Epi 14_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அது எவரானாலும் பிறனின் வெளியில் தெரியும் இறக்கைகளை பிய்த்து போடுவது மட்டும் தான் முடியும், மனதிற்குள்ளாக தினம் தோறும் முளைக்கும் இறகுகளை யார் பிய்ப்பதாம்? 

சம்பூர்ணா இவ்வாறாகத்தான் தனக்கு அனுமதிக்கப்பட்ட வட்டமோ சதுரமோ அதற்குள்ளாக தன்னை வளர்த்துக் கொண்டாள். தனக்குத் தானே தாயாக மாறுவதெல்லாம் தனி வகையான கொடுமைதான். ஆனால், அந்த கொடுமைகளுக்கு தற்காலிக விடுதலை கொடுக்கும் நபர் அவளது முத்துராஜ் மாமா. ஊருக்கு செல்லும் போதோ இல்லை இங்கே அவர் வந்துச் செல்லும் போதோ அவளை கணேசன் ஒரு வார்த்தையோ பார்வையோ கடுமையாக பார்க்கவியலாது.

“எம்மருமவ அருமை உனக்கு தெரியலை.என் தங்க குட்டிடா அவ” என்பார்.

மாமாவின் சீராட்டலில் சம்பூர்ணா தனது மகிழ்வை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிடினும் அவர் வந்துச் செல்லும் போதெல்லாம் அவளது மனதிற்குள்ளாக அத்தனை இதமாக இருக்கும். அவளை பொருத்தவரைக்கும் அவர் அவளுக்கு இரண்டாவது அம்மா அவ்வளவுதான் அவ்வளவேதான்.

சம்பூர்ணா இளநிலை பட்டதாரி படிப்பை முடித்த உடன் அந்த இருபத்தியோரு வயதிலேயே அவளுக்கு கணேசன் திருமணம் செய்விக்க முயன்ற போது முத்துராஜ் மாமா தான் அவளுக்காக வந்து பேசினார். அடுத்து ஆசிரியை படிப்பிற்கு அவளை படிக்க வைக்கவும் அவர்தான் காரணம்.

“படிக்க வேண்டுமானால் மகள் ஆசிரியையாக வேண்டுமானால் ஆகிக் கொள்ளட்டும் வேறெதுவும் கூடாது” என கணேசன் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்திருக்க, தனக்கு படிக்க கிடைத்ததே பெரிய விஷயம் இதில் என்ன படிப்பென்றால் என்ன? என சம்பூர்ணா கிடைத்ததில் திருப்தி கொண்டாள். அது போக ஆசிரியை வேலை எந்த விதத்திலும் மட்டமானதில்லையே?

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!