இவள் நினைத்தது போல இதுவரை எப்போதாவது நடந்திருக்கின்றதா என்ன? இப்போது நடக்க?
அவள் வைத்திருந்த அந்த அலைபேசியின் அலாரம் ஒலிக்க எழுந்து உளுந்தை அரைக்கப் போனாள். ஊற வைத்திருந்த உளுந்தின் தண்ணீரை முழுக்க வடித்து அதில் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, தோல் நீக்கிய இஞ்சியை துண்டுகளாக வெட்டி போட்டவள் அரைக்க வேண்டி மிக்ஸியில் ஜாரை வைக்கையில் அங்கே ஆனந்த் வந்து நின்றான்.
“குட்மார்னிங்க் பாப்பு” என்றவன் அந்த ஷார்ட்ஸ் மற்றும் டி ஷர்ட்டில் இன்னும் இளமையாக தோற்றமளித்தான். அந்த முகத்தின் மலர்ச்சியில் இவளுக்கும் தானாகவே முறுவல் வந்து சேர்ந்தது.
“காஃபி கலக்கட்டுமா அத்தான்?”
“நான் கலக்கிக்கிறேன்மா, சர்க்கரையும் காஃபியும் எங்கே இருக்கு எனச் சொல்லு”
அப்பா வந்து எதையாவது சொன்னால் என எண்ணி தயங்கியவள்,
“எதுக்கு அத்தான் இந்த வேலைலாம்? … நானே”
சொன்னவளை இடைமறித்து
“காஃபித்தூள், சர்க்கரை…” என மறுபடியும் கேட்க, அவைகள் இருக்கும் இடத்தை சுட்டிக் காட்டினாள். எடுத்து கலக்க ஆரம்பித்தவனோ இவளிடம், “உனக்கும் காஃபி கலக்கவா?” கேட்டான்.
“இல்லை அத்தான் நான் டீ குடிச்சுட்டேன்”
“ஓகேமா” என்றவனாக தனக்கு காஃபி கலந்து முன்னறைக்குச் சென்றான்.
காலை நேர பரபரப்பில் பிரசன்னா இங்குமங்குமாக எறிந்திருந்த புத்தகங்கள் அந்த சோஃபாவில் இருக்க, காஃபியை டேபிளில் வைத்து விட்டு அவற்றை எடுத்து அடுக்கினான். கணேசனும் அந்த நேரம் எழுந்து வர அதைப் பார்த்து பதறினார்.
“பொறு தம்பி எடுத்து வைக்கச் சொல்லுறேன், சம்பூ” என இவர் குரல் கொடுத்த நேரம் மிக்ஸியின் சத்தம் எழ, அவளுக்கு இவர் அழைத்தது கேட்டிருக்காது என்பது திண்ணம்.
“இருக்கட்டும், சும்மா உட்காருங்க மாமா” அவரை கைப்பிடித்து இழுத்து அமர வைத்தான்.
“இது ஒரு சின்ன விஷயம், இதுக்கு போய் வேலையா இருக்கிறவளை எதுக்கு தொந்தரவு செய்யணும்?” என கேட்க அமைதியானார்.
அவருடன் ஆனந்த் காஃபி அருந்திக் கொண்டே அளவளாவ, இருவரும் மதியம் சென்று முத்துராஜை அழைத்து வருவது குறித்து பேசிக் கொண்டனர்.

