சற்று நேரத்தில் வேலைகள் முடிந்து திரும்ப வந்தனர். அப்பாவை அழைத்து வர ஆனந்த் புறப்பட்டான். கணேசனும் அவனுடன் புறப்பட்டுச் சென்றார். அவர்கள் புறப்படவும் சம்பூர்ணா தனது சமையலறையில் இராஜாங்கம் செய்ய புறப்பட்டாள்.
சில மணி நேரங்கள் கழித்து முத்துராஜ் மாமாவுடன் வீடு திரும்பிய ஆனந்தையும் கணேசனையும் கண்டுக் கொள்ளாமல் வாசல் முதலாக “மாமா, மாமா, மாமா” என திரிந்த சம்பூர்ணாவை இது எனக்கு பழக்கம் தான் என்பது போல கணேசன் பார்த்துச் செல்ல, ஆனந்திற்கோ உள்ளும் புறமுமாய் பற்றிக் கொண்டது.
‘தான் வந்த அன்றைக்கு கதவை திறந்து சம்பிரதாயமாக வரவேற்று தான் உள்ளே வருகின்றேனா இல்லையாவென கவனிக்காமல் முன்னே சென்றவள் தானே இவள்?’ என தனது பாப்புவின் மேல் கோபம் வந்தது.
தனக்கு முன்பாக அமைதியே உருவமாக இருந்தவள் இவள் அல்ல என்பது போல அவள் இருந்தாள். கணேசனும் நண்பன் முன்பாக மகளை ஒரு வார்த்தையும் சொல்ல முடியவில்லை.
அவர்களது பாசப் பறிமாற்றத்தில் ஆனந்திற்கு தான் தனித்து விட்டது போலொரு எண்ணம் தோன்றியது உண்மை. எதையோ இழந்தாற் போல உணர்ந்தான்.
பிரசன்னா வந்து, “மாமா ஐ மிஸ் யூ” வென அவரை கொஞ்சவும் அவர் தான் அவனுக்காக வாங்கியவைகளை கொடுக்க அமர்ந்து முறுக்குகளை நொறுக்க ஆரம்பித்தான்.
சோஃபாவில் அமர்ந்து தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் பாப்புவையே ஆனந்த் பார்த்திருக்க மடியில் ஒரு கனம். என்னவென்று பார்த்தால் பிரசன்னா இவன் மடியில் படுத்து முறுக்கை கறுக் முறுக்கென நொறுக்கிக் கொண்டு இருந்தான்.
“டேய்” அவன் வாயை பொத்தினான் ஆனந்த்.
ஏற்கெனவே வாயில் நொறுக்கிக் கொண்டு இருந்தவைகளை நிதானமாக தின்று முடித்த பிரசன்னா ஆனந்தின் கையை தனது வாயில் இருந்து எடுத்து அவன் மடியில் படுத்தவண்ணமே அவனிடம் பையில் இருந்த முறுக்கு ஒன்றை எடுத்து நீட்டினான்.
“அத்தான் இட்ஸ் வெரி வெரி டேஸ்டி.. யம்மி.. டு யூ வாண்ட் ஒன்” (முறுக்கு ருசியா இருக்கு வேணுமா அத்தான்?)
“வேண்டாம்டா” முனகினான்.

