‘எம்மவன்ல’ என பார்த்துக் கொண்டிருக்க அவர்களை கணேசனின் குரல் கலைத்தது. மாப்பிள்ளை வீட்டினர்தான் வருகின்றனரா இல்லை அமெரிக்காவிலிருந்து ஜோ பைடன் குடும்பம் வருகின்றதா என்பது போலொரு அலப்பரை.
வழக்கம் போல லூஸ் ஹேர் விட்டிருந்த சம்பூர்ணா இப்போது பின்னி இறுக்க கட்டி இருந்தாள். அதில் சில முழங்கள் பூக்கள் தொங்கின. இடுப்பை தொட முயன்ற அந்த சடை பார்க்க நன்றாகத்தான் இருந்தது. ஆனால், அவளது அலங்காரம் எந்த விதத்திலும் இந்த காலத்துப் பெண் போல அமையவில்லை.
கணேசன் கைகளில் இருந்தவைகள் அனைத்தும் அவரது மனைவியின் நகைகள். பார்வதி இந்த நேரம் உயிரோடு இருந்து இருந்தால் கூட மகளை அதை அணிய சொல்லி இருப்பாரோ என்னமோ? ஆனால் கணேசன் மகள் அது அத்தனையையும் அணிந்தே ஆக வேண்டுமென வற்புறுத்திக் கொண்டு இருக்கவும் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து சம்பூர்ணா அவைகளை அணிய ஆரம்பித்தாள்.
பெரிய பூ போன்ற காதணிகள், அகலமான ஐந்து செயின்கள் இணைந்த கழுத்து நிரப்ப அணிந்திருந்த அந்த பெரிய சங்கிலி, பெரியதான நெக்லஸ் இன்னும் இரண்டு செயின்கள் இரண்டு கைகளிலும் நான்கு நான்கு பெரிய காப்புகள் என நடமாடும் நகைக் கடையாக உருமாறி இருந்தாள்.அணிந்து நிமிர்ந்தவள் ஆனந்தை பார்த்து சங்கடமாக புன்னகைத்து வைத்தாள்.
சற்று நேரம் கழித்து இவன் சம்பூர்ணாவை அவளது அறையில் பார்க்கச் சென்றான். தூக்கத்திற்கு கண் சொக்கியவளாக அமர்ந்திருந்தவளை பார்க்க இவனுக்கு சிரிப்பு வந்து தொலைத்தது.
“என்னத்தான்?”
“உனக்கு தூக்கம் வருதா?”
“ஆமாம்த்தான், இதெல்லாம் ரொம்ப ஹெவியா இருக்கா? அப்படியே தூக்கத்துக்கு கண்ணு சொக்குது.”
“இரிடேட் ஆகல?’
“ம்ம் ஆகாமலா, மூணாவது தடவை இந்த ட்ராமா நடக்குது”
“உனக்கு கல்யாணத்தில விருப்பமா?”
“போங்கத்தான் ஜோக் பண்ணாதீங்க, விருந்தாள் வந்ததும் சொல்லுங்க முழிக்கிறேன்”, என அங்கிருந்த டேபிளில் தலை வைத்து கண்கள் மூடி தூங்கலானாள்.

