கையிலிருந்த தாளை ட்ராவில் பத்திரப்படுத்தி விட்டு புனிதாவை வரவேற்றாள்.
“ஸாரி டியர், லேட் பண்ணிட்டேன்” புனிதா இனிமையானவளாய் இருந்தாள். இந்த டீமில் இன்னும் பலர் சேர இருப்பதாகவும் கூடுதலாக ஒரு டீம் லீடர் தேவைப்படும் என்பதாலெயே இவளிடமிருந்து தான் வேலையை கற்றுக் கொள்வதாக கூறியிருந்ததால் ஆலிஸின் நெருடல்கள் மறைந்து விட்டிருந்தன. அது போக கடந்த வாரங்களில் அவளது குழுவின் வேலை சிறப்பாக அமைந்திருந்தது பாராட்டுக்களும் பெற்றிருந்தாள். எனவே, முன் போல உற்சாகமாக இருந்தாள்.
எப்போதும் அதிகமாய் யாரிடமும் நெருங்காத ஆலிசிற்கு புனிதாவினால் உண்டான நன்மை அவள் மூலமாக அலுவலகத்திலுள்ள பல்வேறு தகவல்கள் அவளுக்கு தெரிய வந்திருந்தன.
அது போல அவள் வேலை கற்றுக் கொள்வது ஒரு பக்கம் இருக்க தகவல்கள் பலவற்றை அள்ளித் தெளித்தாள். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ப்ரொஜெக்டிற்காக வந்திருந்த எல்லா வெளியூர் மேனேஜ்மெண்டும் திரும்ப போய்விடும் என்றாள்.
‘ஓ, இவளுக்கு மட்டும் எல்லா விஷயமும் எப்படி தெரிஞ்சிருக்கு?” என ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டவளுக்கு அப்போது அவள் கூறியது முழுமையாய் உரைக்கவில்லை. வீட்டில் சமையல் செய்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று ஞாபகம் வந்து தொலைத்தது.
வெளியூரிலிருந்து வந்தவர்கள் என்றால் அதில் பிரனீத்தும் உண்டு தானே? ஆம் அப்படியென்றால் அவனும் சென்று விடுவானா? இன்னும் ஒரு வாரத்திலா? கவலை மனதை அரித்தது. பலூனிலிருந்து காற்று குறைவது போலவே சர்ரென்று உற்சாகம் குறைந்துப் போகவே, இயந்திரத்தனமாக வேலைகளை செய்து முடித்து உறங்கிவிட்டிருந்தாள். துன்புறும் மனதிற்கு ஒரே ஆறுதல் தூக்கம் அல்லவோ?
அடுத்த நாள் மதியம் தன் டீமிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு இன்னும் சில நாட்கள் கழித்து இவனைக் காண இயலாது என தன் இதயத்தை யாரோ பிடுங்கி எடுப்பதைப் போன்ற வலி எழுந்தது. இப்போதும் அதே மென்மையோடு யாருக்கோ சந்தேகத்தை நிவர்த்தி செய்துக் கொண்டு கொண்டிருந்தான்.
‘கோட்டான், ஊமைக் கோட்டான் இப்படியே பேசிக்கிட்டிரு, கிட்டத்தான் இருக்கிற. என் மனசு உனக்கு புரியவே இல்லில்ல?’ மனதிற்குள் அவனை திட்டித் தீர்த்தாள்.


Leave a Reply