Epi 1_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

அத்தியாயம் 1_ தேடாமல் கிடைத்த சொர்க்கம் நீ!_ஜான்சி

அத்தியாயம் 1

சென்னை

வழக்கம் போல அன்று சூரியன் காலையிலேயே தன்னுடைய வேலையில் மும்முரமாக இருக்க, வெயில் சுள்ளென்று அடித்தது. அது நடுத்தர குடும்பங்கள் வாழும் இருப்பிடம், கீழும் மேலுமாக ஐந்தைந்து அறைகள் எனக் கட்டப்பட்டு வாடகைக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

மேல் மாடியில் சில வீடுகளில் பள்ளி, வேலை என காலை நேர பரபரப்பில் ஆட்கள் இருக்க, ஓரத்தில் அமைந்திருந்த அந்த ஐந்தாவது வீட்டினின்று தோளில் மாட்டிக்கொண்ட பை சகிதம் அவசரமாய் வெளியே வந்து கதவை பூட்டிக் கொண்டு இருந்த பெண்ணுக்கு ஏதோ நினைவில் நிரடியது. உடனே பூட்டியக் கதவைத் திறந்து உள்ளே ஓடினாள்.

அங்கே, அவள் தேடிய மொபைலின் சார்ஜர் சுவற்றில் ஸ்விட்ச் போர்டில் சமர்த்தாய் காற்றில் அசைவாடிக் கொண்டு இருந்தது.

“ஹ்ப்பாடா, நீ ரொம்ப நல்ல பையன்டா வச்ச இடத்திலயே இருந்திருக்க பாரு… உம்மாடா உம்மா” கையால் முத்தங்களை எடுத்து சார்ஜரை நோக்கி பறக்க விட்டவள் அதனோடு பேசியவாறே அதை சுருட்டி தன் பெரிய பையினுள் திணித்தாள்.

‘சரி எதுக்கும் சரிப் பார்த்துக்கிறேனே’… என தனக்குள் பேசிக் கொண்டவளாக தனது பையை திறந்து சோதிக்கலானாள். அதனுள் சின்னதும் பெரியதுமான டிஃபன் பாக்ஸீகள் கண்ணை பறித்தன. 

“ம்ம்… இந்த பாக்ஸ்ல மிக்சர், இதில ஸ்னாக்ஸ், இதில் காலை சாப்பாடு இட்லி, அந்த டப்பால சாதம், சாம்பார். இனி சமைக்கணும்னா காய் வாங்கணும் நோட் பண்ணு ஆலிஸ் நோட் பண்ணு…”

தனக்குள்ளேயே பேசிக் கொண்டவள் அதை உடனே தனது குட்டி நோட்டில் எழுதி வைத்து விட்டு தனது தோளையே தட்டிக் கொண்டாள்.

“நீ குட் கர்ள் டி”

………..

“ஓ உனக்கு 29 வயசாகப் போகுதோ? அப்படின்னா நீ கர்ள் இல்லையோ? பரவால்ல பரவால்ல உனக்கு 50 வயசே ஆனாலும், நீ எனக்கு கர்ள் தான்”

வீட்டிற்குள்ளாக வந்த வேலையை மறந்து கண்ணாடி முன் நின்று, “என் செல்லம்டி நீ, என் கண்ணுடி நீ” என தன்னைக் கொஞ்சிக் கொண்டு இருந்தவளை அலைபேசி அலாரம் அடித்து நினைவூட்டியது.

“அச்சோ ஆபீஸிக்கு லேட்டாச்சு, வேலையை விட்டுட்டு உன் கூட பேசிட்டு இருந்துட்டேனே?”

“தேங்க்ஸ்டா அம்மு” அலாரம் அடித்து தனக்கு நினைவூட்டிய மொபைலுக்கு நன்றி சொல்லி முத்தமிட்டாள். ஏற்கெனவே வணங்கி இருந்தாலும் கூட மறுபடியும் அவசரமாய் அங்கிருந்த அன்னை மரியாள் படத்திற்கு முன் நின்று “பை மம்மா… டாட்டா” என்றுச் சொல்லி பறக்கும் முத்தம் கொடுத்து, வீட்டை மறுபடியும் சுற்றி முற்றிப் பார்த்து,

“இத்தனூண்டு வீட்டுல என்னத்த மறந்து வைக்கப் போறேன்? … நீ நிம்மதியா பொறப்படு ஆலிஸீ” என தன்னை உற்சாகப் படுத்திக் கொண்டவளாக வெளியேறி தன் வீட்டை பூட்டிக் கொண்டு அடுத்த நான்கு வீடுகளை தாண்டி அதற்கடுத்து வந்த படிகளில் சடசடவென்று இறங்கினாள்.

பக்கத்து வீட்டு பொடியன் இன்னும் பள்ளி செல்லவில்லை போலும், “ஓய் அக்கா… படி உடைஞ்ச்சிரப் போகுது அமைதியா இறங்குங்க” என குரல் கொடுக்க

“அடிங்க’ என பதில் கொடுத்தவள் திரும்பியும் பார்க்காமல், “வரேன் டா பாய்” என்றவாறு இறங்கினாள்.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!