தன்னுடைய தகப்பன் சரியில்லாததால் மாமாவின் உதவிக் கொண்டே அனைவரின் வாழ்க்கை சிறந்திருக்க, எல்லோரும் அவரைப் புகழ்வது மைதிலிக்கு அவ்வளவாக பிடிக்காது.
என் தம்பிகள் உழைப்பு தானே? இதற்கு எதற்கு இந்த மாமாவை ஊரில் எல்லோரும் புகழ வேண்டும் எனும் காய்மகாரம் அவள் உள்ளத்தில் உண்டு.
தற்போது ஊர்மெச்ச திருமணம் செய்து தானும் பிறர் மதிக்க வாழ்வதால், நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்பதான ஆணவ போக்குகளும் உண்டு.
அதனால் தான் போயும் போயும் அந்த மாமா மகளுக்காகவா இவன் இத்தனை அசிங்கமாய் நடந்துக் கொண்டிருக்கிறான்? தன் வீட்டினர் மறுபடி அவர் காலில் விழுந்தது போல அவளுக்கு கூசியது. நேரம் வரும் போது இதை சரிப்படுத்த எண்ணினாள். எல்லாவற்றையும் தான் தான் சிதறடிக்க போகிறோம் எனத் தெரியாதவளாக…
அத்தனை நிகழ்ந்த பின் முதலில் வெட்கப் பட்டுக் கொண்டு மாமா வீட்டிற்கு வராது இருந்த சுந்தர், பின்னர் மாமா வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தான்.
இப்போது தன் காதலை ஊர் உலகம் அறிய சொன்ன பெருமை வேறு அவனில் கூடிப் போயிருந்தது. ஆனால், அவன் வருவதையோ, போவதையோ ரிஷா கண்டுக் கொள்வதில்லை, முன்பை விட அதிகமாக படிப்பில் தீவிரமாய் ஆழ்ந்தாள்.
அவளுடைய பாராமுகத்தைக் கண்டு செல்வியிடமே போய் “அத்தை ரிஷா என்னிடம் இப்போதெல்லாம் பேசுவதில்லை, அவளை என் கூட பேசச் சொல்லுங்கள்” என்று தைரியமாக கேட்டு நிற்க, ரிஷா எதற்காக அவனிடம் பேசுவதில்லை என்று அறியாதிருந்தாலும் என்னடா இவன் என்னிடமே வந்து இப்படி கேட்கிறான்? என்று செல்வி அதிர்ந்தார். ஆனாலும் கூட தன்மையாகச் சொல்லிப் பார்ப்போம் என்றவராக,
“சுந்தர் இங்க பாருப்பா நீ ரிஷா மேல ஆசைப் படறது எல்லாம் சரிதான், ஆனா அவ இப்ப ஸ்கூல் போய் படிச்சிட்டு இருக்கிற சின்னப் பொண்ணுப்பா,. அவளுக்கு குறைஞ்சது 18 வயசாவது ஆகட்டும், அப்புறம் அவளுக்கு உன்னை பிடிச்சிருந்தா கட்டித் தரோம், இப்ப அவ ஏன் பேசலைன்னு தெரியலை, ஒருவேளை பயந்து இருப்பா, கொஞ்ச நாளைக்கு அவளை தொந்தரவு பண்ணாதேப்பா”, என்றார்.
உறவுக்குள்ளான இந்த சிக்கலை எப்படி தீர்க்க என அவருக்கு புரியவில்லை. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக பேசி அவர் முடிவெடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சுந்தருக்கு வாலிப வயசு, கோளாறு அதனால் இப்படி பேசுகிறான். சில வருடங்கள் போனால் எல்லாம் நன்றாகி விடும் என்று அவர் எண்ணினார். கணவனுடைய இரத்த உறவுகள் என்ற முறையில் அவர்களை அவரால் பகைத்துக் கொள்ள முடியவில்லை.
ஆனால், அவன் மனதிற்குள் என்ன இருந்ததோ? தன்னுடைய வரம்பு மீறிய செயல்களால் தான் அவளின் வெறுப்புக்கு ஆளாகி விட்டோம் என்பதை உணராமல் தன்னையே முக்கியப்படுத்தி, முன்வைத்து அவன் நடந்துக் கொண்டிருந்தான்.
அப்படியாவது ரிஷா தன்னிடம் முன் போல பேசிவிட வேண்டும் எனும் வைராக்கியம் அவனை வழி நடத்தியது. தான் என்கிற அல்லது ஆண் என்கிற ஏதோ ஒரு அகங்காரம் அவனை பிடித்தாட்கொண்டு இருந்தது.
பொதுவாகவே ஆண்களுக்கு தாங்கள் விரும்பிய உடன் அந்த பெண்ணும் சரி என்றுச் சொல்லி விட வேண்டும் எனும் அகங்காரம் உண்டே? இவனும் அது போலவே நடந்துக் கொண்டான்.
தன்னுடைய மனதிலுள்ள ஆசையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதி தனியாக அவளைக் கண்ட போது அவளிடம் நீட்டினான்.
அவளோ அவன் மேல் இருந்த வெறுப்பில் அதை துண்டு துண்டாக கிழித்தாள். அவனைக் காணும் பொதெல்லாம் தேகம் எங்கும் அவன் அநாகரீகத் தீண்டல் தீயை மூட்டிச் சென்ற போது காட்ட முடியாத எதிர்ப்பை கடிதத்தில் காட்டினாள். அதை வாசிக்கவும் அவளுக்கு எண்ணமில்லை.
அதை அவள் எறியும் முன்னே கையில் ஏந்தியவன் மனமொடிந்தவனாக அங்கிருந்துச் சென்றான். இப்போது அவனுடைய மனம் வேறு விதமாக சிந்திக்கலாயிற்று.
அவள் தன்னை நேசிப்பது என்னவோ நிஜம், அதுதான் ஏற்கெனவே நிரூபணமாகி விட்டதே, ஆனால், அன்று தான் எல்லோர் முன்பும் சொன்னதற்கு பின்னர் மாமாவும் அத்தையும் பேசி அவளுடைய மனதை மாற்றி விட்டிருக்கின்றனர். அதனால் தான் அவள் தன்னுடன் பேச மாட்டேன் என்கிறாள் என்று திட்டவட்டமாக நம்பினான். தான் அவளை அந்தரங்கமான இடங்களில் தொட்டது அவனுக்கு தவறாகவே படவில்லை.
நாட்கள் கடந்தன, அவனுடைய தவிப்பு கூடியது. மனதில் எந்நேரமும் ஒரே எண்ணம் ‘அவள் தன்னுடைய பெற்றோரின் பேச்சைக் கேட்டு மனம் மாறி விட்டாள் அவர்கள் என்னிடமிருந்து ரிஷாவை பிரித்து விடுவார்கள்’ கிறுக்கனாய் மாறாத குறையாக அவனை அந்த எண்ணங்கள் பாதித்தன.
இன்னும் சில நாட்கள் இதே எண்ணங்கள் சூழ வலம் வந்தவன் சாதரணமாக மாமா வீட்டிற்கு வருவது போல அன்றும் வந்தான். அங்கு மற்றவர்களும் இருக்க, ரிஷாவிடம்,
“நீ ஏன் என்னிடம் பேசுவதில்லை, என்னை என்னவென்று நினைத்திருக்கிறாய்?’
என நேரடியாக கேட்டான். ஏற்கெனவெ கோபத்தில் இருந்தவளின் இயல்பான துடுக்குத்தனம் வெளிப்பட்டது. இவன் என்ன ஸ்பெஷலா ? இவன் சொன்னதும் உடனே பேசி விட வேண்டுமா? என்கின்ற எண்ணம் தான் பதிலாக வெளிப்பட்டது.
“நான் உன்னை மனுசனாய் தான் நினைத்திருக்கிறேன்”, என்றாள்
அவள் பதிலில் என்ன எண்ணினானோ ரிஷாவை பாய்ந்து வந்து அடிக்கலானான். நீ என்னிடம் எப்படி பேசாமலிருக்கலாம்? என்பதே அவனுடைய வாதமாக இருந்தது.அத்தனை பேரும் சேர்ந்து அவளை அவனிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு தனித்து விட்டனர்.
மைதிலியோ அங்கு வந்தவள் தம்பியை கன்னம் கன்னமாய் அறைந்தாள். அவனால் தங்கள் குடும்ப மானமே போவதாக உணர்ந்ததால் மிகவும் தரக் குறைவாக பேசி, இனி ஒரு முறை இங்கு வந்து விடாதே என விரட்டினாள்.
அன்று சென்றவனை அதன் பின் யாரும் காணவே இல்லை. எங்குச் சென்றான்? என யாரும் அறியவும் இல்லை. இன்றோ இப்போது இப்படி காண்போம் என்றும், தன்னை துரத்தும் காரணியாக, தன் உயிரை பாதுகாக்கும் ஓட்டத்தின் பின்னால் இவனே இருப்பான் என்றும் அவள் அறிந்திருக்கவில்லையே?
ரிஷா அரைமயக்கத்தில் கண்விழிக்க முயலுகையில் அதன் பின் அவன் என்னவானான் என்பதை இருவர் பேசிக் கொள்வதை கேட்டுக் கொள்ள நேர்ந்தது….கண் விழிக்க முடியவில்லை..அவள் தலை மட்டும் பாரமாய் இருந்தது.
தொடரும்


Leave a Reply