அக்கம் பக்கம் சில தெரிந்தவர்களை கணேசன் விழாவிற்கு அழைத்து இருந்தார். மற்றபடி ஆனந்த் சார்ந்த நபர்கள் அங்கு யாரும் கிடையாது அல்லவா? விகாஷ் தனது வேலை இன்னும் முடியவில்லை இப்போதைக்கு டெல்லிக்கு வர முடியாது எனவும் தான் மும்பையில் இருந்து மிலானுக்கே பயணமாகி விடுவதாக திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தான்.
பூஜைகள் ஆரம்பிக்கும் முன் வரையில் வேலைகளை கவனித்துக் கொண்டு பழைய சுடிதாரில் திரிந்துக் கொண்டு இருந்த சம்பூர்ணா அடுத்த ஒரு மணி நேரம் கழித்து ஒரு லினென் சாரியில் ஒரு கையில் வாட்ச் மறு கையில் சில தங்க வளையல்கள், கழுத்தில் சின்னதும் பெரியதுமாக இரண்டு செயின்கள், குட்டியாக கழுத்தை ஒட்டிய நெக்லஸ் என புறப்பட்டு வர இவனால் அவள் மீதிருந்து கண்களை அகற்ற முடியவில்லை.
சில ப்ரொஃபஷன்கள் (தொழிற்சார்ந்தோர்) அவர்களது பணி சார்ந்தோ, அறிவு சார்ந்தோ மிக ஆளுமையாக, அழகாக இருப்பர். குறிப்பாக மருத்துவர்கள், ஆசிரியர்கள் இந்த வகைக்குள் அடங்குவர். சம்பூர்ணாவும் அன்று அப்படித்தான் இருந்தாள். அந்த நிமிர்வு, அந்த தன்னம்பிக்கை அவளின் சுய மரியாதை குணம் எல்லாம் சேர்ந்தது தானே அவள்? அதனால் அந்த உடையும் அலங்காரமும் சேர்ந்ததும் அவள் இன்னுமின்னுமாய் மிளிர்ந்தாள்.
“பாப்பு அழகா இருக்க” என ஆனந்த் சொல்லவும் அவளால் மிக இனிமையாக அதற்கேற்ப “நன்றி அத்தான்” எனச் சொல்லி நகரவும் முடிந்தது.
“மாமா இந்த சேலை எனக்கு நல்லா இருக்கா? நீங்க எனக்கு வாங்கிட்டு வந்துதான்” என தனது தந்தை முன் போய் நின்றவளைக் கண்டு மறுபடி ஆதங்கம்.
‘அடுத்த முறை பாப்புவுக்கு சேலை வாங்கி வர வேண்டும்’ மனதில் குறித்துக் கொண்டான்.

