‘ஊமைக் கோட்டான் நீயா? அவனா? உன் மனதில் இருப்பதை அவனிடம் சொன்னாயா?’ அவள் மனம் பதிலுக்கு அவளை திட்டித் தீர்த்தது.
‘அதெப்படி சொல்ல முடியும்? அவருக்கு திருமணம் ஆகிருச்சோ என்னமோ? நான் எதையாவது கேட்டு அவர் என்னைப் பற்றி தப்பா நினைச்சுட்டா? … அதுக்கு இப்படியே இருந்துக்கலாம்’ தனக்குத் தானே பதிலளித்தாள்.
‘அப்புறம் எதுக்கு அந்தாளை திட்டுற? சரி இந்த ஒரு வாரமாவது ஆசைத் தீர பார்த்துக்கிறேன்’ அவள் மனம் ஜொள்ளியது.
இப்படி ஒரு சூழலை அவள் சிந்தித்து இருக்கவில்லை. இந்த அளவிற்கு ஒரு ஆண்மகனை தான் நேசிப்போம் என்று அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை. இந்த முறை படுபயங்கரமாக பாதிக்கப்படப் போகிறோம். இந்தப் பிரிவில் இருந்து தப்பிக்க ஏதேனும் வழி கண்டுப்பிடிக்க வேண்டும்? மனம் கண்ணீர் விட்டழ அதன் சுவடே தெரியாதவள் போல உணர்வுகளை துடைத்தவாறு புன்னகைத்துக் கொண்டாள். கரம் வழக்கம் போல அருகிருந்த தாளொன்றைத் தேடி தன் மன உணர்வுகளைக் கிறுக்கத் தொடங்கியது.
என் செய்வேன்…
வெகு நாளாய்
எவர் முகமும் காண,
எனக்குள்
இத்தனை
ஆர்வம் துளிர்த்ததில்லை.
வெகு சில நாளாய்
உன் முகம் கண்டிடவே
முகமும், அகமும்
மலர்கின்றது.
ஆண் என்றாலே அதட்டல் தான்
காரணமில்லா அரட்டல் தான்
என்று பதிவிட்டிருந்த என் மனதோடு
உந்தன் கருத்துக்கள் தவறென்று
சொல்லிச் சென்றது உன் வருகை.
அரங்கம் நடுவில் நீ நின்று
உந்தன் கருத்தைப் பகிர்கையிலே,
அவை அதிராத மென்மையில்
உன் பேச்சும்,
அதனினும் மெலிதாய்
புன்னகையும் கொண்டே
என் உள்ளத்தில்
பிரளயம் வர வழைத்தாய்.
நீ இங்கே வந்தது சில நாட்கள் தங்க
நீ சென்ற பின் எவ்வாறு
நான் உனை காண்க?
மீண்டும் சந்திப்பது
வாழ்வில் உண்டோ இல்லையோ?
என்றொரு புறம்
மனம் அங்கலாய்க்க
நாளை வருவதை நாளைப் பார்ப்போம்.
இன்று இருப்பதில்
நிறைவுக் கொள்வோம்.
என்னும் வெட்கம் கெட்ட எந்தன் மனது
உன் முகம் காணவே மலர்ந்திடுதே
உனை நோக்கியே மயங்கிடுதே
என் செய்வேன்?
நான் என் செய்வேன்? …..
கையில் கிடைத்த பழுப்புக் காகிதத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தவளுக்கு சந்தேகம் என்றுக் கேட்கவந்த டீம் மெம்பர் வந்தவுடனே தான் தாம் ஆஃபீஸில் இருப்பதே ஞாபகம் வந்தது. இந்த அளவிற்கா நாம் மெய்மறந்து போய் விட்டோம்? என எண்ணியவள் தாளை மடித்து வழக்கம் போல ட்ராவில் வைத்து விட்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்.


Leave a Reply