Epi 2_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 2_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 2

மதியத்திற்குள்ளாக சம்பூ எனும் சம்பூர்ணா நடத்த வேண்டி இருந்த வகுப்புகள் நிறைவுற்று இருந்தன. அன்றைய தினம் வெகு நாட்களுக்கு பின்னர் வீட்டில் தம்பி இல்லாமல் தனித்து இருக்கவும் என்னமோ போல் இருந்தது. எதையாவது உண்ண கேட்டுக் கொண்டோ, இல்லை தன்னிடம் வம்பிழுத்துக் கொண்டோ இருக்கின்ற பிரசன்னா இன்று பள்ளி செல்லவும் அவளுக்கென உருவானது அந்த சின்னதான தனிமை வெளி.

தனிமையை எதிர்கொள்வது மிகவும் சவாலான விஷயம் தான். அதிலும் பெருந்தொற்று காலத்தில் தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்றே பழகி விட்டிருக்க அக்கம் பக்கம் அத்தனை நெருக்கமான நட்போ உறவோ இல்லாதிருக்க தனியாக அமர்ந்து என் செய்வதாம்?

அவளைப் பொருத்தவரையில் அவளது மனது தனிமையில் எப்போதும் கற்பனைக்கும் நிகழ்காலத்திற்கும் நடுவில் ஊஞ்சல் கட்டி ஆடும். இழந்தவைகளை மனம் தேடும். மனதிற்குள்ளாக ஏதோ ஒரு வெறுமை புகுந்து வெகு நாளாகிற்று. ஏன் எதற்கு எனப் புரியாத ஒரு வெறுமை. ஒரு வேலை விடாமல் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் அளவு அவளை துரத்தும் அந்த வெறுமை.

அன்றும் வழக்கம் போல தனது நினைவலைகளில் ஆழ்ந்து போனாள். வீட்டின் செல்ல தேவதையாக அவளிருந்தது ஒரு காலம். தாய்க்கும் தந்தைக்கும் ஒற்றை மகளாக கொண்டாடப்பட்ட அந்த காலம்.

சம்பூர்ணா தனது ஒன்பது வயதுவரை தாய் தந்தை சீராட்டலோடு கூட அத்தனையாக வானத்தின் உச்சியில் இருந்தவள்தான். இவர்கள் இருந்தது தமிழகத்தின் வெகுவாக அறியப்படாததொரு இயற்கை வளம் கொஞ்சும் கிராமம். முத்துராஜ் சம்பூர்ணாவின் தந்தையின் பால்ய நண்பர்.

விவசாயமே எனது வாழ்க்கை என்பவர் முத்துராஜ் மாமா… ஆமாம் சம்பூர்ணா அவரை அப்படித்தான் அழைப்பாள். முத்துராஜின் மனைவி சாம்பவிக்கும் அவள் செல்லம் தான். இரத்த உறவு இல்லாமலும் கூட அத்தை மாமாவென அழைக்கும் பழகும் விதத்தில் அவர்களுக்கு இடையே மிக அழகான உணர்வு பிணைப்புகள் உண்டு.

கணேசனுக்கு அரசாங்க வேலை, அடிக்கடி வேலையின் காரணமான இட மாறுதல்கள் இருக்கும் என்பதால் தனது குடும்பத்தை கிராமத்திலேயே இருக்கும் படி வைத்துக் கொண்டார். அவ்வப்போது லீவு எடுத்துக் கொண்டு குடும்பத்தினரை பார்க்க வந்து செல்வார். இவருடைய நிலபுலன்களையும் முத்துராஜ் தான் நிர்வகித்து வந்தார்.

சம்பூர்ணாவின் அன்னை பார்வதி மறுபடி கருவுற்றதை அறிந்ததும் அவள் முதன் முதலில் ஆனந்த் அத்தானிற்கு தெரிவிக்க ஓடினாள். அவன் முன்தினம் ஹாஸ்டலில் இருந்து லீவில் திரும்பி இருந்ததை இவள் அறிந்து இருந்தாளே?

அப்போது ஆனந்தின் வயது பத்தொன்பது, ஹாஸ்டலில் இருந்து திரும்ப வரும் போது இவளுக்காக வழக்கம் போல சில திண்பண்டங்களும் வாங்கி வந்திருந்தான்.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!