“நீங்க மாமாவை அழைச்சுட்டு வர புறப்பட்டதும் தான் சமைக்க ஆரம்பிப்பேன் அத்தான். அப்பதான் சூடா இருக்கும்.”
“மாமாக்குன்னா ஸ்பெசல் சாப்பாடு என்ன? அதுவும் சூடா இருக்கணுமாமே?” எனவும் மலர்ந்து புன்னகைத்தாள்.
“என் மாமால்ல?”
“சரி அப்புறம் உங்க சித்தி, மாமாவெல்லாம் வருவாங்களா பாப்பு?”
“இல்லை அத்தான், சின்ன வயசில அப்பா எங்களை பார்த்துக்க சொல்லிருவாங்களோன்னு விலகினவங்கதான். அப்புறம் என்னவோ எங்களுக்கும் அவ்வளவா ஒட்டலை. அப்பா பக்கம் உறவினர்களும் அப்படித்தான்.”
“ம்ம்”
“பழகிருச்சு அத்தான்.”
“ம்ம்”
“என்னிக்காவது போன் பேசுவாங்க, ஊருக்கு போனா வீட்டுக்கு போயிட்டு வருவோம்”
“ம்ம்”
உண்டு முடித்தவள் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சமையலறை செல்ல அவளது அலைபேசி இசைத்தது. ஆனந்த் அவளது அலைபேசியை எடுத்து பார்த்தான். அலைபேசியின் புகைப்பட பிண்ணனியில் அக்காவும் தம்பியும் புன்னகைத்திருக்க, அலைபேசி யாரோ ப்ளம்பர் அவளை அழைப்பதாக சொன்னது.
தன்னருகில் வந்து நின்றவளுக்கு அலைபேசியை கொடுத்தான்.
“ஹாஞ்சி கப் தக் ஆவோகே” (எப்ப வருவீங்க?)
“…”
“தஸ் மினட்? சலோ மை பீ போஹச்சீ” (பத்து நிமிடங்களிலா? சரி நானும் அந்நேரம் அங்கிருப்பேன்)
அலைபேசி இணைப்பை துண்டித்து வைத்தவள் ஆனந்தை பார்த்தாள்.
“வீட்டில் சின்னச் சின்ன வேலைகள் மீதமிருக்கு அத்தான். பிளம்பர் வர்றாங்க”
“சரி வா போகலாம்” தனது வீட்டின் சாவியை எடுத்துக் கொண்டு மாமாவிற்கு சொல்லியவனாக அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டான்.

