Epi 11_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அவர்கள் அங்கிருந்து சில எட்டுக்கள் எடுத்து வைக்கவும் ஆனந்தின் வீடு வந்தது. அதன் வெளித் தோற்றமே அத்தனை அட்டகாசமாக இருந்தது. ஆனந்த் சுவாரஸ்யமாய் தனது வீட்டை பார்த்தான், லிண்டாவிற்கும் விகாஷீக்கும் தனது வீட்டை அறிமுகப்படுத்தினான்.

லிண்டாவோ தான் முதன் முதலில் இங்கே வந்து விட்டுதான் அங்கே வந்ததாகவும் தனக்கு இதுதான் ஆனந்தின் வீடு எனத் தெரியும் எனவும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

அவன் முன்பாக சாவியை நீட்டிய சம்பூர்ணா “அத்தான், இதோ வீட்டுச் சாவி திறங்களேன்” நீட்ட,

“நீயே திறவேன் பாப்பு” என்றான் ஆனந்த்.

“ம்ம்” என்றவளாக அனைவர் முன்பாகச் சென்றவள், ஆனந்தின் கதவை சாவியிட்டு சுழற்றி பூட்டை திறந்து விட்டாள். இப்போது இரண்டுக் கதவுகளாக இருந்த அந்த கனமான புதுக் கதவுகளை திறக்க முயல, வழக்கம் போல சற்று சிரமப் பட்டாள். அதனைக் கண்டதும் ஆனந்த் வலதுபக்கம் இருந்த கதவை தனது கையை வைத்து தள்ளினான்.

வலது பக்கக் கதவை ஆனந்த் திறந்து உள்ளே சென்ற தருணம், இடதுக் கதவை திறந்தவளாக சம்பூர்ணாவும் உள் நுழைய இருவரும் ஒருபோல வீட்டிற்குள் சென்றதை பின்னே நின்றுப் பார்த்த விகாஷீக்குள் புது எண்ணம் ஒன்று முகிழ்த்துத் தொலைத்தது. அவர்கள் பின்னே விகாஷீம், லிண்டாவும் வீட்டின் உள்ளே நுழைந்தனர்.

அந்த வீடு நட்சத்திர ஹோட்டேலின் அறை போல மிக ஆடம்பரமாகவும், பெரியதாகவும் இருந்தது அந்த வரவேற்பரை. அதற்கடுத்த இரண்டு அறைகள், நவீன வகை ஓப்பன் டைப் சமையலறை, டைனிங்க் டேபிள், சேர்கள், சுவற்றில் இருந்த நவீன வகை ஓவியங்கள். ஒவ்வொரு பகுதியிலும் இருந்த அலங்காரப் பொருட்கள் கண்களை கொள்ளைக் கொண்டன.

சுற்றி வரப் பார்த்தவன்,

“அசத்தலா இருக்கு பாப்பு, நன்றிமா” உளமாரச் பாராட்டவும் சம்பூர்ணா முகம் மலர்ந்து சிரித்தாள்.

அங்கிருந்த இருக்கை ஒன்றில் ஒய்யாரமாக அமர்ந்துக் கொண்ட லிண்டா ஆனந்தை அழைத்து தன்னருகில் இருத்தி பேசிக் கொண்டு இருந்தாள்.

‘அவ்வீட்டில் தான் மெனக்கெட்டு செய்த சில பல விஷயங்கள் இருக்க, அத்தான் அவைகளை குறித்து எதையாவது சொல்வானா? பாராட்டுவானா?’ என வெரிகுட் வாங்கிய சிறுமி பெற்றோரின் பாராட்டுக்காக ஏங்கி நின்றதைப் போல சம்பூர்ணா அத்தானையே பார்த்து நின்றாள்.

தனது எண்ணத்தில் ஆழ்ந்திருந்தவளுக்கு அவளது உணர்வுகள் ஒவ்வொன்றையும், குறிப்பாக அவள் பார்வை லிண்டாவையும், ஆனந்தையும் பார்க்கும் போதெல்லாம் சின்னதாக வலியோடு பார்த்துக் கடந்ததையும் இன்னொருவன் கவனித்துக் கொண்டு இருக்கின்றான் எனும் உணர்வு எழவே இல்லை.

சற்று நேரத்தில் லிண்டாவிற்கு அழைப்பு வரவும் ஆனந்தின் கைகளை பற்றி வாழ்த்து சொன்னவள் தனது பையில் இருந்து அலங்காரத்தாளால் சுற்றப்பட்ட சின்னதான ஒரு பரிசை எடுத்து ஆனந்தின் கைகளில் திணித்தாள்.

“நான் கீழே வாடகை காரை நிறுத்தி அரை மணி நேரம் மட்டும் நிற்கச் சொல்லி இருந்தேன். உனது வீட்டை பார்த்ததில் மகிழ்ச்சி, நேரமாகி விட்டது சென்று வருகின்றேன்” என எழுந்தாள்.

“ஓ சரி சரி” என எழுந்த ஆனந்த்,

“இதோ நான் லிண்டாவை விடை அனுப்பி விட்டு வருகின்றேன்” என்றவனாக விகாஷ் மற்றும் சம்பூர்ணாவிடம் பொதுவாகச் சொல்லிவிட்டு அவளுடன் கீழே சென்றான்.

Pages: 1 2 3 4 5 6

error: Content is protected !!