Epi 3_Manadhoram Unthan Ninaivugal

‘இவன் கார்த்திக் இல்லை, அப்படியென்றால் கார்த்திக் பார்க்க எப்படி இருப்பான்?’ அவளது மனதில் சில கணக்கீடுகள் இருந்தன.

அதற்குப் பின்னர் கடந்த சில மணித்துளிகளில் மீராவிற்கு, பாஸ்கருடன் பேசப் பழக மிகவும் இலகுவாக இருந்தது. அவனிடம் அவள் முதன் முறை பழகிய உணர்வே இல்லை. அத்தனை மரியாதையான பார்வை மற்றும் நடத்தைக் கொண்டவனாக, மிகுந்த நட்புணர்வுடன் பழகினான்.

தனக்கு முன்பின் தெரியாத அந்த இடத்தில் மதியம் சாப்பிட எங்குச் செல்வது? என அவள் அவனிடமே கேட்க அதற்கும் சில விபரங்கள் சொன்னான். ஒன்றாக பணிபுரிய வேண்டுமே தத்தம் அலைபேசி இலக்கங்களை பறிமாறிக் கொண்டனர். 

“தன்னோடு கஃபேடேரியாவிற்கு துணைக்கு வருகின்றானா?” என மீரா கேட்டுப் பார்க்க அவனோ தான் இன்று உபவாசம் எனச் சொல்லி வர மறுத்தான்.

தனது சிறிய கைப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு உணவைத் தேடிய அவளது பயணம் ஆரம்பித்தது. காலை வந்தது முதல் அவள் கவனித்ததில் அலுவலகத்திலும் சரி, கேஃபேடேரியாவிலும் சரி அவள் பார்த்த ஆண்கள் எல்லாரும் தத்தம் முகத்தை தாடியில் புதைத்திருந்தார்கள்.

“இது என்ன எல்லோரும் தாடியில்? இதுதான் தெலுங்கானா ஸ்டைலா?” அவள் புரியாமல் விழித்திருக்க, பாஸ்கரின் வாட்சப் ஸ்டேடஸ் அன்றிரவு அவளுக்கு வேண்டிய பதிலை தரக் காத்திருந்தது.

கேஃபேடேரியாவில் அத்தனைக் கூட்டம், கூட்டமென்றாலே அவளுக்கு ஒவ்வாமை உணர்வுதான். மூச்சடைத்த உணர்வில் கிடைத்த உணவை வாங்கி, கிடைத்த இடத்தில் அமர்ந்து பரபரவென உண்டு திரும்பினாள்.

இனி தனக்குத்தானே சமைத்து, மதிய உணவு கொண்டு வருவதென தீர்மானித்தாள். ‘இந்தக் கூட்டத்தில் யாரால் தினம் தினம் வர முடியும்? … ஷப்பா’

மதிய உணவு உண்ட பின்னர் தனது இருப்பிடத்திற்கு திரும்பினாள். இரவு நேர தூக்கமின்மை காரணமாக ஏசியின் குளுமையில் மீராவை நித்திரா தேவி சுற்றிச் சுற்றி வந்து தாலாட்ட, “கார்த்திக் எப்ப வருவான்?”, என மீரா பாஸ்கரிடம் கேட்டுக் கேட்டு களைத்து விட்டாள்.

“அண்ணகாரு இப்ப வருவார்”

“…”

“அண்ணகாரு அப்படி, அண்ணகாரு இப்படி” அவன் பேசியதில் 

‘யப்பா உங்க அண்ணகாருவ எனக்கு ரொம்ப நல்லா தெரியும், ஃப்ராடுப்பய, யாரையோ ஏமாத்தி மேனேஜர் ஆகிருப்பான்னு நினைக்கிறேன். நீ வேற அவனை புகழ வேணாம்’ என மீரா மனதிற்குள் பொறுமிக் கொண்டாள்.

இதற்கு மேல் முடியாதென அவள் சாயுங்காலம் ஆறு மணி வரைக்கும் நேரம் கடத்தி விட்டு வீட்டிற்கு புறப்படுகையில் தான் பாஸ்கரின் குரல் உற்சாகமாய் ஒலித்தது.

“அண்ணகாரு…”

‘டேய் கார்த்திக் வந்துட்டியா நீ?’ சலிப்பில் அவனைப் பார்க்க திரும்பிய மீராவிற்கு அவனது முகத்தில் கண்கள் படிந்து மனதில் அதிர்ச்சியின் அலைகள் ஒங்கியறைய, அதனை முகத்தில் காட்டாமல் மறைத்தாள்.

“ஹே கார்த்திக் ஐயாம் மீரா…ஹவ் ஆர் யூ?” முதன் முறை பார்ப்பவனிடம் தனது மனதின் வெறுப்பு, கோபம் எதையும் காட்டாமல், ஏன் அவனது முகத்தைக் கண்டதும் எழுந்த அதிர்வையும் வெகு சாதாரணமாக புறம் தள்ளி கைகுலுக்க மீரா தன் கையை நீட்டினாள்.

மதியம் வர வேண்டியவன் அவளை தவிர்க்கவே, அன்று தாமதமாக வந்திருந்தான் போலும். வந்ததும் தன்னைக் கண்டதும் எப்படியாக அவளது முகபாவனை மாறும் என்பதை கணிக்க அவளையே பார்த்து நின்றிருந்தான்.

அவளது மாறாத முகபாவனைகள், அதிர்ச்சி இல்லாத உடனடிப் பேச்சு மற்றும் அவள் தன்னிடம் கைகுலுக்க கையை நீட்டிய விதம் எல்லாமும் அவனது மனதின் ஏதோ ஒரு ஒரத்தில் ஒரு பூவை பூத்திருக்கச் செய்திருக்க வேண்டும்.

தயங்கி நின்றவன் இன்னும் பதிலுக்கு தனது கையை நீட்டாமல் “ஹாய் மீரா” என்றான். மெதுவாக அவன் கை எழுந்து, பட்டும் படாமல் இவளது கை தழுவி கைகுலுக்கி நீங்கியது.

அவனிடம் புன்னகைத்து பேசியவள் விடைப்பெற்றுச் செல்ல, இங்கிவன் மனதிலோ புயலும், தென்றலும் மாறி மாறி வீசிக் கொண்டு இருந்தன.

மழைத்துளி 

வறண்ட பாலையில்

மழைத்துளி போலவே

அன்பற்ற வனாந்திரத்தில்

நாடோடியாய் திரிந்த என்னுள்

 சில்லென 

இறங்கியது உந்தன் காதல்.

தொடரும்

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *