“சம்பூ, ஆனந்துக்கும் அவர் நண்பருக்கும் தேனீர் அல்லது குளம்பி என்ன வேண்டுமேன கேட்டு போட்டு கொடு” என்க ஆனந்த் அவரை உள்ளே அழைத்து வந்தான்.
“எதே குளம்பியா?” என விகாஷ் சத்தமாய் சிந்திக்க அருகிருந்தவள் புன்னகைத்து
“குளம்பினா காஃபிண்ணா?”
“அப்புறம் இன்னொன்னு சொன்னாங்க ஹனி தானே அது?”
“அது… தேனீர் சொன்னா டீன்னு அர்த்தம்”
“ஓகே ஓகே”
உள்ளே வந்து பார்வையிட்டவரிடம்
“எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு மாமா, எல்லாம் உங்க உதவிதான்” என்க,
“அதில் என்ன இருக்கு தம்பி?” என பேச ஆரம்பித்தவர்,
“சம்பூ நீ இன்னும் செல்லவில்லையா? போ போ உங்களுக்கு என்ன வேணும் தம்பி தேனீரா? குளம்பியா?” எனக் கேட்டார்.
“அதெல்லாம் எதுக்கு அங்கிள், வயிறு இன்னும் டொம்முன்னு தான் இருக்கு” என்க,
“அப்படின்னா நிறைய இஞ்சி போட்டு தேனீர் ஆயத்தம் செய்யம்மா” என மகளை அனுப்பி வைத்தவர்
“நானும் என் நண்பனும் எப்படியோ அப்படித்தான் எங்க புள்ளைங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும் என சம்பூவிடம் சொல்லி எல்லாவற்றையும் செய்ய வைத்தேன் தம்பி. அவள் வேலை செய்யும் போது இடையூறாகும் என என்னை வீட்டிற்குள் வர விடவே மாட்டாள். இதோ இப்போதுதான் எல்லாவற்றையும் முதன்முறை பார்க்கிறேன்” என்றவராக சுற்றும் முற்றும் பார்வையிட்டார்.
‘அப்பாவிற்கு தப்பாத மகள்’ என எண்ணிய நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர்.
ஆனந்த் வீட்டை பூட்டி வர, தேனீர் அருந்தி அளவளாவிக் கொண்டு இருக்கையில் மாலையாக விகாஷ் மும்பை விமானத்திற்காக புறப்பட்டான். தான் கொண்டு வந்திருந்த பரிசுப் பொருளை பிரசன்னாவிற்கும் சம்பூர்ணாவிற்கும் கொடுத்தான்.

