“சாரி அத்தான் நான் கேட்டிருக்க கூடாதுதான், விகாஷ் அண்ணா சில விஷயங்கள் பகிர்ந்துக் கொண்ட போது எனக்கு அப்படி ஒரு சந்தேகம். நேத்தில் இருந்து அது ஒரு பக்கம் எனக்கு குற்ற உணர்வா இருக்கு… அதனாலத்தான் கேட்டேன். சொல்ல விருப்ப படலைன்னா விட்டுருங்க.”
“ம்ம்… அதற்கு நீ காரணம் இல்லை பாப்பு.”
கேட்டதும் அவளிடம் சொல்ல முடியாத ஆசுவாசம்.
“ஆனால், அந்த சம்பவத்திற்கு பின்னே எனக்கு ஒரு சில கண் திறப்புகள். லிண்டாவிடம் திருமணம் செய்துக்கலாமென கேட்டேன்… அவள் விருப்பபடவில்லை…. அவள் என்னை திருமணம் செய்ய விரும்பாததற்கான காரணம் தெரிந்துக் கொண்ட பின்னர் என்னால் அந்த உறவை தொடர முடியவில்லை. அதனால்தான் பிரிந்தோம்.”
ஆவென கண் விரித்து பார்த்து இருந்தவளை நோக்கி புன்னகைத்தான்… அந்த புன்னகையில் தான் எத்தனை வலி?
“எங்கள் பிரேக்கப்பிற்கு நீ காரணம் அல்ல… என்ன புரியுதா?”
தலையாட்டினாள்.
“ஆனால், என்ன காரணம் என கேட்டுவிடாதே… என்னால் சொல்ல முடியாது. செத்தாலும் யாரிடமும் அதை பகிர முடியுமா? என எனக்கு தெரியவில்லை” முனகிக் கொண்டான்.
அதன் பின்னர் அதே பேச்சை இருவரும் தொடரவில்லை. மனசஞ்சலங்கள் தீர்ந்து கண்ணோடு கண்கள் பார்த்து இருவரும் புன்னகைக்கும் நிலைக்கு வந்து இருந்தனர். சம்பூர்ணாவிற்கு பல காலம் கழித்து ஒருவகையான மனநிறைவு.
‘இது இப்படியே இருந்து விட்டால் போதும் கடவுளே’ என எண்ணிக் கொண்டாள்.
‘இவ்வளவு மட்டும் போதுமா என்ன?’ என அவளிடம் கேட்ட கடவுள் புன்னகைத்தார்.

