“அது இருக்கட்டுமே பாப்பு” என அவன் தயங்கவும்,
“நான் காசுக்கு வேலை பார்க்கலை அத்தான்” ஏனோ தன்னையறியாமல் சொல்லி விட்டிருந்தாள்.
“சம்பூ” கணேசன் மகளை அதட்டினார்.
“மாமா அது நம்ம பாப்பு, அவ என் கிட்ட தானே பேசுறா? நான் பார்த்துக்கிறேன். விடுங்க” என்றான்.
“பாப்பு இன்னும் கூட கொஞ்சம் வேலை இருக்கும் அதனாலத்தான் சொல்லுறேன் இருக்கட்டும்” என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே விகாஷ் அந்த டைரியை பிரித்து பார்த்திருந்தான்.
டைரியில் தேதி வாரியாக ஒற்றை ரூபாய் விடாமல் கணக்கு எழுதி இருந்தவள் மீது அவனது மதிப்பு கூடியது. கடைசி பக்கத்தில் இவளது வங்கிக் கணக்கில் ஆனந்த் பணம் போட்டதால் அவள் வங்கிக்கு செலுத்த வேண்டியதிருந்த பணம், மற்றும் ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும் அவள் கணக்கிலிருந்து வெட்டப்பட்டிருந்த சிறிய சிறிய தொகைகள் எல்லாவற்றையும் தேதி வாரியாக குறிப்பிட்டு இருந்தாள்.
யாரும் விகாஷை கவனிக்காதிருக்க அந்த பக்கத்தை மட்டும் புகைப்படமெடுத்தவன் ஆனந்திற்கு அனுப்பினான்.
ஆனந்த் அந்த புகைப்படம் பார்த்து நண்பனுக்கு புன்னகை புரிந்தான். தான் தனது சில பரிமாணங்களால் அவர்கள் மதிப்பில் உயர்ந்துக் கொண்டே சென்றதை அறியாமல் சம்பூர்ணா பேசிக் கொண்டு இருந்தாள்.
“உட்கார்ந்து பேசேன் பாப்பு” அவள் கையை பிடித்து அருகில் இருந்த இருக்கையில் அவளை அமர்த்தியவன்,
“சரி சொல்லு, இன்னும் என்னென்ன வேலைகள் எல்லாம் மீதம் இருக்கு?” எனக் கேட்டான்.
அவன் தொட்ட கரம் இன்னும் குறுகுறுவென இருக்க, தன் போல விபரங்களை சொல்லலானாள். “இப்ப ஓரிரு நாட்கள் கழிச்சு நீங்க ஏதாவது மாற்றங்கள் சொன்னால் தான் காண்டிராக்டர் மாற்றங்கள் செய்வாராம். மதியம் ப்ளம்பிங்க் வேலைக்கு ஆள் வரேன்னு சொல்லிருக்காங்க. கரண்ட் வேலை நேற்றே முடிஞ்சிருச்சு அத்தான்.”
“அப்படின்னா அப்பா சொன்ன அன்றைக்கே கிரகபிரவேசம் செய்திடலாம் தானே?”
கேட்டவனுக்கு பூம் பூம் மாடாக தலையாட்டினாள்.

