“அத்தான் சாரி சாரி” சம்பூர்ணா பதறினாள். அவள் அவனை அப்படித்தானே பெண் பித்தனாகத்தானே எண்ணி இருந்தாள் அதனால்தான் இந்த மன்னிப்புக் கோரல்… எனினும் தொடர்ந்தாள்.
“அன்றைக்கு முதலில் திகைச்சேன் அத்தான்”… தயங்கினாள்
“உன்னோட கண்களில் அந்த திகைப்பு… அதை பார்த்ததும் எனக்கு அம்மா நினைவு வந்தது பாப்பு. உன் இடத்தில் அம்மா இருந்தாலும் கூட அப்படித்தானே நினைச்சிருப்பாங்கன்னு மூஞ்சிலேயே செருப்பால அடிச்சது போல அவமானமா உணர்ந்தேன்” எனச் சொல்ல அவள் தொடர்ந்தாள்.
“அந்த நிகழ்வு நிகழ்ந்து அடுத்து சில வருடங்கள் கழிய குறிப்பிட்ட வயது வரைக்கும் எல்லாமே தப்பா தோணுச்சு, அப்புறமா கொஞ்சம் தெளிவு கிடைக்கவும் அச்சோ என்ன அறிவுக்கெட்டத்தனமா நடந்திருக்கிறோம்? என தோன்றுச்சு.
“…”
“அது எப்படின்னா? …ம்ம் எல்லோருக்குமே தனிப்பட்ட அந்தரங்கமான விஷயங்கள் என்று இருக்கும். அதில் தலையிடக் கூடாதென புத்தி வந்ததும் தான்… அது அத்தானோட ப்ரைவசி நாமதான் நேரம் பார்த்து அழைச்சு இருந்திருக்கணும் என என்னை நினைச்சா எனக்கே அவமானமா இருந்தது.அது போக….”
“…”
“உங்களை தப்பா நினைச்சேன் தான் இனி நினைக்க மாட்டேன் அத்தான்.”
“ஹப்பாடா நன்றி பாப்பு” நெஞ்சை நீவிக் கொண்டு எழுந்தான். பிளம்பர் உள்ளே வந்தவர் குரல் கொடுக்க, சம்பூர்ணா ஊஞ்சலில் இருந்து எழுந்துச் சென்று பார்வையிட்டு வந்தாள்.
ஆனந்த் மறுபடியும் ஊஞ்சலில் அமர்ந்திருக்க உள்ளே வந்தவள் அவன் எதிரில் நின்று வெகு தயக்கத்தோடு பேசினாள்.
“அத்தான் இது உங்க பர்சனல்… இருந்தாலும் எனக்கு தெரிஞ்சாகணும்.”
“ம்ம்”
“உங்களுக்கும் லிண்டாவுக்கும் ப்ரேக்கப் ஆனதுக்கு எந்த விதத்திலாவது நான் காரணமா?”
கேட்டவளுக்கு பதில் சொல்லாமல் இருந்தான்.

