வருடங்களாய் பெற்றோர் ஆசையாய் தனக்காக சேர்த்திருந்த சொற்ப நகைகளை தன் கையில், காதில் இருந்து கழற்றினாள். அவற்றை தானாகவே நகைக்கடைக்குச் சென்று விற்று பணமாக்கினாள். மரித்தவர்களின் உடலை பெற்றுக் கொள்ள போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறை விசாரணைகளுக்கு அலைந்தாள்.
தாங்கள் எதுவும் செலவழிக்க தேவையில்லை எல்லாவற்றையும் அவளே பார்த்துக் கொள்வாள் என்று புரிந்ததும் சில சொந்தங்கள் அவளுக்கு உதவ முன் வந்தன. என்ன செய்வது? எப்படி செய்வது? என உரிமையாக துணை நின்று, வழி நடத்தி, மீதி வேலைகளுக்கு உதவினர்.
விசாரணைகள் முடிந்து பொட்டலமாக கிடைத்த பெற்றோரை கட்டி அழவும் முடியாத மனம் மரத்த நிலையில் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையுடனான விடை கொடுத்தாள். அதன் பின்னர் ஓரிரு நாட்கள் கழிந்த பின் யோசிக்கலானாள். மிகப்பெரிய துக்கம்தான் எனினும் சொந்த வீடு எரிந்து சாம்பலாகி கிடக்க, உறவினர் வீட்டில் அவர்களை சார்ந்து தொடர்ந்து எத்தனை நாட்கள் தான் இருப்பது? எனும் உணர்வு மேலெழுந்தது. மறு நாளே ஊரிலிருந்து புறப்பட்டவள் உறவினருக்கு நன்றிகள் கூறி, தொடர்பு கொள்வதாக கூறி விடைப்பெற்றாள். தான் வேலைக்கு சேர்வதற்கு இன்னும் பல நாட்கள் இருந்த போதும் கூட, முன்பாக வந்து சென்னை வந்து ஹாஸ்டலில் சேர்ந்தாள். இந்த துயரத்திலும் கூட தான் நடுத்தெருவில் நில்லாதவாறு தாங்கிப் பிடிக்க தகுந்த நேரத்தில் வேலையாவது கிட்டியதே எனும் ஆசுவாசம் தோன்றியது.
நகைகளை விற்ற பணத்தில் மீதியாக இருந்த சொற்ப பணத்தைக் கொண்டுதான் ஹாஸ்டலில் சேர்ந்தாள். அது முதல் வேலைக்கு சென்று முதல் சம்பளம் வாங்கும் வரையிலான நாட்களில் இருக்கும் மிகுதியான பணம் கொண்டு எவ்வாறெல்லாம் சமாளிக்க இயலுமோ அத்தனையும் செய்தாள். நடக்க முடியும் தூரம் வரையும் வாகனம் நாடாமல் நடந்தாள். டீ, காஃபி என இனிப்பை தேடும் போது ஒற்றை ரூபாய் காஃபி சாக்லேட்டுக்களில் திருப்தி கொண்டாள். ஒற்றைத்துண்டு சோப்பு வெகு நாளைக்கு பாதுகாத்துக் கொண்டாள் இன்னும் எத்தனை எத்தனையோ. ஹாஸ்டலில் கட்டிய பணத்திற்குள்ளாக உணவும் கொடுக்கப்பட்டதால் பட்டினி கிடக்கும் நிலை மட்டும் அவளுக்கு வரவில்லை.
குறிப்பிட்ட தேதியில் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தாள். ஊரில் அத்தனை துணிகளும் பெற்றோரோடு எரிந்துப் போயிருக்க தன்னிடம் இருந்த சொற்ப உடைகளை மாற்றி மாற்றி அணிந்து சமாளித்தாள். முதல் சம்பளம் வந்த பின்னரே கூடுதலாக சில உடைகளை வாங்கி உடுத்திக் கொண்டாள். பகல் முழுக்க வேலைகளில் நாட்களை கடத்தினாலும் கூட இரவு முழுவதும் தனிமையின் பிடியில் துவண்டு, சத்தமில்லாமல் அழுது முடித்து தூங்குவாள். இருப்பினும் மறுநாள் ஒன்றுமே ஆகாதது போல புறப்பட்டு அலுவலுக்கு செல்வாள். இப்படியே ஒரு சில மாதங்கள் கழிந்திருந்தன.
என்னதான் துயரத்தில் இருந்தாலும் கூட வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணமெல்லாம் அவளுக்கு ஒருபோதும் வரவில்லை. அது போலவே அவளிடம் எதிர்காலத்தை குறித்த எந்த கனவுகளும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அத்தனை இழப்பிலும் பிறர் தயவில் வாழாமல் சுயசார்புடைய வாழ்க்கை வாழ வேண்டுமெனும் உத்வேகம் அவளை உந்தி தள்ளிக் கொண்டு இருந்தது. ஆரம்ப காலத்தில் பயிற்சி ஊழியராக இருந்த போது குறைவான சம்பளமே கிடைக்கின்ற துறை. ஒரு வருடம் கழித்து வேலை மாற்றம் செய்வதை பொறுத்து தான் சம்பள உயர்வுகள் அமையும்.
இப்போதெல்லாம் அவளது அழுகைகள் குறைந்து விட்டிருந்தன. சொல்லப் போனால் அவளுக்கு அழவும் பிடிக்காது. குறிப்பாய் அவள் பெற்றோருக்கு அவள் அழுவது சுத்தமாக பிடிக்காது. இப்போதென்னவாம்? ஊரில் பெற்றோர் இருப்பதாகவும் தான் வேலைக்காக சென்னைக்கு வந்ததாகவும் இருக்கட்டுமே? என்ன? இது நிஜமாக இருந்தால் மாதமொரு முறையாவது பெற்றோரை சந்தித்து இருக்கலாம். இப்போதோ அது சாத்தியமில்லை. தாயை அழைத்து வந்து, சென்னையை சுற்றி காண்பிக்க வேண்டும் என்கின்ற ஆசை நிறைவேறாமல் போய்விட்டதே எனத் தோன்றவும் கண்ணில் வழிந்த நீரை துடைத்தாள். அவளது மூக்கும் தன் பாட்டிற்கு கண்ணோடு துயரத்தில் பங்குக் கொள்ள ஆரம்பித்தது. அழுது முடித்தவள் இனி அழுவதில்லை எனும் முடிவிற்கு வந்திருந்தாள்.
“தூங்கி எழும்புறவனுக்கும், உழைக்கிறவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாம 24 மணி நேரமும் ஒன்று போலத்தான் கழியும் நாம உழைக்கிறவனா இருக்கனுமா இல்லை சோம்பேறியா இருக்கணுமா? என்று நாமத்தான் முடிவு செய்யணும்” தந்தையின் பேச்சுக்கள் ஞாபகத்தில் இடறின.
“வாழ்க்கையில் துன்பங்கள் வரத்தான் செய்யும். அதை அழுதுகிட்டே கடக்கிறதும் சிரிச்சுக்கிட்டே கடக்கிறதும் நம்ம கையில் தான் இருக்கு” அம்மாவின் பேச்சுகள் மனதில் அறைந்தன.
ஏற்கெனவே அம்மா அப்பா கூறியவைகள்தான் ஆனால் அவை உரிய நேரத்தில் மனதில் நிரட, தனது நிலையினின்று கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள். தன் துயரத்திலிருந்து வெளி வர முயற்சித்தாள். அருகாமையில் இருப்போரிடம் நட்பு பாராட்ட ஆரம்பித்தாள். இயன்றவரையில் எல்லோரோடும் கலந்து பேச, அல்லது பேச ஒன்றுமில்லாத போதிலும் குழுவில் ஒருவளாய் இருந்து தனிமையின் வெம்மையை குறைக்க முயன்றாள்.
தூக்கம் வரும் வரையிலும் தன்னை ஏதேனும் வேலையில் ஈடுபடுத்திக் கொள்பவள் தூங்க மட்டும் படுக்கைக்கு வருவாள். பெற்றோர்கள் கற்றுத்தந்த ஜெபிக்கும் பழக்கமும் தனிமையை வெல்ல அவளுக்கு உதவியது. ஞாயிறு ஆலய வழிபாடுகள் எதையுமே தவிர்ப்பதில்லை. தன்னுடைய நிலைக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டாள். இவ்வாறு இரண்டு மூன்று வருடங்களை கடந்திருந்தாள்.
தற்போது முதல் வேலையை விட்டு இரண்டாவதாக கிடைத்த வேலையில் சேர்ந்திருந்தாள். முன்பிற்கு இப்போது சம்பளம் கூடி இருந்தது, அவளது கடுமையான வேலை தனிமைக்கு மருந்தாக மாறி இருந்தது. அலுவலில் வெறித்தனமான ஈடுபாட்டோடு உழைத்தாள். வார இறுதியில் வேலை இருக்கும் நாட்களில் குழுவை சேர்ந்த மற்றவர்கள் சலித்துக் கொண்டிருக்க ஆலிஸோ ஆர்வமாய் அலுவலுக்கு வந்து விட்டிருப்பாள்.
அவளது இந்த அளவிற்கு மீறிய ஈடுபாடு அலுவலக வாழ்க்கையில் நுட்பமான புரிதலையும், மென்மேலும் பொறுப்புகளை ஈட்டித் தந்தது. ஆயினும், இன்னும் பெரிதான சம்பள உயர்வுகள் அவளை விட்டு தூரமாய் இருந்தன. நல்ல உடைகள், நல்ல உணவு வகைகள் எனும் நிலைக்கு வந்திருந்தாள். அவளின் வயதிற்கேற்ப இருபதுகளின் ஆரம்பத்தில் இருந்தவள் அழகு மிளிர்ந்தவளாக, பார்ப்பவர் கண்களை எல்லாம் கவரும் விதமாக இருந்தாள்.
பூவைக் கண்டு வண்டுகள் வட்டமிடுமாமே? … அவள் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன? இன்றைய காலத்தின் டேட்டிங்க், லிவிங்க் டுகெதர் தற்காலிக உறவாடும் எண்ணங்களோடு பலரும் அவளை அணுகிய போதெல்லாம் நெருப்பாய் நின்றாள்.
தாய் தகப்பன் இல்லாத நிலையில் யாரும் அவளைத் தட்டிக் கேட்க போவது இல்லை என்றிருந்தாலும் கூட, தனது சுயமரியாதையை யாரிடமும் அவள் அடகு வைக்க தயாராக இல்லை. சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கம் தரும் மரியாதை அலாதியானது. அதனை அவள் இழக்க விரும்பவில்லை.
ஓரிருவர் திருமணத்திற்காகவும் அவளை அணுகினர்தான். அவர்களின் நோக்கம் நல்நோக்கமே என்றறிந்ததும் சந்தித்து தன்னுடைய நிலையினை அறிந்துக் கொள்ளும் வண்ணம் வெளிப்படையாக அவள் தெரிவித்து விடுவதுண்டு.
‘ஓ திருமணத்திற்கு எடுத்து செய்ய ஆளில்லாத பெண்ணா இவள்?’ எனும் அதிர்ச்சியில் அவள் அழகில் நெருங்கியவர்கள் அனைவரும் முன்பின் தெரியாதவர்கள் போல கடந்துச் சென்றதையும் அவள் கண்டுக் கொள்ளவே இல்லை.
நல்லக் குடும்பத்தை சேர்ந்த நேர்மையான ஆண்களின் திருமண விருப்பத்திற்கு ‘சரி இவர்கள் கேட்பதைப் போல அமைந்து விட்டாலும் சரிதானே?’ எனும் எண்ணத்தில் கஃபேடேரியாவில் அவர்களுடன் அமர்ந்து தன்னைக் குறித்த உண்மைகளை பேசினாள் என்றால், ஒரு மாதிரியான சுயநல கணக்கீடுகள் கொண்ட அதாவது இவளது சம்பாத்தியத்தில் தங்கள் வளத்தை பெருக்கவும், இருந்து உண்ணவும் விரும்பிய ஆண்களை இனம் கண்டு தூரத்திலேயே நிறுத்தினாள்.
தனியளான தன் சூழ்நிலையை உணர்ந்தவளாக எப்போதுமே பிரச்சனைகள் வராமல் கடக்க முயலுகின்றவள் யாரிடமும் அவள் வீண் பேச்சுக்களை வைத்துக் கொள்வதில்லை. வாக்குவாதங்களையும் மேற்கொள்வதில்லை எல்லாவற்றிலும் பிரச்சனைகளை தவிர்த்து விலகி நிற்பாள். வெளியிலிருந்து பார்க்க அவளது செய்கைகள் ஒரு வகையில் கோழைத்தனமாகவே இருந்தாலும் கூட அவையே அவளுக்கான தற்காப்பாகவும் அமைந்தது. ஏதேனும் பிரச்சனைகள் எழுந்தாலும் கூட அவளுக்காக பேசத்தான் யார் இருக்கிறார்கள்?
ஆரம்ப காலக் கட்டத்தில் எல்லோரிடம் ஒன்றுபோல பேசிக் கொண்டிருந்தவள் அனைவரும் ஒன்று போல இல்லை. பலரும் கலகலப்பாக பேசினாலும் கூட மனதில் வேறொரு எண்ணம் கொண்டவர்களாய், தன் உடலெனும் பண்டத்தை குறி வைப்பது புரிந்துக் கொண்டு ஆளுக்கேற்ற வண்ணம் கூட குறைய பேசவும் தொடங்கினாள். பெற்றோரில்லாத சில வருடங்களிலேயே வாழ்க்கை எனும் ஆசிரியரிடம் அவள் எக்கசக்கமாய் கற்றுக் கொண்டிருந்தாள்.
மூன்று வருடங்களுக்கப்பால் சென்னையில் வசிக்கும் அவளது ஊரைச் சார்ந்த ஒரு உறவினர் அவளுக்கு அலைபேசியில் அழைத்து சந்திக்க வருவதாக சொன்னபோது ஆலிஸ் மிகவும் அகமகிழ்ந்துப் போனாள். தனது அலைபேசி எண்ணை ஊரில் பகிர்ந்திருந்தது எவ்வளவு நல்லதாகிற்று என்று அளவற்ற மகிழ்ச்சி. அவள் தங்கியிருந்த ஹாஸ்டலில் சந்திக்க வசதி இல்லையென்று பொதுவிடத்தில் சந்திப்பை ஏற்பாடு செய்துக் கொண்டாள். அந்த உறவினர் தன்னை அவரது வீட்டிற்கு இதுவரையிலும் அழைத்ததே இல்லை என்பதெல்லாம் அவளுக்கு அப்போது தோன்றவே இல்லை.


Leave a Reply