Epi 1_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

இந்த குடியிருப்பில் மேலும் கீழுமாக மற்றும் அடுத்தடுத்து இருக்கும் வீடுகள் அவளுக்கு எப்போதும் தனிமை உணர்வை கொடுக்காமல் அக்கம் பக்கம் எல்லாம் ஏதேனும் வேலைகள், அரட்டைகள் நிகழ்ந்துக் கொண்டிருக்க வெறிச்சென்றிருக்காமல் எப்போதும் எங்கேயாவது வேலையோ, பேச்சோ ஏதாவது நிகழ்ந்துக் கொண்டிருக்கும் அந்த சூழல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. 

பெரும்பாலான வருடங்களை பெண்கள் ஹாஸ்டலில் கழித்தவளுக்கு அங்கிருந்த இயந்திரத்தனம் சலித்துப் போயிருந்தது. அதனால் தான் இங்கு சில வருடங்களாக குடியேறி இருக்கின்றாள்.

தனது விருப்பம் போல சமைக்கவும், விரும்பும் நேரம் சாப்பிடவும், நட்புக்களோடு ஊர் சுற்றிப் பார்க்கவும், அக்கம் பக்கம் வாயடிக்கவும் என அவளுக்கு இங்கே எல்லாவிதத்திலும் மிகவும் பிடித்த வாழ்க்கைதான் …. ம்ம் ஒரு சிலவற்றைத் தவிர்த்து….

ஆரம்ப காலத்தில் தனியாக அறையெடுத்து தங்கிய போது பெண் தனியாக குடி இருக்கிறாள் என இரவுகளில் வந்து இவளது வீட்டின் கதவை தட்டிய காவாலிகள் ஏராளம் பேர்.

அவள் உள்ளுக்குள்ளாக பயந்து நடுங்கினாலும் கூட துணிவாக எதிர்த்தாள். அவசர போலீஸ் நூறை அழைத்ததும் சிலரது கொட்டம் அடங்கியது என்றால் எல்லாவிடமும் அதையே செய்ய இயலாமல் ஒரு சிலரை கண்டும் காணாமல் போய் கொண்டு இருக்கின்றாள்.

பெண் தெய்வங்களை வணங்கும் இந்த நாட்டில் ஒரு பெண் தனியாக வாழ்வதென்பது அத்தனை சுலபமா என்ன? ஏராளமான பிரச்சனைகளினின்று தப்பித்துக் கொள்ளவே இரவு வேலை இல்லாமல் பகல் வேலையாக அமைத்துக் கொண்டாள்.

தற்போது இந்த குடியிருப்பில் பாதுகாப்பு அதிகமே, வெளியாட்கள் வந்து வாலாட்ட இயலாது… எனினும் கூட…?

ஆலிஸ் எப்போதுமே பகல் ஷிப்ட் வேலை முடிந்து வந்த பின்னர் தனது வேலைகள் அனைத்தையும் முடித்து, துணிகளை துவைத்து காயப் போட்டு, சமைத்து, அக்கம் பக்கம் சற்று அளவளாவி, படுக்க செல்லும் முன்பாக துணிகள் காய்ந்திருக்கின்றனவோ இல்லையோ எல்லாவற்றையும் எடுத்து உள்ளே காயப் போட்டு விட்டு, பொருட்களை பத்திரப்படுத்தி, கதவை இறுக்கப் பூட்டிக் கொண்டு விடுவாள். அதன் பின் என்ன? தன் அறையில் இருந்து ஒரு சுவர் விடாமல் பேசுவதும், பாத்திரங்களோடு கூட அரட்டை அடிப்பதும், மனதில் உள்ளவைகளை எல்லாம் பகிர்ந்துக் கொள்வதும் அவளது வழமை. 

குட்டி குட்டி வேலைகள் அனைத்தும் முடித்து சுத்தப்படுத்திக் கொண்டு, தூங்கச் செல்லும் முன்பாக சிறிய வயதிலிருந்து பெற்றோர்கள் பழக்கிய வண்ணம் பைபிள் வாசித்து, ஜெபமாலை ஜெபித்து உலகத்தின் எந்த கவலையும் அற்றவள் போல ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்து விடுவாள். இவை அனைத்தும்தான் அவளது அனுதின செயல்பாடுகள்.

பக்கத்து வீட்டு பையனுக்கு உற்சாகமாய் பதிலிருத்து இருந்தவள் இப்போது அந்த பெரிய படிகளில் இறங்கலானாள். இருவர் தாராளமாக கடந்து செல்லும் வண்ணம் பெரிய படிதான் அது. ஆலிஸ் எதிர்பாராத தருணம் எதிரில் குடியிருப்பின் கீழ் பகுதியில் குடும்பத்தோடு வாடகைக்கு இருக்கும் அந்த இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் ஈயென இளித்தவாறு வந்தான்.அவனது செய்கை எலும்புத் துண்டைப் பார்த்து எச்சில் ஒழுக்கும் தெரு நாயைப் போலவே இருந்தது.

ஆலிஸின் கைகள் அவனைக் கண்டதும் தன்னிச்சையாக தனது சுடிதாரின் துப்பட்டாவை சரி செய்தது. முன்பே சரியாக உடுத்தி இருந்தாலும் கூட இப்போது அதனை முழுக்க விரித்து போர்வை போல போர்த்திக் கொண்டது, எதிரில் நிற்பவனது லேசர் பார்வைகள் அப்படிப் பட்டதாயிற்றே?

“என்னம்மா ஆலிஸீ, ஆஃபீஸீக்கு புறப்படுறியா என்ன? நான் வேணும்னா என் பைக்ல உன்னை கொண்டு போய் விட்டு வரவா?” அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் குரல் மாற்றிப் பேசினான்,

அவளோ தனக்கு காது எனும் உறுப்பு உடலில் இல்லாததைப் போலவே பாவித்து, தலையை குனிந்தே அவனைக் கடந்தாள்.

“என்ன இப்ப எல்லாம் துணிகளை இராத்திரி நேரங்களில் வெளியே காயப் போட மாட்டேங்கிறியே? என்ன விஷயம்?”

வெட்கமற்றவனாக அவன் கேட்டாலும் இவளுக்கோ உள்ளூர கூசிப் போயிற்று. ஒரு நாள் நள்ளிரவில் ஏதோ சப்தம் எழ தூக்கம் கலைந்து என்னவென்று கதவின் ஓட்டையின் வழியில் பார்த்த போது அவன் இவளது உடைகளை இவளாகவே பாவித்தவனாக உன்மத்தம் பிடித்தவன் போல வெறித்துக் கொண்டு ஏதேதோ அருவருப்பாக செய்ததை கண்டாளே?

அந்த உடையை, உள்ளாடைகளை அதன் பின்னர் அணியவும் கூட அவளுக்கு மனம் துணியவில்லை. அதற்கப்புறமாக துணிகள் காய்கின்றனவோ இல்லையோ தான் தூங்க உள்ளறைக்கு வரும்போது அத்தனையையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவாள். உள்ளறையிலேயே காய வைத்துக் கொள்வாள். 

நாய் குலைத்தால் திருப்பியா குலைக்கிறோம் எனும் எண்ணத்துடன் அவனது இத்தனை சீண்டலுக்குப் பின்னரும் ஆலிஸ் படிகளை கவனமாய் தாண்டிக் கொண்டிருந்தாள். இங்கிருந்து அவசரமாக கீழே சென்று பயணித்து அலுவலகத்திற்கு சென்று விட வேண்டும் இதுவே அவளது தற்போதைய ஒரே நோக்கம்.

அமைதியாய் கடந்து செல்கின்றவளை அவனோ விடாது சீண்டினான்.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!