“பிரசன்னா மொபைல் ஃபோன் வீட்ல வச்சிட்ட தானே?”
தன்னிடம் அக்கா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் “இவ்வளவு நாள் இதில் தான பாடம் நடத்தினாங்க? இப்ப இது வேணாம்னு சொன்னா?” தனது கால்களை அடமாய் உதைத்தான்.
“இப்ப தான் உனக்கு கிளாஸ் ஆரம்பிச்சுட்டதேடா? ஸ்கூல் போகிற இல்லை. அங்கே மொபைல் போன் கொண்டு போகக் கூடாதும்மா.”
“திஸ் இஸ் ரிடிகுலஸ்…. எய்ட்த் பிள்ளைங்களுக்கு இன்னும் ஆன்லைன் கிளாஸ் நடத்துராங்க. எங்களை ஸ்கூல் கூப்பிடுறாங்க… ஐ காண்ட் அக்செப்ஃப்ட் இட்.” மூக்கு விடைக்க பேசிக் கொண்டு இருந்தவன் டக் டக்கென கேட்ட அந்த காலடி சப்தத்தில் அமைதியானான்.
“சம்பூ”
“சம்பூ இல்லை இது பெரிய சொம்பூ… குண்டம்மா. அக்காவாம் அக்கா காலிப்பான சொக்கா….” முனகினான்.
சிரிப்பை அடக்கிக் கொண்டவள், “என்ன அப்பா?” பதிலளித்தாள்.
“தம்பி ஆயத்தமாகிட்டானாம்மா?”
‘வீட்ல ஒருத்தன் தமிழையும் இங்கிலீஷையும் போட்டு குழப்பிப் போட்டு பேசினா, இன்னொருத்தர் சுத்த தமிழ்ல பேசுவார். சும்மாவா? தமிழ் சங்க உறுப்பினராச்சே? நடத்துங்க நடத்துங்க…’ என மனதிற்கு உள்ளாக எண்ணிக் கொண்டாலும்…
“ஆம் அப்பா, ஆயத்தமாகி விட்டானப்பா… ஆனால், அலைபேசியைதான்…”
“என்னது அலைபேசியை?”
“அப்பா டேக் திஸ் மொபைல் போன்…” அவரிடம் தனது அலைபேசியை கொடுத்தவன்,
“ஆர் யூ ஹாப்பி நவ்? ஐ க்னோ ஹவ் டு கோ டு ஸ்கூல்… சோ ப்ளீஸ் டோண்ட் அக்கம்பனி மீ.” அக்காவை கடுப்பாக பார்த்து முறைத்தவனாக வீட்டை விட்டு வெளியேறினான்.
விறுவிறுவென சென்றவனை பின் தொடர்ந்தவர்கள் தங்களது ப்ளாட்டிற்கு அடுத்த அந்த பகுதியில் நிற்க, சற்று நேரத்தில் தரைத்தளம் சென்று தனது பள்ளியின் பஸ்ஸிற்காக அங்கு கீழே நிற்கின்றவனை கவனித்தனர்.
அவனும் கூட இவர்களை ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டு, கண்டும் காணாதவனாக அமைதியாக நின்றான். சற்று நேரத்தில் அவன் தனது பள்ளியின் பஸ்ஸில் ஏறவும், இருவருக்கும் கை காட்டினான். தந்தையும் மகளும் பதிலுக்கு புன்னகைத்த வண்ணம் கை காட்டி பிரசன்னாவை வழியனுப்பி விட்டு உள்ளே வந்தனர்.
இப்போது சற்று நேரத்தில் அப்பா அலுவலகத்திற்கு செல்ல புறப்பட்டுக் கொண்டு இருந்தார்.
“பாப்பா… நேத்துதான் முத்துராஜ் ஊரில் இருந்து அழைச்சிருந்தான்.”
“மாமாவா? எப்பப்பா? நீங்க சொல்லவே இல்லை” மகள் குறைப்பட்டாள்.
“உன் வேலை கெடக் கூடாதென்று உனக்கு அழைக்கவில்லையாம். ஞாயிற்றுக் கிழமை அன்றைக்கு அழைப்பானாம்.”
“சரிப்பா, என்ன விஷயமப்பா?”
“ஆனந்த் தம்பி பக்கத்து ப்ளாட் வாங்கிருக்காராம். அது சம்பந்தமான வேலை எல்லாம் நம்மை கொஞ்சம் மேற்பார்வை பார்த்துக்கணுமாம்.”
‘யாரு அந்த தி ஃபேமஸ் எமர்ஜிங்க் ஃபேஷன் டிசைனர் ஆனண்ட் முட்டுராஜா?’ மனம் நக்கலடித்தாலும்
“அத்தானா? எப்படியப்பா? நமக்கு கூட தெரியாம?”
“என்னிடம் ஒரு வருடம் முன்பு வீட்டுத் தரகர் தொடர்பு எண் கேட்டிருந்தானம்மா… கொடுத்திருந்தேன். இப்போது பத்திரப்பதிவை இங்கு வந்து செய்து விட்டு சென்று விடுவானாம். ஏற்கெனவே பணப் பறிமாற்றம் ஓரளவு நிகழ்ந்து விட்டதாம். மீதி வேலைகளை கொஞ்சம் அவன் செய்து முடித்து விட்டு செல்ல, நாமும் உதவ வேண்டுமாம்.”
“பார்த்தீங்களாப்பா உங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லலையே? பெரியவங்கன்னு மரியாதையே இல்லை.” அப்பாவை கொஞ்சம் உசுப்பி பார்த்தாள்.
“நம்ம வீட்டு பையன்மா, சின்னவர்கள் செயல்களை பெரியவர்கள் பெரிது படுத்தக் கூடாது சம்பூ.”
“தவறென்றால் சுட்டிக் காட்ட வேண்டுமப்பா… அப்படியும் சின்னவர் எல்லாம் இல்லை. வயசு ஏழு கழுதை வயசாகிருச்சு.”
“பாப்பா அது எழு வயது கழுதை… சரி அதை அப்புறம் பார்க்கலாம், வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று முத்துராஜிடம் பேசி விபரம் கேட்டுக் கொள்.”
“இந்த வருசம் ஊருக்கு போவோமா அப்பா?”
“இப்போது நிலைமை சரியில்லையேம்மா அடுத்த வருடம் போகலாம் சம்பூ, சரி எனக்கு நேரமாகின்றது நான் வருகிறேன்.” என விடைப் பெற்றுச் சென்றார்.


Leave a Reply