“டுபாகூர்னா அறிவாளின்னு அர்த்தம் உங்களுக்கு தெரியாதா அத்தான்?” என கிக்கிக்கீ யென சிரித்து வைப்பாள்.
எப்போது பார்த்தாலும் அவனுக்கு தெரியாத மெட்ராஸ் பாஷையை கொண்டு அவனை சீண்டுவதைக் கண்டு சந்திரனின் மகளான கீர்த்தியும் கூட இப்போது தன் சித்தப்பாவை கிண்டலடிக்க ஆரம்பித்து இருந்தாள்.
செல்விக்கு தன் மகளின் பேச்சுக்கள் பிடிப்பதில்லை, தன் கணவர் முன்னால் அவளை திட்ட முடியாது என்பதால் அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் அவளை நன்கு கண்டித்து வைப்பார்.
“அவன் உன் வயசுப் பையனா? பெரிய ஆளு வேலைக்கு போகிற பையன் அவனைப் போயி கிண்டலடிக்கிற? ஆளு வளர்ந்தா போதாது அறிவும் வளரணும்.”
அம்மாவிடம் எத்தனை கொட்டு வாங்கினாலும் அவளது இயல்பான துடுக்குத்தனத்தால் அவள் வாயை கட்டுப் படுத்த இயலாமல் இருந்தது.
மாமன் மகளை பேச விட்டுக் கொண்டு, அமைதியாக கேட்டுக் கொண்டு சுந்தர் இருப்பான். அவளது செயல்கள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். தன்னிடம் உரிமையாய் அவள் விளையாடுவது அவனது மனதிற்கு பிடித்த ஒன்று.
தான் சிறுபிள்ளையாக இருப்பினும், அப்படித்தான் எல்லோரும் நினைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயம் எதுவும் இல்லை. தன்னுடைய துடுக்குத்தனமே தனக்கு ஆபத்து வரவழைக்கத் தக்கது என்பதை உணராமல் போனாள் ரிஷா.
அளவுக்கதிகமான பாசம், அக்கறை, தன்னை அம்மாவைக் கூட கண்டிக்க விடாத அப்பாவின் அதிகப்படியான செல்லம் இவற்றால் ரிஷா தன்னிஷ்டம் பொலவே நடந்துக் கொள்வாள்.
அவள் விளையாட்டிலும், பேச்சிலும் விகல்பம் இல்லையென்றாலும், உலகத்திற்கேற்ப சூதானமாக பெண்பிள்ளைகள் நடந்துக் கொள்வது எக்காலத்திலும் மிகவும் தேவையன்றோ?
பெரிய பெண்ணாகினாள் ரிஷா. மிக விமரிசையாக விழா எடுத்தார் சண்முகம். ஊரிலிருந்து உறவினர்கள் அனைவரும் வந்திருந்தனர். விழா களைக் கட்டியது.
தன்னிடம் எப்போதும் சீண்டி விளையாடும் தன் மாமன் மகளை பெரியவளான பின் சில நாட்களுக்குப் பின் விழா மேடையில் சேலையில், முழு அலங்காரத்தில் பார்த்த சுந்தர் மனது பித்தானது.
அன்றிலிருந்து சுந்தரின் மனதில் பல்வேறு வண்ணக் கனவுகள் எழுந்தன.


Leave a Reply