Epi 13_Thurathum Nizhalgal_Jansi

குரல் நடுங்கினாலும் கூட, “அம்மா க்ரீட்டிங்க்ஸ் செய்யப் பொறேன்” என்று அவள் சொல்லி மாடி அறைக்குச் செல்லவும், எப்போதும் பென்சில் டிராயிங்கில் மூழ்கி இருக்கும் மகளைப் பற்றி தெரியுமாதலால் செல்வி அதனை பெரிது படுத்தவில்லை. 

ரிஷாவின் மனதில் சுந்தர் குறித்த வெறுப்பின் வித்து விழுந்தது அன்றுதான், அது தினம் தோறும் பரவி படர்ந்து கிளைப் பரப்பி மரமாகிக் கொண்டிருந்தது. 

தவறு செய்தது அவன், ஆனால், பயம் கொண்டது இவள்.


இதுதான் பாலுறவு அத்து மீறல்களில் நடக்கும் முரண்பாடான உளவியல். 

அடுத்தவர் உடலை அவர் அனுமதி இன்றி வருடவும், அசிங்கமாய் அணுகவும் துணியும் ஆண்களுக்கு அது தவறென்றே புரிவதில்லை.


பயத்தை விடவும், தன் ஆண்மையின்(?), தைரியத்தின்(?) வெளிப்பாடாக கருதி ஆண் தன் தவறில் கர்வம் கொள்கிறான், பெருமிதம் அடைகிறான். 


ஆனால், ஒரு தவறுமே செய்யாத பெண்ணின் மன நிலை என்னவாக மாறுகிறது?

முதலில் பயம் எழுகின்றது, தன் உடலை தானே காப்பாற்றிக் கொள்ள இயலாத கையாலாகாதத்தனம் கொண்டு வரும் பயம் அது.

அதன் பின்னர்… ஒரு மூட ஆணின் தரம் தாழ்ந்த செயலால் தன் உடலின் மீதே எழும் வெறுப்பின் உச்சமாக எழும் அருவருப்பு உணர்வு, அதன் பின்னர் சாதாரணமாக எதிர்க்கொள்ள வேண்டிய காதல் உணர்வும், திருமணத்திற்கு பின்னதான இல்லறமும் இந்த பெண்களுக்கு கசந்துப் போகின்றது.


எவனொருவன் தன் அகங்காரத்தினால் தவறு செய்கிறானோ அவன் நிம்மதியாக இருக்க, தவறே செய்யாதவளாக அத்தனை தண்டனைகளையும் அனுபவிப்பவள் பெண். இது முரண்பாடன்றி வேறு என்ன?

அதன் பின்னரும் சுந்தர் தன் அன்றைய தின லீலைகளை நிறுத்திக் கொண்டான் இல்லை, அல்லது அவனுக்குள்ளாக இருந்து இயக்கிக் கொண்டிருந்த மதுபானம் நிறுத்த விடவில்லை எனக் கூறவும் வேண்டுமோ? 

வெளியே பெரிய பெரிய வெடிகளை அந்த தெருப் பிள்ளைகள் ஒரு திண்டில் வைத்து வெடித்துக் கொண்டிருக்க சுந்தர், அந்த திண்டில் சென்று அமர்ந்துக் கொண்டான். 

மறுபடி சென்று இரண்டு மூன்று முறை ஏற்றி இருந்த போதை அவனுக்கு ஏராளமான விஷயங்களை செய்ய தைரியம் கொடுத்தது.

பெரிய வெடிகளை வெடிக்கும் போது அதன் அருகில் அமர்ந்து இருப்பது அவனுக்கு மிகவும் கெத்தாக இருந்தது. தயங்கிய சிறுவர்களை அங்கேயே வெடிகளை வெடிக்கச் சொல்லி ஊக்கப் படுத்தினான். அவனே வேண்டாம் எனச் சொல்லாத போது அவர்கள் எதற்காக நிறுத்தப் போகிறார்கள்?

அக்கம் பக்கத்தவர் வந்து செல்வியிடமும், சுந்தரின் அண்ணிகளிடமும் அவனைப் பற்றி சொல்லி செல்ல, எப்போதும் அமைதியாக இருப்பவனுக்கு இன்று என்னவாயிற்று? என ஒன்றும் புரியாதவராய் பெண்கள் விழித்துக் கொண்டிருந்தனர். 

குடி போதையில் மிகவும் வித்தியாசமாக நடந்துக் கொள்ளும் அவனருகே செல்லவும் எல்லோருக்கும் மிகவும் பயமாக இருந்தது. எனவே, ஆண்கள் வேலை முடிந்து வர அவர்கள் காத்திருந்தனர்.

அப்போதுதான் சண்முகம், அரங்கநாதன், சந்திரன் அங்கு வந்து சேர்ந்தனர். சண்முகம் சுந்தரின் செய்கைகளைப் பார்த்து வெறுப்பாக உள்ளே சென்று விட்டார். 

அண்ணன்களோ அவனிடம் போய் பேசியும் அவன் அங்கிருந்து நகரவே தயாரில்லை. அத்தனை நாட்கள் சேர்த்த தன் நற்பெயரை ஒரே நாளில் குடியால் இழந்து, அக்கம் பக்கம் எல்லாம் தன்னைத் தானே அசிங்கப் படுத்திக் கொண்டு இருந்தவனை, இருவரும் திமிர திமிர, சண்முகத்தின் வீட்டுக்குள் உள்ளே இழுத்துப் போட்டனர்.

கீழே நடக்கும் அத்தனை களேபரங்களின் சப்தங்களையும் ரிஷா மேலிருந்து தடதடக்கும் மனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள். இன்று ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என அவளுடைய மனது படபடவென அடித்துக் கொண்டது. தன்னருகே பயந்து அமர்ந்துக் கொண்டிருந்த பிள்ளைகளை அணைத்துக் கொண்டாள்.

கீழே சுந்தரோ சம்பந்தமே இல்லாமல் எதை எதையோ சொல்லி அவர்களிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். எதற்காக அவன் அப்படி நடந்துக் கொண்டிருக்கிறான்? என புரியாதவர்களாக அவனிடம் பதில் வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணத்தில் அவன் பேசுகின்றதற்கெல்லாம் பதிலளித்துக் கொண்டும், கேள்விகள் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.

கடைசியில் வெடித்தே விட்டான்,

“நான் இவர்கள் மகளை இவர்களை விட நன்றாக பார்த்துக் கொள்வேன், எனக்கு கட்டித் தரச் சொல்” என்று,

கேட்ட அனைவருக்கும் அதிர்ச்சி, அப்படியே சமைந்து விட்டனர். மாடியிலோ ரிஷா நடு நடுங்கிக் கொண்டிருந்தாள். சுந்தரின் அண்ணன்கள் வெகு சிரமப் பட்டு, எப்படியோ அவனது அறை வரைக்கும் அவனைக் கொண்டு சேர்த்து விட்டு வந்தனர்.

ஒருவர் ஒருவரோடு யாரும் இது குறித்து பேசிக் கொள்ளவில்லை, எல்லோருக்குமே சுந்தருக்கு ரிஷா மீது இப்படி ஒரு நோக்கம் இருக்கும் என்று ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அந்த தீபாவளி அவர்களுக்கு மிகவும் தர்மசங்கடத்துடனே கடந்துச் சென்றது. ஊருக்கு சென்று திரும்ப வந்த மைதிலிக்கு தன் தம்பி இப்படி மானத்தை வாங்கி விட்டானே என வெகு அவமானமாக இருந்தது.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!