Epi 6_Uyir Oviyam Nee

அகத்தியன் தான் பேச்சை ஆரம்பித்தான். 

“அப்பா என் அலுவலகத்தில் மேற்படிப்பு படித்தால் தான் நான் அடுத்த நிலைக்குச் செல்ல முடியும் எனும் நிலை. எனவே, பார்ட் டைமாக வேலைப் பார்த்துக் கொண்டே முழு நேரமாக ஒரு வருடம் மட்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்கப் போகிறேன். ஹாஸ்டலில் தங்கிக் கொள்வேன். வாரத்திற்கு அல்லது இரு வாரத்திற்கு ஒரு முறை வீட்டிற்கு வந்துச் செல்வேன்.” என்றான்.

தாயும் மகளும் வாய் திறவாமல் அமர்ந்திருந்தனர்.

“அப்படின்னா, அப்பன் சொல்லை நீ கேக்கிற மாதிரி இல்லை. நான் தான் நீ இவ்வளவு படிச்சது போதும்னு சொன்னேனில்லை” அகிலன் மீசை ஆத்திரத்தில் துடித்தது.

“நீங்க சொன்னதும் நியாயம் தான்பா. நான் ஒன்னும் வேலையே செய்யாம படிக்கிறதா இல்லையேப்பா. இப்ப எவ்வளவு சம்பளம் வருதோ அதே மாசா மாசம் வரும். நான் படிச்சு முடிச்சதும் சம்பளம் இரண்டு மூணு மடங்கு கூட கூடும்.”

“ சம்பாதிக்கிற திமிர் உனக்கு அகத்தியா. இதுவரை நீ சம்பாதிச்சு தந்த எல்லா பணத்தையும் உன் முகத்தில விட்டெறியிறேன். அப்பதான் நீ அடங்குவ.”

தகப்பனின் ஆக்ரோசத்தில் சற்று நேரம் அமைதியாக இருந்தானவன்.

“அப்பா, நான் ஏன் மேல படிக்கக் கூடாதுன்னு ஒரு காரணத்தை…ஒரே ஒரு காரணத்தை நீங்க எனக்குச் சொல்லுங்க. நான் மேல படிக்காம இருக்கிறேன்.”

இப்போது அகிலன் அமைதியாக இருந்தார். சோலை அருகில் இல்லாததாலோ என்னமோ சுயபுத்தி வேலை செய்ய ஆரம்பித்ததோ?

அகத்தியன் இதனாலேயே ஞாயிற்றுக் கிழமையை தெரிவு செய்திருந்தான்.

கண்ணன் விடுமுறை நாட்களில் வீட்டில் இருப்பதால் சோலை அதிகமாய் இங்கே வருவதில்லை. குறைந்த பட்சம் இரவு 8 மணிக்கு மேல் அவர் இங்கே இருப்பதில்லை.

கண்ணன் வெளியூர் சென்றால், இரவு 11 மணி வரையிலும் கூட ஊர் கதை பேசிக் கொண்டு இவர்கள் வீட்டிலேயே இருப்பதுண்டு.

அகிலன் இன்னும் அமைதியாகவே இருக்க, அகத்தியன் அவர் பேசும்படிக்கு காத்திருந்தான். இப்போது இந்த விஷயத்தை தாமதப்படுத்தினால் அல்லது தள்ளிப் போட்டால் நாளை சோலை ஜட்ஜ் மேடமிடம் தீர்ப்பு வழங்கும் படி வழக்கு போய்விடும்.

அதனால், அன்றிரவே இந்த விஷயத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

பத்து நிமிடங்களாகியும் அகிலனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவர் சமீப காலத்தில் எந்த முடிவுகளையும் தானாக எடுத்ததே இல்லையே!

ஏனோ சோலையால் பயிற்றுவிக்கப்பட்ட அகிலனின் மனமோ ‘அகத்தியன் இன்னும் அதிகமாக படிக்கக் கூடாது அது நல்லதல்ல’ என சொல்லிக் கொண்டு இருந்ததே தவிர அதனால் என்ன தவறாகிவிடும்? என்பதை அவரால் சிந்திக்கவே முடியவில்லை. மழுங்கிப் போயிருந்தது அவரது மனம்.

“அகத்தியா அப்பா 12வதுதான் படிச்சிருக்கேன். நீ அதிகம் படிச்சா என்னை மதிக்காம போயிருவியோ?”

“இதுவரை எப்பவாவது உங்களை மரியாதைக் குறைவா நடத்திருக்கிறேனாப்பா?”

இல்லை என்பதாக அவர் தலை இங்குமங்குமாய் ஆடினது.

“அதிகம் சம்பாதிச்சா திமிர் வந்திரும்”

“அதிகம் சம்பாரிச்சா இன்னும் நல்ல வீடு வாங்கலாம். நல்ல வண்டி, நல்ல வசதியா இருக்கலாமேப்பா? என் குடும்பத்தில நான் எதுக்கு திமிர் காட்டணும் சொல்லுங்க?”

“இருக்கிறதுல நிறைவா இருக்கிறது தான் வாழ்க்கை. எதுக்காக நிறைய பணம் சம்பாதிக்க பேராசைப் படணும்?”

“என்ன படிச்சாலும், நான் ஒழுக்கமா உண்மையா உழைக்கிறதுக்காகத்தான் பா எனக்கு சம்பளம் தருவாங்க. உண்மையா உழைச்சு நல்ல வசதியா வாழறது பேராசையா என்ன? நிறைய உழைச்சா, அந்த உழைப்புக்கு பலனா நிறைய சம்பாதிக்கத்தானே வேணும்பா? அதுதானே நியாயம் பா. நானொன்னும் திருடி பிழைக்க நினைக்கலையே? உழைக்கத்தானே போறேன்?”

“ஏனோ எனக்கு நீ படிக்கிறது மனசுக்கு ஒப்பவே இல்லப்பா.”

“நீங்க அம்மாவை கல்யாணம் செஞ்சப்ப அம்மாக்கு எத்தன சவரன் நகை போட்டாங்கப்பா?”

“25 சவரன்”

“இப்ப நம்ம பாப்பாக்கு கல்யாணத்துக்கு நாம எத்தன சவரன் நகை வச்சிருக்கோம்பா?”

ஏதோ எண்ணியவர் எதுவோ புரிபட ஒரு மாதிரி திகைப்பில் இருந்தார் அகிலன்.

ஊரில் வீடு கட்ட, வீட்டுச் செலவு, சோலைக்கு திருமணத்திற்கு செய்த நகைக்கடன் பணம் திரும்பச் செலுத்த, பிள்ளைகள் படிப்பு இவை எல்லாவற்றுக்கும் அடிக்கடி வெண்ணிலாவின் நகைகள் அடகுக் கடைக்கும் வீட்டிற்கும் போகவும் வரவுமாய் இருக்க அதில் 20 சவரனை அவர்கள் திருப்ப இயலாமல் ஏற்கெனவே விற்று விட்டிருந்தனர்.

வெண்ணிலாவின் தாலிக் கொடியும், கம்மல்களும், சில வளையல்களும், நுவலியின் சின்ன செயின் ஒன்றும், பொட்டுக் கம்மலும், ஒரு ஜிமிக்கி ஜோடும் தவிர்த்து வீட்டில் தங்கம் என்பதே இல்லை.

அவை எல்லாம் சேர்த்தாலும் 10 சவரன் கூட தேறாது.

‘தான் மகளுக்கு இதுவரை என்ன சேர்த்தோம்?’ என எண்ணவும் மனம் பதறியது.

அவள் கைகளில், காதுகளில் அதிகம் இருப்பது மெட்டல் மற்றும் பிளாஸ்டிக் அலங்கரிப்புகளே.

சமீபத்தில் வந்த சீட்டுப் பணம் ஐம்பதாயிரத்தையும் சோலையிடம் அப்படியே ஜம்பமாய் தூக்கிக் கொடுத்து விட்டிருந்தார்.

அவள் மட்டுமல்ல, அவள் மூலமாய் அறிமுகமான ஊர்க்காரர் யாருக்கு பிரச்சினை என்றாலும் கூட மாமா ஒரு ஆயிரம் ரூ இருந்தா கொடுங்க. இரண்டாயிரம் கொடுங்க என இவர் கொடுத்தது முப்பதாயிரங்கள் தாண்டி இருக்கும்.

“மாமான்னா மாமாதான்… பிறருக்கு உதவுறது புண்ணியம் மாமா. நிச்சயமா நீங்க நல்லாருப்பீங்க பாருங்க.” என கேட்கும் போதெல்லாம் ஏற்பட்ட புளங்காகிதங்கள் எல்லாம் இப்போது புஸ்வானமாகின.

‘தாமும் பணமோ, நகையோ சேர்க்காமல், சம்பாதித்து போடுகிறேன் என்கிறவனையும் தடுக்கிறோமோ?’ என மனம் குத்திக் கிளறவும் தன் இருக்கையை விட்டு சடாரென எழுந்தவர் தன் கெத்தை குறைக்காதவராக,

“சரி மேற்படி விபரம் அம்மாட்ட சொல்லு, ஏதாவது பணம் கிணம் தேவைன்னா எனக்குச் சொல்லு. ஒரு வருசம் தான் படிப்புங்கிறதால விடுறேன். இதையே எப்பவும் வேலையா வச்சிருக்கக் கூடாது” என்றவராக விறுவிறுவென படுக்கையறை நோக்கிச் சென்றார்.

வெண்ணிலாவுடன் பிள்ளைகளும் சமையலறையில் உணவு சாமான்களை எடுத்து வைக்கவும், பாத்திரம் கழுவி அடுக்கவும் உதவி செய்தனர்.

இனி ஒரு வார்த்தை பேசினாலும் அகிலன் தீர்ப்பு மாறி விடக் கூடாதென அஞ்சியவர்களாக மூவரும் பேச்சற்று இரவை கடந்தார்கள்.

உள்ளத்தில் குத்துண்டதாலோ என்னமோ அகிலனால் அன்றிரவு உறங்கவே முடியவில்லை.

Pages: 1 2 3


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!