ஜிப்பை இழுத்து மூடினாள். இன்னொரு சின்ன ப்ளாஸ்டிக் ஜிப்பரில் அவள் பெயரில் பிரபல வங்கி கணக்கு புத்தகமும், டெபிட் கார்டும் இருந்தது. எனக்கு தேவையானது இவைதானா? மனம் கேள்வி கேட்க சலிப்பாக உணர்ந்தவள் அதனை அப்படியே வைத்து விட்டாள்.
அடுத்து ஒரு சின்ன டைரி, அதில் ஏராளம் தொலைபேசி எண்கள் மற்றும் விலாசங்கள். அதிலும் மனம் பதியாமல் போக, மறுபடி தான் முதலில் பார்த்த கற்றைத்தாள் கைக்குள் வரவே அதில் என்னதான் இருக்கிறது என்று எடுத்துப் பார்த்து மடிப்பை விரித்தாள்.
பைக்குள்ளாக இருப்பவற்றை முழுவதுமாக விரித்துப் பார்க்க இயலாததாக இருக்க கொஞ்சம் கொஞ்சமாய் அதனை விரிக்க முயன்றாள். முதலில் அவள் கையில் அகப்பட்டது புகைப்படமொன்று, அந்த புகைப்படம் மடித்து வைத்த தாள்களின் நடுவே இருந்திருக்க வேண்டும். கால்வாசிப் பகுதி மட்டும் அவள் முயலாமலே வெளியில் எட்டிப் பார்க்க தலையை சரித்து அதை கூர்ந்து நோக்கியவளுக்கு மிலிட்டரி வகை ஹேர்கட்டில் முன் நெற்றி முழுவதும் மட்டும் தெரிந்திருக்க அது ஒரு ஆண்மகனின் புகைப்படம் என்பது மட்டும் புரிய வந்தது.
அவன் நெற்றியும் அதன் வலது ஓரம் இருந்த பெரிய மச்சமும் வெளியே நீட்டிக் கொண்டிருந்த அந்த கால்வாசி பகுதி புகைப்படத்தில் புலப்பட்டது. தான் அந்த புகைப்படத்தை முழுவதையும் காணும் ஆர்வத்தில் அதை இழுக்க முயலும் தருணத்தில் தான் அந்த சப்தம் கேட்கலாயிற்று.
சிறிது நேரம் முன்பு இல்லாதிருந்த அந்த தபதப சப்தம் அந்த ஓடிக் கொண்டிருக்கும் இரயிலில் கேட்க தொடங்க, கையில் இருந்த புகைப்படத்தை முழுவதும் காணும் ஆசை தகர்ந்துப் போக, மிரண்டு அதனை பைக்குள்ளேயே வைத்துவிட்டு என்ன சப்தம் என்று எல்லோரையும் போலவே பார்க்கலானாள்.
இவள் இருந்த ஓரமான இடத்திலிருந்து பார்த்தால் கம்பார்ட்மெண்டின் அந்த இறுதி ஓரம் வரை தெரியும். அவள் இருந்த இருக்கை ஏறத்தாழ கம்பார்ட்மெண்டின் நடு மத்தியில் இருக்க அவளின் கவனம் கம்பார்ட்மெண்ட் கதவு இருக்கும் பகுதியில் நின்று நிலைத்தது.
ஜீன்ஸிம், டக் இன் செய்ய்ப் பட்ட டெனிம் ஷர்ட்டும்,தன் முடி அனைத்தும் சேர்த்து, கொண்டையாய் சுருட்டி கட்டியிருந்தார் ஷாரதா.
முன்பை விடவும் அதிகமாய் தன் விரைப்பான உடல்மொழியோடு ஷாரதா அங்கே நின்றுக் கொண்டிருக்க, அவரைச் சுற்றிக் கொண்டு நான்கைந்து முரடர்கள் விசாரித்துக் கொண்டிருந்தனர்.
யாரோ ஒருவன் மற்றவனுக்கு போனில்,
“இதோ இங்கே வாங்கடா, இங்கே தான் இருக்கிறா”
என்று சொல்வதுவும் நான்கைந்தாக இருந்தவர்கள் கூட்டம் இன்னும் ஒவ்வொருவராக, ஒன்றன் பின் ஒன்றாக வந்துச் சேரச் சேர கூடிக் கொண்டே வந்துச் சேர்ந்தது.
ஷாரதா ரிஷா இருந்த கம்பார்ட்மெண்டிற்கு வராமல் எதிர் திசையில் நடந்து கடக்க முயல,
“ஏய்…”
என்ற ஆங்காரத்தோடு ஒரு தடியன் அவள் சட்டையில் கை வைத்து பின் புறம் இழுக்க சட்டென்று எம்பி தன் கையை விடுவித்து, காற்றில் சுழன்று, இடது கால் தரையில் பதிய வலது காலை அந்த தடியனின் முகத்தில் ஆக்ரோஷமாய் மோதினாள் ஷாரதா.
நிலைக் குலைந்து விழுந்தவன் நிச்சயம் கதவு திறந்திருந்தால் அந்நேரம் அந்த இரெயிலின் கதவிற்கு வெளியே விழுந்திருக்க வேண்டும்.
கண்கள் தெரிக்க ரிஷா ஷாரதாவின் இந்த அதிரடியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவரது கால் அவனது முகத்தின் நேர் வந்து நின்ற அந்த நேரம் ரிஷா உறைந்து விட்டாள் என்றே கூறவேண்டும். ஏதோ ஒரு படத்தின் குங்க்பூ சண்டை சீன் அவளுக்கு மனதிற்குள்ளாக ஞாபகம் வந்துச் சென்றது.
இட நெருக்கடியான அந்த அன்ரிஸர்வ்ட் கம்பார்ட்மெண்டில் நடந்த களேபரத்தால் அங்கும் இங்குமாய் இடம் கிடைக்காமல் வழி நெடுக உட்கார்ந்துக் கொண்டிருந்தவர்கள் சண்டையைக் கண்டு பயந்து மிரண்டு உள்ளுக்குள்ளாக போய் அமர வேறு இடம் தேட அந்த சண்டைப் பகுதி சட்டென்று வெறிச்சிட மற்ற இடங்கள் கூட்டத்தில் தத்தளித்தது. அடுத்த கம்பார்ட்மெண்டிற்கு அவசரமாய் மக்கள் ஓடிச் செல்ல துவங்கினர்.
ஷாரதாவும் மற்றவர்களும் சுற்றும் முற்றும் கவனிக்கும் நிலையில் இல்லை. ரிஷா இன்னும் கூட ஷாரதாவை கவனித்தவளாய், அதே நேரம் அவள் சொன்னது போலவே அவருக்கும், அவளுக்கும் சம்பந்தம் இல்லாதது போல நின்றிருந்தாள். அவளது உடை அவளது உணர்வுகளை மறைக்க வெகுவாக உதவிக் கொண்டிருந்தது.


Leave a Reply