Epi 1_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 1_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 1

“பாப்பூ, அழக்கூடாது என்ன?” தேம்பிக் கொண்டிருந்த அந்த பத்து வயது சிறுமியின் முகத்தை வருடி, தலையை கோதிய அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். 

புன்னகைத்த வண்ணம் புரண்டு படுத்தவளோ, தனது படுக்கையில் கைகளை துழாவி அருகிருந்தவனை இறுக்கி கட்டிப் பிடித்தாள். அவள் அணைப்பில் அகப்பட்டுக் கொண்டு இருந்தவன் திமிறினான். அவன் தன்னை விடுவிக்க பார்த்தும் முடியாமல், அவளை எட்டி உதைத்ததில் அவள் உடனே தனது கனவு கலைந்து எழுந்து அமர்ந்தாள்.

“டே பிரசன்னா…”

“அக்கா மீ பிக் பாய்…டோண்ட் ஹக் மீ” தூக்கத்தில் உளறிய கொளுக் மொளுக் பிரசன்னா தனது அக்கா படுக்கையை விட்டு எழுந்த சந்தர்ப்பத்தில் அந்த கட்டிலின் பெரும் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டான்.

“டே தள்ளிப் பட்ரா…” சம்பூர்ணா தம்பியை இடித்த வண்ணம், கட்டிலில் இடம் பிடித்துக் கொண்டு, மீதியிருந்த இரவில் மறுபடியும் படுத்து தூங்கிக் கொண்டாள்.

இப்படியாக அவ்விரவு பின்னர் விடிந்தும் விட்டிருந்தது… அவசர அவசரமாக அதிகாலை நேரம் சமையலை செய்துக் கொண்டிருந்தவள் இப்போதும் இரவு நேரம் போலவே உல்லன் உடைகளை அணிந்திருந்தாள். 

ஆம், நியூ டெல்லியின் நவம்பர் மாத இலேசான குளிருக்கு அந்த உடை மிக மிக அவசியம். அடுத்த மாதத்தில் இருந்து அவர்கள் அனைவரும் கடும் குளிரை எதிர்கொள்ள வேண்டும்.

அவர்கள் இருப்பது அதாவது சம்பூர்ணா, பிரசன்னா மற்றும் அவர்கள் தந்தை கணேசன் இவர்கள் இருப்பது புது தில்லியின் மத்திய தில்லி பகுதியான கரோல் பாகில். 

புது தில்லி அதீத காலநிலை கொண்ட இடம் என்பது எல்லோரும் அறிந்த விபரம்தான். வெயிலோ, குளிரோ எதுவானாலும் இங்கே எல்லாமும் அதிகம் தான். அடுத்த இரண்டு மாதங்கள் அதுதான் டிசம்பர் மற்றும் ஜனவரியில் டெல்லியில் குளிர் அதிக பட்சம் ஐந்து டிகிரி செல்சியஸ் வரையிலும் தாழ்ந்து பாடாய் படுத்தும் எனில் பெப்ருவரி மற்றும் மார்ச் மாதத்தில் இங்கு வசந்த காலம் என மாறிப் போகும். அதன் பின்னர் ஏப்ரல் முதல் ஜீன் வரையிலும் வெயில் காலம்.ஆம், அதிக பட்சம் நாற்பத்தி ஐந்து டிகிரி செல்ஷியஸ் வரையிலும் கூடி வாட்டக் கூடிய வெயில் காலம்.அதற்கடுத்து ஜீலை முதல் செப்டம்பர் வரையிலும் மழைக்காலம்.

இவ்வாறு ஏற்கெனவே தில்லியில் கால நிலை காரணமாக பல்வேறு மாற்றங்கள் இருப்பினும் அதனோடு கூடுதலாக இயற்கை மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருவதும், ஜனத் தொகையால் பெருகும் பல பிரச்சனைகளும் என பல பிரச்சனைகளுக்கு ஊடேயும் மிக பரபரப்பான மாநகரம்.

சமையலறையில் நின்றுக் கொண்டு இருந்தவளிடம் பிரசன்னா வந்து நின்றான்.

“அக்கா டிஃபன்…” முனகலாக கேட்டான். அவனது பையில் சப்பாத்தியும் பாஜியும் அடங்கிய டிஃபனை வைத்தவள் அவனிடம்,

“மறக்காம மாஸ்க் போட்டுக்கோமா…” எனவும்,

‘எல்லாம் எனக்குத் தெரியும். நீ பொத்து’ என்பதைப் போல தனது ஒற்றைக் கையால் காங்கிரஸ் கட்சி சின்னத்தை காட்டியதோடு நில்லாமல் தனது கையால் தனது வாயை பொத்தி அவளுக்கு டெமோ காட்டி முறைத்து நிறுத்தினான். அத்தோடு நில்லாமல்,

“தள்ளி உட்காரணும், பிரண்ட்ஷிப் முக்கியம் ஆனால் தொடாமல் கூட பேசலாம், சோஷியல் டிஸ்டன்ஸிங்க் இம்பார்டண்ட்… நோ டச் அட் ஆல்… ம்ம்ம்… ஐ க்னோ எவ்ரிதிங்க்….ம்ம்ம்” என தமக்கை முன் தினத்தில் இருந்து தனக்கு சொல்லிக் கொண்டு இருந்தவைகளை அவளிடமே ஒப்புவித்து கடுப்பாக வாயில் நோக்கி புறப்பட்டான்.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!