“ஸ்கூலா? எந்த ஸ்கூல்? எத்தனாம் வகுப்புக்கு நீ டீச்சர்?” என விகாஷ் கேட்க இது நேரம் வரைக்கும் பேசி அறியாதவள் போல இருந்தவள் இவள் தானா? என ஆச்சரியப்பட வைப்பது போல தனது வேலை குறித்து விகாஷிடம் மிக இலகுவாக பேசிக் கொண்டிருந்தாள்.
அதனை கவனித்த ஆனந்திற்கு அவள் இலகுவாக பேசியதே மனதிற்கு திருப்தியாக இருந்தது.
‘மாமாவின் அதிகாரம் அடக்குமுறையில் தான் இவள் பேச்சற்றவள் போல அமைதியாக இருக்கின்றாள், மற்றபடி என் பாப்புவின் இயல்பு மாறவில்லை’ என எண்ணிக் கொண்டான்.
ஆனந்தை திரும்பி பார்த்தவள், “அத்தான் அடுத்த ஃப்ளாட் நீங்க இன்னும் பார்க்கலை” என தயக்கமாகச் சொன்னாள்.
“ஆமாம் பாப்பு, சில புகைப்படங்களை காண்டிராக்டர் அனுப்பி இருந்தார், நேரில் பார்த்துக் கொள்ளலாமென எண்ணி நான் அவற்றை பார்க்கவில்லை” என புன்னகைத்தான்.
கான்டிராக்டர் இவளை குறைச் சொல்லிதான் புகைப்படங்களை அனுப்பி இருக்க வேண்டும் என அவளுக்கு புரிந்ததால் சப்தமில்லாமல் அவர்கள் முன்னே நடந்தாள்.
இரண்டு வீடுகளுக்கும் நடுவில் ஒரு பெரிய அகலமான கதவில்லாத திறப்பு இருக்க மூவரும் உள்ளே நுழைந்தனர். அந்த வீடு அச்சொட்டாக ஆனந்தின் கிராமத்து வீட்டின் தன்மையை கொண்டிருந்தது. சுவர்கள், தூண்கள், சாமியறை எல்லாமும் என்றால் எல்லாமும் தான்.
‘திட்டுவானோ? எதையும் சொல்வானோ?’ என எண்ணியவளாக அவள் பயந்து திரும்பி பார்க்க ஆனந்தின் முகபாவனைகளை அவளால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. விகாஷின் திறந்த வாய் மூடாமல் திறந்தே இருக்க, திரும்பியவன் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.
ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றவர்களைக் கண்டு ஒன்றும் அனுமானிக்க முடியாமல் தனது செயலின் எதிர்வினை என்னவாக இருக்கும் எனப் புரியாமல் சம்பூர்ணா அவர்களை மிரட்சியாக பார்த்திருந்தாள்.
ஆனந்த் சுய நினைவிலேயே இல்லாதவன் போல எதனாலோ செலுத்தப் பட்டவன் போல அந்தச் சுவற்றை நெருங்கினான் அந்த சுவற்றில் அவன் தாய் தந்தையுடன் இருந்த புகைப்படம் பெரிதாக்கி மாட்டப் பட்டு இருந்தது. தாயின் புகைப்படத்தை வருடிப் பார்த்து உணர்ச்சிப் பிழம்பாக நின்றிருந்தவன் கண்களில் நீர் சேர்ந்திருந்ததோ என்னமோ?
விகாஷ் அவன் தோளில் கை வைக்க அவன் கையை இவன் பற்றிக் கொண்டான்.
“பாப்பு” அழைத்த வண்ணம் அவள் அருகில் வந்தவன் அவள் கைகள் இரண்டையும் பிடித்து, தன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.

