மணி ஒன்பதை நெருங்கவும் தனது மடிக்கணிணிக்கு உயிர் கொடுத்து அதன் எதிரில் கேமரா எதிரில் தனது முகம் தெரிய வரும் கோணத்தில் அமர்ந்து பாடம் எடுக்கலானாள்.
சம்பூர்ணா பி எட் முடித்த ஆசிரியை, கடந்த வருடத்தில் தனது படிப்பை முடித்து பள்ளி ஒன்றில் ஆசிரியையாக சேர்ந்து பணி புரிந்தவளை வேலையில் இருந்து நீக்கி வீட்டில் அமர்த்தி இருந்தது கொரோனா பெருந்தொற்று.
தற்போது மூன்று மாதங்களாக குறிப்பிட்ட சில வகுப்புகளை கவனித்துக் கொள்ளும் தற்காலிக ஆசிரியையாக ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருகிறாள். இந்த மாதமே அவளது வேலையின் மூன்று மாத காலம் நிறைவுறுவதாக இருக்க, அடுத்த வேலைக்காக வெகு தீவிரமாக தேடிக் கொண்டு இருக்கின்றாள்.
அவர்களது வீட்டில் வேலை செய்தே ஆகவேண்டும் எனும் பொருளாதார நெருக்கடி நிலை இல்லை எனினும் கூட ஆசிரியையாக பணிபுரிவது அவளது நெடு நாளைய ஆசை. அவள் தனது ஆசை மற்றும் கனவுகளுக்காக வெகு தீவிரமான முயற்சிகளில் இருந்தாள். பெருந்தொற்று அவள் மற்றும் அவளைப் போல சமீபத்தில் படிப்பை முடித்து வேலையை தேடுகின்றவர்களின் பிழைப்பில் வைரஸை அள்ளிக் கொட்டி இருந்தது.
ஹெட்செட்டை மாட்டிக் கொண்டவள் தனது வகுப்பிற்கு பாடம் எடுக்கலானாள். ஏழாம் வகுப்பிற்கு கெமிஸ்ட்ரி நடத்துவது ஒன்றும் சுலபமல்ல. முன் தினத்தின் வீட்டுப் பாடங்களை சரிவர செய்து இருக்கின்றார்களா? என சரிபார்த்து அவற்றைக் குறித்து சொல்லிக் கொண்டு இருக்கையில் யாரோ ஒருவரின் இணைப்பு அன்ம்யூட் ஆகி “ஓம் ஓம் புவஸ்யக…” என காலை நேர பாடல் ஒலித்தது. யாரென சரி பார்த்தவள் “ஆஷிஷ் மிஸ்ரா கேன் யூ ப்ளீஸ் ம்யூட்?”
சத்தம் உடனே நின்று போனது. அடுத்து பாட வேளையில் “ஆர் யூ தெர்?” என்பதில் இவளது பாதி நேரம் கழிய, மீதி நேரம் பாடத்திலும், கேள்வி பதிலிலும் கழிந்தது. ஒன்றரை மணி நேர வகுப்பு வழக்கம் போல பற்பல அனுபவங்களுடன் கழிந்தது. பாட வேளை முடிந்ததும் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய விபரங்களை மின்னஞ்சலில் அனுப்பி விட்டு தனது மடிக்கணிணிக்கு ஓய்வு கொடுத்து எழுந்தாள்.
“ஹப்பா என்னமா பசிக்குது?” அவசரமாக உணவை எடுத்து உண்டவள் சுடச்சுட இருந்த சாயாவை உள்ளிறக்கினாள்.
“ஷ் ஷ் அமிர்தம்” சப்புக் கொட்டினாள்.
அடுத்த அரை மணி நேரம் முடிவுற்றதை அவளது அலைபேசி நினைவுறுத்த கண்ணாடியை நோக்கிப் பார்த்து தோற்றத்தை சீர்ப்படுத்தினாள்.
அவள் ஐந்தரை அடி உயரம் எனினும் நல்ல சதைப்பற்றான உடல்வாகில் கும்மென்றிருந்தாள், அவளது இருபத்தி நான்கு வயதை அவளது உடல்வாகு ஆமென ஏற்றுக் கொள்ளச் செய்யும் எனினும் அந்த உருண்டை முகமும், அழகு பல்வரிசை தெரிய சிரிக்கும் குறும்புச் சிரிப்பும், களங்கமில்லா புன்னகையும் அவளது அகவையை பதினேழு, பதினெட்டை தாண்டி மதிப்பிடச் சொல்லாது.
தனது அடுத்த வகுப்பை புன்னகைத்து ஆரம்பித்தவள் மாணாக்கரிடம் பாட விபரங்களை கேட்டுக் கொண்டு இருந்தாள். வகுப்பின் நாற்பது மாணாக்கரில் மூவர் இன்னும் பாடத்தை முடித்து வந்திருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொருவராக முன் வந்து காரணங்களை அடுக்கவும், சற்றாக அவர்களை அதட்டி திருத்தியவள் மூன்றாமவன் அவர்கள் அழைப்பில் வந்து அன்ம்யூட் செய்து பேசவும் அந்த பெயர் கண்டதும் ஸ்தம்பித்தாள்.
“மேம் ஐயாம் ஆனந்த் சதுர்வேதி”
அந்த ஆனந்தில் இவளின் சர்வாங்கமும் அடங்கி விட, அவன் சொன்ன காரணம் எல்லாம் அவள் காதில் விழவில்லை. அடுத்த முறை மறவாமல் ஹோம்வர்க் செய்து வரவேண்டும் என அதட்டியவளது வார்த்தைகளில் அதட்டலையோ காணவில்லை.
அடுத்து பாடம் தன் போக்கில் நடந்துக் கொண்டு இருக்க, அவளது வலது கை தானாக தனது அலைபேசியை எடுத்து வாட்சப்பிற்கு சென்று பல மாதங்கள் முன்பான அந்த செய்தியை தேடியது.
சேகரிக்கப் படாத அந்த எண் கிடைக்காமல் ஆங்கிலத்தில் பாப்பு என தேடினாள், இப்போது பல தகவல்கள் இவளது பார்வைக்கு வந்தன. அவற்றில் “ஹாப்பி” என ஆங்கிலத்தில் ஆரம்பித்த தகவலின் தலையை தட்டினாள்.


Leave a Reply