Epi 6_Tedamal Kidaitha Sorkkam Nee!_Jansi

அவசரமாக அத்தனையையும் குறித்துக் கொண்டாள்.மணிவண்ணனும் கவனமாக விவரமாக அத்தனையும் தெரிந்துக் கொண்டான். ‘போச்சு, போச்சு மணிவண்ணன் நம்மை திட்டி தீர்க்க போறாங்க’ மனதிற்குள்ளாக ஆலிஸை பயம் சூழ்ந்தது.

அடுத்தடுத்து மற்ற டீம்களின் ப்ரெசெண்டேஷன்ஸ் நடக்க முடிவில் ஒன்றிரண்டு மாற்றங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆலிஸ் டீம் வேலைகளை மற்றொரு டீம் லீடர் கற்றுக் கொள்ளப் போவதாகவும், சில வாரங்கள் ‘புனிதா’ எனும் அந்த டீம் லீடர் தனது டீம் வேலைகளை முடித்து விட்டு வந்து ஆலீசிடம் அவளது டீமின் வேலைகளை கற்றுக் கொள்ள இருப்பதாகவும் ராகவன் கூறினார். அது மட்டுமல்லாது ஓரளவு ப்ரொஜெக்ட் சமநிலை அடைந்து விட்டதால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை இரவே தான் டெல்லிக்கு திரும்புவதாகவும் தெரிவித்தார். அடுத்த நாள் புது ப்ரொஜெக்டின் அனைவருக்கும் தனது சார்பாக டின்னருக்கு அழைப்பு விடுத்தார். இன்னும் சில முடிவுகள் எடுக்கப்பட்டன.ஆலீஸிற்கு தான் மனம் எதிலும் இலயிக்கவில்லை.

தன் வேலையை தான் சரியாக செய்யாததாலேயே இன்னொருவருக்கு வேலை கற்றுக் கொடுக்கச் சொல்கிறார்கள் எனும் தீர்மானத்திற்கு வந்தாள். பிறர் முன்பாக அவமதிக்கப்பட்டு விட்டதாக உணர்ந்தாள். தான் ஒரு உதவாக்கரை என்பதான எதிர்மறை எண்ணங்கள் சூழ முற்றிலும் தொய்வுற்றவளாக தனது இருப்பிடம் திரும்பினாள்.

கான்ஃபெரன்ஸ் அறையிலிருந்து வெளியில் வரவும் எதிரில் நக்கலான சிரிப்போடு அமித் நின்றிருந்தான்.

“என்ன ஒரு மாசத்தில உன்னை புது டீமிலிருந்து தூக்குறாங்க போலிருக்கு, புனிதா நாளையிலிருந்து சாயங்காலம் 5-6 வருவாள், ஒழுங்கா வேலை கத்துக் கொடு” என்றுச் சொல்லிவிட்டு நகர்ந்தான். ‘ஆம் புனிதா இவன் கீழ் பணிபுரியும் டீம் லீட் அல்லவா?’ சிந்தனையின் பாரத்தில் மெதுவாக நகர்ந்தன கால்கள்.

மணிவண்ணன் வந்தான், அவளிடம் பேசினான் அவளை ஒன்றும் சொன்னானில்லை. அவளுக்கு இன்னும் குற்ற உணர்வாகியது.எதற்காகவோ பிரனீத்தை புகழ்ந்தான் அவளுக்கு முளையில் எதுவும் செல்லவில்லை. ‘இந்த ப்ரொஜெக்ட் வழக்கமானது போலல்ல ஏராளமான மாற்றங்கள் கொண்டது என ஆரம்பத்திலேயே அறிந்திருந்தும் எங்கே கோட்டை விட்டோம்? நமக்கு இவ்வளவு கவனக் குறைவா?’ மனம் நொந்தது.

வேலையும் முடிந்தது, வேலை நேரமும் முடிந்தது. ஆனால், அவள் உடனே வீடு செல்லவில்லை.மறுபடி ஒரு மாதம் முன்னால் பகிரப்பட்ட அத்தனை விபரங்களையும் வாசித்தாள். செய்த தவறுகளை பட்டியலிட்டாள். சரிசெய்யப் பட வேண்டிய வேலைகளை எப்படி செய்வதென திட்டமிட்டாள். தனது குழுவினருக்கு வேலைகளை எல்லாம் பிரித்து தனித்தனி மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்தாள். எந்த சூழ்நிலையிலும் ஒரு நொடியும் இனியும் தாமதம் ஆகக்கூடாது என்பதே அவளது சிந்தனையில் ஓடியது. பின்னங்கழுத்தின் குறுகுறுப்புகள் எல்லாம் அவளை இப்போது யோசிக்க வைப்பதில்லை. தினம் தினம் அது யாரென தேடி ஓய்ந்துப் போயிருந்தாள். ‘நோட்டமா விடுற? பார்த்தா பார்த்துட்டு போ’ எனும் நிலைக்கு வந்திருந்தாள்.

இரவு அலுவலக கான்டீனில் உணவருந்தி வீட்டிற்கு ரிக்ஷாவில் போய் இறங்க மணி பத்தை தாண்டி இருந்தது. சற்றுக் குறுகலான பாதை எனவே வீட்டின் இரண்டு நிமிட நடை தூரம் முன்பாக வரை மட்டுமெ ரிக்ஷா வரும். எனவே, வழக்கம் போல இறங்கியவள் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!