Epi 3_ Manam Virumbudhe unnai unnai_Jansi

அத்தியாயம் 3_மனம் விரும்புதே உன்னை உன்னை_ஜான்சி

அத்தியாயம் 3

சாயங்கால நேரம் அப்பா வீட்டிற்கு வரவும் சம்பூர்ணா கதவைத் திறந்து அவரை வரவேற்றாள். கதவை திறக்கும் சப்தம் மற்றும் அப்பா வேலையில் இருந்து திரும்ப வந்துவிட்டதான சப்தங்கள் கேட்டதும் பிரசன்னா எழுந்து தனது வீட்டு பாடங்களை எழுத ஆரம்பித்தான்.

சம்பூர்ணா அதுவரை தவிர்த்து கொண்டிருந்த அந்த பேச்சு அவர்களின் இரவு உணவின் போது வந்து விட்டது.

“சம்பூ ஆனந்த் தம்பி உனக்கு நிறைய புகைப்படங்கள் அனுப்பி வைத்து இருப்பதாக சொன்னாரே? உனக்கு அவை கிடைத்தனவாம்மா?” என மகளிடம் கேட்டார்.

மறுக்க வழியில்லாமல் “ஆம்” என அவளும் அவருக்கு பதிலிறுத்தாள்.

“சம்பூ ஆனந்த் தம்பி வீட்டு வேலையை நீ தான் பொறுப்பேற்றுக் கொள்ள…” என தகப்பன் ஆரம்பிக்கும் முன்பாகவே சம்பூர்ணா அவரிடம்,

“அப்பா நான் அடுத்ததாக வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். வேலை கிடைத்ததும் வேலைக்கு போக வேண்டியது இருக்கும். இந்த சூழ் நிலையில் என்னால் இந்த வேலைகள் எல்லாம் செய்ய இயலாது. தவிரவும் கூட எனக்கு வீடு கட்டுவது, இன்டீரியர் வேலைகள் எல்லாம் குறித்து  என்ன தெரியும்?  ஏதோ ஆனந்த் அத்தான் தான் புரியாமல் சொன்னாங்கன்னு நான் எதையாவது செய்யப் போக அது தவறாகப் போயிருச்சுனா அவங்களுக்கு தான் பணம் நஷ்டம். பேசாம நல்ல வேலை தெரிந்த ஆளா பார்த்து நீங்களே வேலையை ஒப்படைங்க அப்பா” என்றாள்.

கணேசனோ மகளிடம், “அச்சச்சோ அது அப்படி இல்லைமா. வேலை தெரிஞ்ச  எல்லாருமே ஏற்கெனவே இருக்கிறார்கள். ஆனால், உரிமையா அவங்களை வேலை வாங்கதான் ஆள் வேணும் என்று தம்பி அபிப்ராயப்படுகின்றார். நீ நம்ம வீட்டு பொண்ணு, நம்ம வீடு ஆளு ஒருத்தரு இருந்தா தானே அவர்களும் பொறுப்பா வேலை பார்ப்பாங்க. எப்படியும் இன்னும் 2 வாரத்தில் இப்ப நீ பொறுப்பேற்று இருக்கிற உன்னோட வேலை முடிய போகுது. கொஞ்ச நாள் இந்த வீட்டு வேலை முடியும் வரைக்கும் மேற்பார்வை பார்த்துக்கோம்மா. அதற்கப்புறம் மறுபடியும் வேலைக்கு போம்மா”

“…”

“ஏதோ ஒரு ஐந்தாறு மாதங்கள் ஆகுமாம், இவ்வளவு கூட நாம செய்யலைன்னா எப்படி?”

“…..”

“நாங்க இரண்டு பேரும் கூட பொறந்தவங்க போல பழகினவங்க, எங்க புள்ளைங்களும் ஒருத்தருக்கொருத்தர் உதவுனா எங்களுக்கு சந்தோஷம்.”

“………..”

“முத்துராஜ், சாம்பவி அண்ணி இவங்க எல்லாம் நமக்கு சொந்தத்தை விட பெரிய சொந்தம். அவங்க எப்பவுமே நம்ம கஷ்டம் நஷ்டத்தில் தோளோடு தோளாக நிற்கிறவங்க. இப்ப அவங்களுக்கு ஒரு உதவி தேவைங்கிறப்ப நாம செஞ்சு தானே ஆகணும். என்ன சொல்லறம்மா?”

 என இவளது எதிர்ப்பையும் மௌனத்தையும் கண்டுக் கொள்ளாமல் தனது கருத்தை வலியுறுத்தினார். தந்தை இத்தனை சொன்ன பின்னர் அவளும் தான் எப்படி எதிர்க்க? அவர் சொன்னதில் ஒவ்வொரு வார்த்தையும் உண்மையல்லவா?

தந்தையின் வற்புறுத்தலால் தனது வேலையை புறம் தள்ளி, ஆனந்த் அத்தானின் வேலையை சிரமேற்க அவள் ஆயத்தமானாலும் கூட அவனுக்காக எந்த வேலையும் செய்ய அவளுக்கு மனம் ஒப்பவில்லை.

Pages: 1 2 3 4


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!