Epi 12_Thurathum Nizhalgal_Jansi

அவளது குறும்புகள் ரசிக்கும் படியே இருப்பதனால், அவளை யாருமே அதிகமாய் கண்டிப்பதில்லை. பெண்கள் பேசுவதை வாய்ப் பார்த்து, வாய்ப்பார்த்து அதிகமாய் பேசும் பழக்கமும் அவளுக்கு வந்து விட்டிருந்தது. தாயைப் போலத்தானே பிள்ளை இருக்குமாம். அதில் விதி விலக்கு என்ன இருக்கப் போகிறது?

அரங்கநாதன் மற்றும் சந்திரனின் மனைவியரான சுந்தரி மற்றும் மங்கா இவர்களும் கூட ரிஷாவுடன் மிகவும் அன்பாக இருப்பார்கள். மைதிலியின் திருமணம் முடிந்த அந்த வேளையில்தான் மல்லிகா தன்னுடைய இளைய மகனான 19 வயதான சுந்தரை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

மல்லிகா முன் போலெல்லாம் இப்போது வருத்தப் படுவது இல்லை. இரண்டு மகன்களும் சேர்ந்து உழைத்ததில் குடும்பம் தலையெடுத்து இருந்தது. ஊரிலேயே முதன் முதல் மச்சு வீடு கட்டி இருந்தார்கள். இரண்டு மகன்களும் தாய்க்கு சில நகைகள் செய்து போட்டிருந்தார்கள்.

ஊர் மேய்ந்து, ஓய்ந்து வீட்டிற்கு அடங்கிப் போன கணவர் மட்டிலும் இப்போது திருப்தியே. ஆக இப்போது கொஞ்சம் பெருமிதமாகவே மல்லிகா ஊரில் வலம் வரலானார்.

இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்? என ஊர் மக்கள் அவள் நிலை மாறியது குறித்து வியக்காமல் இல்லை. சுந்தருக்கு அவ்வளவாய் படிப்பு வரவில்லை ஏழாவதோ எட்டாவதோ முடித்து விட்டு அக்கம் பக்கம் கிடைக்கும் வேலைகளை செய்துக் கொண்டு இருந்தான்.

சென்னையில் நிறுவனம் நடத்தி வரும் மாமா மீது அவனுக்கு ஏகத்திற்கும் மதிப்பும் பிரேமையும் உண்டு. சண்முகத்திற்கோ தன் அக்கா மகன்கள் அரங்க நாதனும், சந்திரனும் தான் சொல்லும் விதத்தில் நடந்து பல வழிகளில் வாழ்வில் முன்னேறி நன்றாக இருப்பது குறித்து மிகவும் பெருமையாக இருந்தது. ஆதலால், மற்ற இருவருக்கும் போலவே சுந்தரின் வேலைக்கும் அவரே ஏற்பாடு செய்தார். தன் நிறுவனத்தில் அல்லாது தெரிந்தவரிடத்தில் முதலில் வேலைக் கற்றுக் கொள்ள அனுப்பி வைத்ததோடு அல்லாமல் பேச்சிலர்கள் ரூமில் அவனுக்கு தங்க இடம் பார்த்துக் கொடுத்தார்.

சாப்பாடு மட்டும் அவன் தன்னுடைய அக்கா மைதிலி, அல்லது அண்ணன்கள் வீட்டில் பார்த்துக் கொள்வான். தன்னுடைய அண்ணன்களைப் போலவே தானும் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவனிடம் இருந்தது அவனும் உற்சாகமாக வேலை செய்துக் கொண்டிருந்தான்.

பொதுவாகவே தன் மனதில் உள்ளதை அதிகம் வெளிப்படுத்திக் கொள்ளாத குணம் அவனுடையது. மாநிறமும், வளர்த்தியுமாய், அரும்பு மீசையுடன் இருப்பான். கிராமத்திலிருந்து  நகரத்திற்கு வந்ததன் காரணத்தால் முதலில் அவனால் எல்லோருடனும் சகஜமாக பழக முடியவில்லை.

லீவு நாட்களில் மாமாவின் வீட்டுக்கு வருவதுண்டு. பாவாடைச் சட்டையில் ரிஷாவும் குழந்தைகளும் விளையாடிக் கொண்டு இருப்பதைப் பார்ப்பான். ரிஷா மிகவும் குறும்புக் காரியாக இருந்தாள். அவளுடைய விளையாட்டு அவனையும் மிகவும் கவர்ந்தது. 

அரங்கநாதனுக்கும், சந்திரனுக்கும் 3 வயதான ரிஷாவை பார்த்த போது என்ன உணர்வோ இப்போதும் கூட அதுவே தான். எப்போதாவது தங்கள் குழந்தைகளைப் போல அவளையும் அவர்கள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடுவதுண்டு.

அத்தனை பேராலும் சின்னப் பிள்ளையாகவே செல்லம் கொஞ்சப் படுகிறவள், கொஞ்சம் பழகியதும் சுந்தரிடமும் அப்படியேத்தான் விளையாட ஆரம்பித்தாள். 

அதிகம் பழகாமலிருந்த காரணத்தால் ஆரம்பத்தில் சுந்தரிடம் விளையாட முதலில் தயங்கினாலும், அவனின் அப்பாவித்தனத்தையும், அமைதியான குணத்தைப் பார்த்து அவனை சீண்டி விளையாடுவது ரிஷாவிற்கு தற்போது வாடிக்கையாகிற்று.

அவள் சேட்டைகள் மரியாதைக் குறைவான செயலாக இல்லாமல் விளையாட்டாகவே இருக்க அவளின் சீண்டலை யாரும் பெரிதாக அங்கே கண்டுக் கொள்ளவில்லை. மற்றப் பிள்ளைகளோடு கூட விளையாடுவதைப் போலவே சுந்தரையும் அடித்து விளையாடுவதும், தள்ளுவதுமாக இருப்பாள். சுந்தரும் அதனை ஒன்றும் சொல்லுவதில்லை.

ஒருமுறை தன்னோடு வேலை செய்யும் ஒருவன் யாரோ குறித்து “அவன் ஒரு டுபாகூர்” என்றுச் சொல்லவும், சுந்தருக்கு அந்த அர்த்தம் புரியாமல் பெரிய அண்ணன் பிள்ளைகளான கணேஷ் மற்றும் பிரேமா இருக்கும் போது ரிஷாவிடம் வந்து கேட்க அனைவரும் சேர்ந்து அவனை ஓட்டி எடுத்தனர்.

Pages: 1 2 3 4 5


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!