சொன்னது போல இவர்கள் சென்ற சில நிமிடங்களில் பிளம்பர் வந்து சேர்ந்தார். எந்தெந்த அறைகளில் எல்லாம் என்னென்ன பிரச்சனை? என மனப்பாடமாக சொல்லிக் கொண்டு வேலை வாங்கிக் கொண்டு இருந்தவளை உன்னிப்பாக கவனித்தான்.
இத்தனை வேலைகளை செய்து விட்டு பணத்திற்காக செய்யவில்லை என முகம் காட்டுகின்றவளுக்கு தான் திரும்பச் செல்லும் முன்பாக எதையாவது வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என அவனுக்கு தோன்றியது.
பிளம்பர் எல்லாவற்றையும் ஒரு தாளில் எழுதிக் கொண்டு தான் தேவையானவற்றை வாங்கிக் கொண்டு வருவதாக சென்று விட இவர்கள் இருவரும் தனித்து இருந்தனர்.
ஆனந்த் அந்த நவீனமாக வடிவமைக்கப் பட்ட முதல் வீட்டைத் தாண்டி ஊர் வீட்டை நினைவுப் படுத்தும் அந்த இரண்டாம் வீட்டில் போய் அமர்ந்திருந்தான்.
அந்த பெரிய ஊஞ்சல் அதில் அமர்ந்து பார்க்கும் போது தெரியும் அந்த அழகான வாயில் அதனடுத்து இருக்கும் துளசி மாடம் என எத்தனை அழகு!
“வா பாப்பு” அந்த பெரிய ஊஞ்சலில் அவளை அமர்த்திக் கொண்டான்.
அமைதியாக அமர்ந்திருந்தவள், “உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காம போயிரும், நல்லா திட்டப் போறீங்கன்னு பயந்தேன் அத்தான். நல்ல வேளை…” பெருமூச்சு விட்டாள். முன்பு வீம்பிற்கு செய்தது இப்போது அபத்தமாக தோன்றியதல்லவா? எனவே மனதை மறையாமல் உரைத்திருந்தாள்.
லூசா நீ? என்பது போல அவளை பார்த்தவன்,
“உன்னை எதுக்கு திட்டப் போறேன்? வீடு அமர்க்களமா இருக்கு…உனக்கு நிறைய கற்பனை வளம், அழகுணர்ச்சி எல்லாம் நிறையவே இருக்கு. அதுக்கு ஏற்றாற் போல ஏதாவது படிச்சு வேலைக்கு போகலாமில்லை?” எனக் கேட்டவனுக்கு
அதெல்லாம் படித்து வெளியே இரவு பகல் பாராமல் வேலை செய்ய எனக்கு அனுமதி இல்லை எனச் சொல்ல முடியாமல் மென்று முழுங்கினாள்.
“இல்லைத்தான் எனக்கு இதுதான் இந்த டீச்சர் வேலைதான் ரொம்ப பிடிச்சிருக்கு… அது போக…”
“…”
“எனக்கு இப்படி எல்லாம் வேலை செய்ய தெரியும்னு எனக்கே இப்பதான் தெரியும்… வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி அத்தான்” உளமாரச் சொன்னாள்.
பேச்சுக்கள் ஓய்ந்து அமைதியான ஒரு தருணத்தில் ஆனந்த் தான் ஆரம்பித்தான்.
“மன்னிச்சுக்கோ பாப்பு, நான் கொஞ்சம் முன் யோசனையோடு இருந்திருக்கணும். அன்னிக்கு நான் அப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.”
இருவரும் பேச தவிர்த்த நிகழ்வு குறித்த தயக்கத்தை போட்டு உடைத்து பேச ஆரம்பித்து விட்டிருந்தான்.
தொடரும்

