நறுவிசாக சேலை அணிந்து வந்தவளை, “போ போய் அந்த பட்டுச் சேலையை கட்டி வா” என விரட்டினார். அந்த அகலமான கரை கொண்ட பட்டுச் சேலையை அவள் கட்டி வந்த போது தனது தாயை போலிருந்தாள். ஒரு நிமிடம் பார்வதி அத்தையை நேரில் கண்டது போல ஆனந்த் உணர்ந்தது என்னமோ உண்மை.
இருந்தாலும் அந்த கனத்த சேலை இவளுக்கு அவ்வளவாக பொருத்தமாக இல்லை. பழங்காலத்து பெண் போல தோற்றமளித்தாள், இதற்கு அவள் முன்பு அணிந்திருந்த உடைகளே நன்றாக இருந்தனவே என ஆனந்த் எண்ணிக் கொண்டான்.
தந்தை தன் அருகில் ஆனந்த் தனது தந்தையுடன் பேசிக் கொண்டு இருந்தான்.
“ஆனந்து பாப்பா உன் பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யறேன்னு சொல்லிட்டு இருந்தா அவளுக்கு அத்தனை பணத்தையும் கணக்கில வச்சா வருமானவரித் துறைக்கு கணக்கு காட்டணுமாம் பிரச்சனையாகுமாம்.”
சம்பூர்ணாவிற்காக பேசிக் கொண்டு இருந்த அப்பாவை பார்த்து ஆனந்த் கடுப்பானான்.
“அப்பா பாப்பு செய்திருக்கிற வேலைக்கு அந்த பணம் ரொம்ப குறைவுதான்பா, கொடுத்தாலும் வாங்க மாட்டேங்கிறா…எப்ப பாரு கணக்கு நோட்டோடே திரியுறா… கடுப்பாகுதுப்பா. அப்புறம் வாங்குறேன்னு சொல்லி இப்போதைக்கு தடுத்து வச்சிருக்கிறேன் மத்தபடி அது அவளுக்கு சேர வேண்டிய பணம் தான்பா.”
“செஞ்ச வேலைக்கு பணம் கொடுத்தா அவ என் மருமவ இல்லன்னு அர்த்தமாம்.”
“போங்கப்பா நீங்களும் உங்க மருமவளும்”
“உனக்கு எப்ப டிக்கெட் ஆனந்து?, நான் நாளன்னிக்கு ஊருக்கு போகணும். வா வந்து ஊர் பக்கம் வந்துட்டு போ.”
“வரேன் பா, நானும் அதுதான் யோசிச்சுட்டு இருக்கிறேன். இவ்வளவு தூரம் வந்துட்டு நம்ம ஊருக்கு வராம எப்படி?”
“ஊருக்கு வர்றியா? நல்ல விஷயம்… ஊருக்கு வந்து போக லீவு எடுக்கலாம் தானே?”
“அதுக்கென்ன? நம்ம வேலைதானேப்பா… ஆனால் எவ்வளவு லீவு எடுக்கிறேனோ அவ்வளவு வேலை கூடும். போய் இராப்பகலா வேலை செஞ்சா போச்சு.”
“ம்ம்”
“நாளைக்கு கொஞ்சம் ஊர் சுத்த ப்ளான் பா, நீங்களும் வாங்கப்பா”
“நான் இவ்வளவு தூரம் வந்ததே பெரிசு, முன்ன மாதிரி உடல் நிலை இல்லை”
“அப்படி சொல்லாதீங்க” அவர் கையை பிடித்துக் கொண்டான்.
“உங்களை கவனிக்காம விட்டுட்டேன்ல?” குற்ற உணர்ச்சி தெரித்தது.
“அதெல்லாம் ஒன்னுமில்ல தம்பி, அப்பப்ப வந்து பார்த்துட்டு போ. நீ உன்னோட வேலையில் முன்னேறி நல்லா இரு அதுதான் உங்க அம்மா ஆசை.”
“உங்களுக்கு என்ன ஆசைப்பா?”
“ஒரு கல்யாணம் பண்ணிக்க தம்பி, வயசு முப்பத்தைஞ்சாகுது. நீயும் குழந்தை குட்டின்னு இருக்கிறதை நான் பார்க்க வேணாமா?”
“செஞ்சுக்கிறேன்பா”
“நெசமாவா?”
“ஆமாம்பா” இவன் சொல்லவும் அவர் உடல்மொழியில் அத்தனை மாற்றம்.
“சொல்லிட்டல்ல, உனக்கு எப்படி பொண்ணை பார்க்கிறேன்னு பாரு” எனச் சொல்லி நிமிர்ந்தவர் சட்டென தொய்ந்தார்.
“நீயோ வெளிநாட்டுக்காரன்”
“அப்பா…” ஆதங்கமாய் ஏறிட்டவன், “நான் இந்தியாகாரன் தான்” என்றான்.
“இல்லப்பா நம்மூர் பொண்ணுங்களை பார்த்தா உனக்கு எப்படி சரிவரும்?”
“அதெல்லாம் சரிவரும்… நான் இன்னும் அதே கிராமத்தான்தான்” புன்னகைத்தான்

