டை பார்க்கச் செல்லலாம்” என கேட்டிருக்க,

“ஓ போகலாமே” என ஆனந்த் எழுந்து நின்றான். 

ஆனந்த், லிண்டா, விகாஷ், சம்பூர்ணா நால்வரும் வெளியே வரவும் சம்பூர்ணா தங்கள் வீட்டுக் கதவை இழுத்து சாற்றினாள், அது பூட்டிக் கொண்டது. அடுத்து இருந்த இரும்புக் கதவையும் இழுத்து விட்டாள்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!