சனிக்கிழமை மதியம் மனோஜ் “பிறந்தநாள் விழாவிற்கு தன் வீட்டிற்கு வர புறப்பட்டு விட்டாயா?” எனக் கேட்கவும், சரி போய் வரலாமென புறப்பட்டாள்.
தன் தோழிகளுக்கும் அழைப்பு இருந்து இருக்கும். அவர்களும் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருப்பார்கள் என அவளாகவே கணித்துக் கொண்டாள்.
அம்மாவிடம் விபரம் சொல்லி, அவள் வீட்டிலிருந்து புறப்பட மணி ஐந்தாயிற்று.
குழந்தைக்கு ஏற்ப சின்னதாக ஒரு பொம்மையை அவள் அருகிருந்த கடையில் பரிசாக வாங்கிக் கொண்டாள்.
வழக்கம் போல தான் எங்கே எதற்கு செல்கிறேன் எனும் விபரத்தையும், மனோஜ் முகவரியையும் தமையனுக்கு அனுப்பி வைத்தாள்.
ஒருவாறாக, மனோஜின் முகவரிக்கு அவள் போய் சேர மணி ஏழாகிற்று.
அது ஒரு பணக்காரர்கள் வாழும் இருப்பிடம். இவனது வீடு அங்கே ஐந்தாம் தளத்தில் இருந்தது.
அங்கே சென்றதும் அதன் ஆடம்பரத்தில் தன் உடையை, செருப்பை சில பல முறைகள் நுவலி சரி பார்த்துக் கொண்டாள். அவைகளும் கொஞ்சம் பரவாயில்லை என்பது போலவே இருந்தன.
அவள் ஐந்தாம் தளத்தில் மின்தூக்கியிலிருந்து வெளியே வரவும் அங்கிருந்த இரண்டு வீடுகளின் கதவுகள் திறந்திருக்க வெளியே செருப்புக் கடை வைக்கலாம் எனும் அளவு செருப்புகள் குவிந்திருந்தன.
தன் தோழிகளை தேடினாள் யாரையும் காணவில்லை. சரி உள்ளே அமர்ந்திருப்பார்கள் போலும் என எண்ணிக் கொண்டாள்.
நல்ல கூட்டம்… யாரையும் யாரும் கவனிக்கும் நிலையில் இல்லை.
திரும்பச் சென்று விடலாமா? எனும் எண்ணத்தில் இருந்தவள் எதிரே சூட்டில் தோரணையாக வெளியே வந்த மனோஜை பார்த்ததும் தாமதித்தாள்.
சற்று முன் தான் கேக் கட்டிங் முடிந்திருக்க வேண்டும்.
எல்லார் கையிலும் கேக் துண்டங்கள் இருந்தன.
ஈவெண்ட் மேனேஜ்மெண்டிற்கு ஆள் வைத்திருப்பார்கள் போலும். சிறு பிள்ளைகளை அங்கே ஒரு பபூன் சிரிப்பூட்டிக் கொண்டு இருந்தார்.
எதிரும் புதிருமாக இருந்த இரண்டு வீடும் மனோஜின் வீடுகள் என புரிந்துக் கொண்டாள்.
நன்கு பெரிய ஃப்ளாட்டுகள். இரண்டுமே மூன்று படுக்கை அறைகள், முன்னறை மற்றும் சமையலறை கொண்டதாக இருந்தது.
செல்வச் செழிப்பு ஒவ்வொரு பக்கமும் தெரித்தது. மனோஜ் அவளை விழா நடந்துக் கொண்டிருந்த வீட்டிற்கு மறுபக்கமிருந்த வீட்டில் அழைத்துச் சென்றான்.
அங்கே முன்னறையில் முகத்தை உணர்ச்சிகளற்றவராக வைத்துக் கொண்டு ஒருவர் அமர்ந்திருந்தார்.
“அப்பா, இது நுவலி என் க்ளாஸ்மேட்”
எனவும் காதில் கேட்டாலும் கேளாதது போல அமர்ந்திருந்தார் அந்த நபர்.
அடுத்து பட்டுப்புடவை சரசரக்க, நகைகள் மின்ன ஒரு பெண்மணி அங்கே வந்தார்.
மனோஜையும் நுவலியையும் ஒரு பார்வை பார்த்தார். காதில் போனை வைத்துக் கொண்டே வந்திருந்த அவர் பேசிய வண்ணமே அருகிருந்த ஒரு அறைக்குள் சென்று அடைத்துக் கொண்டார்.
“அம்மா” என்றான் மனோஜ்.
தலையசைத்துக் கொண்டவளோ, “நம்ம காலேஜ் பிரண்ட்ஸ் ஒருத்தரையும் காணலியே?” எனக் கேட்டாள்.
“என்னமோ தெரியலை உன்னைத் தவிர யாருமே வரலை” அவன் மிக அப்பாவியாக தன் உதட்டை பிதுக்கினான்.
முன்னறையில் அவன் அப்பா முன்பு வேலைக்காரன் போல ஒருவன் கூனிக் குறுகி நின்றுக் கொண்டிருக்க,
“அது என் அண்ணன் வினோத்” என்றான்.
தோற்றம் பொருந்திப் போனது…ஆனால், உடைகள் ஷீ முதலாய் எதுவுமே அங்கே பொருந்தவில்லை.
“என் அப்பாவோட பிசினஸில் இப்ப சேர்ந்து வேலை செய்யறான்”
“ஓ”
“இது எங்க அண்ணி” என்றதும் பார்க்க அந்த வினோதின் அருகில் ஒரு பெண் நின்றாள். அவளது உடைகளும் அந்த விழாச் சூழலுக்கு ஏற்றவிதமாய் இல்லை.
அதற்கு இவள் உடைகள் பரவாயில்லை எனும் போலிருந்தன.
ஆனால், அவள் கரத்தில் இருந்த கொழுக் மொழுக் குட்டிப் பையன் நுவலியின் கவனம் கவர்ந்தான்.
அந்த பிறந்த நாள் நாயகன் ஒரு வயது பையனின் ஒற்றைக் காதில் வைரக் கம்மல், கழுத்தில் தடிமனான ஓரிரு செயின்கள். அவனது கரத்தில் தங்க வளையம். அவன் விரல்களில் மோதிரங்களும் அந்த மோதிரங்கள் விழாத வண்ணம் தங்கச் செயின்கள் வளையத்தில் இணைக்கப் பட்டு இருந்தன.
அவனது மற்றொரு கையை தங்க ப்ராஸ்லெட் அலங்கரித்தது.குட்டிப் பையன் வெகுவாய் மிளிர்ந்தான்.
குழந்தையை கண்டதும் நுவலி முதலில் தூக்கி கொஞ்ச எண்ணினாலும், பிள்ளையின் நகைகளை பார்த்தவள் அவன் அருகே செல்ல தயங்கினாள்.
நுவலிக்கு மனோஜின் பெற்றோர்கள் அவளை வா என அழைக்காததும், பேசாததும் நெருடியது.
அவர்களின் மகன் கூட கல்லூரியில் படிக்கின்றவள் தானே அவள்? அதுவும் இவர்கள் மகன் அழைத்ததால் அந்த விழாவிற்கு வந்திருக்கிறாள் அப்படி இருந்தும் உதாசீனப்படுத்தியது போல இவளுக்கு தோன்றிற்று.
அங்கே தன் வீட்டில் மனோஜோ முற்றிலும் வேறாக நின்றிருந்தான்.
அவனது அண்ணன் வினோதிடம் இருந்த அதே அடிமை பாவனை இவனிடமும் விட்டால் குனிந்து நான்கு கைகளால் நடந்து விடுவானோ?
இவளை இங்கே தனியே விட்டு விட்டு மனோஜ் ஏதோ வேலை போல அங்கே இங்கே என வலம் வருவதும், தாயும் தகப்பனும் நுவலியை கவனிக்கின்றார்களா? என ஓரப்பார்வையில் கணிப்பதுமாக இருந்தான்.
ஒன்றும் புரியாமல் தேமே என அமர்ந்திருந்தவளுக்கு அவள் அண்ணனிடமிருந்து அழைப்பு வந்தது.
“அண்ணா…”
“…”
“இந்த வழியா வர்றியா? பரவால்லணா எனக்கு நல்லதா போச்சு?”
“….”
“நீ கிட்ட வரவும் போன் செய்ணா, கீழ வரேன்”
“…”
“சரிண்ணா”
அழைப்பை துண்டித்து அலைபேசியை கைப்பையில் வைத்தவள் நிமிர்ந்தாள்.


Leave a Reply