சற்று நேரம் அக்கம் பக்கம் சத்தங்களை அவதானித்தவள் ஒலி எழுப்பாமல் டாய்லெட் கதவை திறந்து ரிஷாவை மட்டும் அனுப்பி வைத்தாள்.
“நான் சொல்றதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ ரிஷா”
மறுபடியும் நினைவூட்ட ஷாரதா மறக்கவில்லை.
டாய்லெட்டிலிருந்து வெளிவந்த ரிஷாவிற்கு சட்டென்று வானிலை வெம்மையாய் மாறின உணர்வு, எல்லாம் புர்க்காவின் மகிமை. கண்கள் மட்டும் தெரியும் முன் பின் பழக்கமில்லா அவ்வுடை அணிந்து அவளால் இயல்பாக நடக்கவும் இயலவில்லை.
ஒருவாறாக அடி மேல் அடி வைத்து அவள் முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே வந்துச் சேர அங்கு இரயிலின் தாள லயத்தில் குட்டிப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தன. அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் நெருங்கி வந்து விட்டது போலும் பெட்டிகளெல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
குழந்தைகளின் அழகு முகம் பார்த்து தன் நிலை மறந்து சற்று லயித்தாள்.ஆனால், தன்னுடைய நிலை மறக்க கூடியதா என்ன?
‘இப்போது எதற்கு இந்த வேஷம்?!’, இதற்காகத்தானா புர்கா அணிந்திருக்கும் இந்த பெண்களின் அருகே ஷாரதா தன்னை இடம் தேடி அமரச் செய்தது? யோசிக்கலானாள்.
மும்பை பெயரை இதுவரை கேட்டதோடு சரி, அங்கே முன்பெப் போதும் சென்றது இல்லை. இதுவரை அவளோடு கூடவே ஷாரதாவும் வந்ததால் எங்கே செல்கிறோம்? எதற்கு செல்கிறோம்? என்று கேட்கவும் இயலாதவளாக பார்வையற்றவளைப் போல அவரை தொத்திக் கொண்டே இதுவரை பயணித்தாயிற்று.
‘இதுவரை என்ன? இப்போதும் கூட தாம் எதற்காக மும்பை செல்கிறோம் என்றே அவளுக்கு தெரியாதே. மாலையில் இன்னும் சிறிது நேரம் கழித்து மும்பையை இரயில் அடையவிருக்கும் வேளையில் எதற்கு இந்த புதிய குழப்பம்?’
‘இன்றைக்கு உன்னை விட்டு நான் பிரிய நேர்ந்தாலும்…’
ஷாரதாவின் குரல் மனதில் ரீங்காரமிட்டது … ‘எதற்காக அப்படி சொல்லி இருப்பார்?’
‘இன்றைக்கு ஷாரதா என்னை விட்டு பிரிய போகிறாராமா?’
ஏறத்தாழ 7 முதல் 8 வருட துணை அவருடையது. சட்டென்று பிரியப் போவதாக சொல்லவும் மனதுக்குள் ஏதோ அசைந்த உணர்வு.
‘பிரிவது என்றால், அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச் சென்று விடுவாராமா? அப்படி பாதி வழியில் சென்று விடவா இவ்வளவு நாளும் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்? எத்தனை கெடுபிடிகள்? எத்தனை கண்டிப்புகள்?’
வெளி உலகை பார்க்காதவளை சட்டென்று தனியே எல்லாவற்றையும் சமாளித்துக் கொள் என்று சொன்னது போல ஆனதும் திகைத்தாள்.
‘நான் யார் வீட்டிற்கு செல்ல வேண்டும்? எங்கே செல்ல வேண்டும்? யாராவது சொல்லுங்களேன்.’
‘என் வாழ்க்கையில் என்ன நடந்துக் கொண்டிருக்கின்றது என்று யாராவது சொல்லுங்களேன்.’
வீறிட துடித்த மனதை அடக்கினாள். அவளும் வேறென்னதான் செய்வாள்? ஒன்றும் புரியாத நிலை மாற அவளுக்கு வழி ஒன்றுமே புலப்படவில்லை. ஷாரதா தனக்கு தந்த பையை துழாவினாள். எங்கேனும் நான் தேடும் வெளிச்சம் புலப்படாதா?
பையினுள் ஒரு சில காகிதங்கள் மடிக்கப் பட்டு இருந்தது. ஒரு பெரிய ஜிப் வைத்த மணிபர்ஸ் காணக் கிடைக்க பையினுள்ளேயே அதன் ஜிப்பை திறந்துப் பார்த்தாள். உள்ளே கட்டுக் கட்டாய் பிங்க், பச்சை, மஞ்சள், ஆகாய நீல நிற தாள்கள் அடுக்கி காணப்பட்டது. ‘ஹோலி கொண்டாடும் இந்தியர்கள் நாங்கதான் டோய்’ எனும் விதமாய். வண்ண வண்ணமாய் இந்தியன் கரன்ஸி காட்சியளித்தது.


Leave a Reply