அத்தியாயம் 12_ துரத்தும் நிழல்கள்_ஜான்சி

அத்தியாயம் 12
மயங்கிச் சரிந்தவளை, “ஏய் ஏய் அவளைப் பிடி”, என யாரோ விழாதபடி பார்த்துக் கொள்ளச் சொல்வதை செவி வழி கேட்டு மூளை உணரும் முன்னதாக… தன்னைச் சுற்றிய சத்தங்கள் அத்தனையும் கொஞ்ச கொஞ்சமாய் மங்கி, சுய நினைவினின்று நழுவிக் கொண்டு இருந்தவள் மனதில் சிறுவயது ஞாபகங்கள் நிழலாடின.
பிடிப்பின்றி பின்புறம் சாய்ந்துக் கொண்டிருந்தவள் தொம்மென எதன் மேலோ மோதி விழுந்து மயக்கமடைந்தாள்.
ரிஷாவின் மனக்கண்ணில் 8 வருடங்கள் முன்னதான அவர்கள் வீடு தோன்றியது. சுற்றிலும் பலவகை மரங்களிருக்க, சென்னையின் அந்தப் பகுதியில் சில வீடுகளை வாங்கிப் போட்டிருந்தார் சண்முகம்.
ரிஷாவின் தாய் செல்வி எல்லோருடனும் மிகவும் அன்பாக பழகுபவர் அதனால் அக்கம் பக்கம் இருந்த வீடுகளில் இருந்தவர்களோடு அவர்களுக்கு நல்ல சினேகிதம் ஏற்பட்டிருந்தது. ஒருவருக்கொருவர் பேசுவது தான் அப்போது இருந்த ஒரே ஒரு மிகப் பெரிய நேரப் போக்கு. பேச்சு பேச்சு, எந்நேரமும் பேச்சுக்கள் தான்.
வருடங்கள் கடந்து அக்கா மல்லிகாவின் மகன்களான அரங்கநாதன் மற்றும் சந்திரன் இருவரும் திருமணம் முடிந்து மாமா இருக்கும் இடத்திலேயே தங்கள் குடும்பத்தோடு குடி வந்து விட்டனர். அவர்களோடு கூட அவர்கள் சகோதரி லலிதாவும் தன் குடும்பத்தோடு குடியேறினாள்.
சண்முகத்தின் அக்கா மல்லிகாவின் கணவர் பொம்பளை பொறுக்கியாகவும், பொறுப்பற்றவராகவும் இருந்தும் கூட அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவிய சண்முகத்தை ஊரில் மிகவும் உயர்வாக மதித்தனர்.
ரிஷாவின் ஆழ்மனதில் தன் அத்தான்களின் பிள்ளைகளோடு அந்தப் பெரிய வீடு காம்பவுண்டு நடுவில் உள்ள மரங்கள் அருகே சொப்பு வைத்து விளையாடிக் கொண்டிருந்த தருணங்கள் அத்தனையும் நினைவிற்கு வந்தன.
சொந்தக்காரர்கள் எல்லோருமாய் ஒன்றாய் கூடி இருக்கும்போது அங்கே மகிழ்வுக்கு என்ன குறைவு? எப்பொழுதும் அரட்டையும், ஊர் பேச்சுக்களும், கிண்டல், விளையாட்டாய் வம்பிழுப்பது என்று கலகலப்பாக அந்த நாட்கள் கடந்து கொண்டிருந்தன.
அப்போது ரிஷா ஏழாம் வகுப்பில் இருந்தாள். அவளுக்கு 12 வயது நடந்து கொண்டிருந்தது. குடும்பத்தினர் சூழ இருந்ததாலும், ஒற்றைப் பெண் என்பதால் செல்வி தன் மகளை கண்ணுக்கு கண்ணாக வைத்துப் பார்த்துக் கொண்டு மற்ற யாருடனும் அதிகமாக பழக விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்து வந்தார்.
அதனால் அவளுக்கு பள்ளித் தோழர்கள் தவிர, வெளியில் விளையாட்டுத் தோழர்கள் கிடையாது.
வீட்டிலும் அவளின் உற்ற தோழர்கள் அரங்கநாதன் மற்றும் சந்திரனின் குழந்தைகளே. தன்னை விட மிகவும் சிறியவர்களான அவர்களோடு விளையாடுவதால் ரிஷா அவர்களைப் போலவே குறும்பாக நடந்துக் கொள்வாள்.


Leave a Reply