Epi 14_ Manam Virumbudhe unnai unnai_Jansi

“எதற்காக பெண் மெனக்கெட்டு படித்து வேலைக்கு செல்ல வேண்டும்? நல்ல மாப்பிள்ளையாக பார்த்து கட்டி வைத்து விட்டால் ஆயிற்று. அவர் அவளை பார்த்துக் கொள்வார்.” என்றெல்லாம் அப்பா பிறரோடு பேசிக் கொண்டு இருந்ததை அவள் பலமுறைகள் கேட்டிருக்கின்றாள்.

அப்போதிருந்தே அவளது மனதிற்குள்ளாக ஒரு வைராக்கியம். பெண்ணானவள் பொருளாதார சுதந்திரம் இல்லாத போதுதான் எல்லாவற்றையும் சகித்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. தனது வாழ்க்கையில் கணவனே ஆனாலும் கூட எந்த ஆணையும் சாராது இருக்க வேண்டும். படிப்பை முடித்து, வேலையில் சேர்ந்து தன் சொந்தக் காலில் நின்று… அப்பப்பப்பா அவளுக்கும் தான் எத்தனை கனவுகள்?

‘எல்லா கனவுகளும் என்னவாயிற்று? கண்ணுக்குத் தெரியாத கிருமி கொரோனாவால் கானலாகிற்று. படித்து முடித்து வேலை தேடும் நிலையில் இருக்கின்றவர்களுக்கு எப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலை…ம்ப்ச்ச்’ தனக்குள்ளே சலித்துக் கொண்டாள்.

‘வேலைக்குச் சென்று சில வருடங்கள் சுய சம்பாத்தியம் கொஞ்சமாவது பணம் சேர்த்து, அலுவலகத்தில் நட்புகளுடன் சேர்ந்து தான் விரும்பும் இடங்களை சுற்றிப் பார்க்க சென்று வந்து என கழிந்த பின்னர் திருமணம் எனும் தளைக்குள் சிக்கிக் கொள்ளலாம் என எண்ணினாள்… ம்ப்ச்ச்’ மறுபடி சலிப்பு.

பிறகென்ன? தில்லி வந்து இத்தனை வருடங்களாகியும் இன்னும் தாஜ்மஹல் கூட பாராத குடும்பத்தினர் இவர்களாகத்தான் இருக்க வேண்டும்!!

ஏற்கெனவே சம்பூர்ணாவை இரண்டு மாப்பிள்ளை வீட்டார் பார்த்து சென்றிருக்க, மூன்றாவதாக வருகின்றோம் எனச் சொன்னவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வருவதாக இருந்தனர். மகளின் உடை அணிகலன் என கணேசன் செய்யும் அலப்பரையில்தான் மாப்பிள்ளை வீட்டினர் விருப்பமில்லை என சென்று விடுகின்றனர் என அவருக்கு இன்னும் கூட புரியாதது விந்தைதான்.

எப்படியோ இந்த மூன்றாவது மாப்பிள்ளையும் வேண்டாமெனதான் சொல்லப் போகின்றான். முத்துராஜ் மாமாவிடம் கொஞ்சம் பேசி இன்னும் இரண்டு வருடங்களாவது அப்பா இந்த திருமண வேலைகளை நிறுத்தி, தன்னை தொடர்ந்து வேலைக்கு அனுப்ப அனுமதி வாங்கித்தர செய்ய வேண்டும் என எண்ணி இருந்தாள். அறியா பெண் மனதில் எத்தனையோ சிந்தனைகள்.

Pages: 1 2 3 4 5 6 7

error: Content is protected !!